Sunday, October 28, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள் - 5

பாடல்களுக்காக வெற்றி பெற்ற திரைப்படங்கள் உண்டு தமிழ்த் திரையில். பாடல்கள் மட்டுமே திரைப்படம் என்ற காலமும் இருந்தது. இப்படிக் காலத்தால் அழியாத பல பாடல்களில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பதிவு செய்து வருகிறேன். இதுவே இந்த வரிசைத் தொடரில் நிறைவுப் பகுதி.

11. சரித்திரக் கதாபாத்திரங்களைத் திறம்படக் கையாளும் நடிகர்கள்  மிகக் குறைவு. நடிகர் திலகம் அவர்களின் நடிப்பைப் பற்றி நான் சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. மிகை நடிப்பு என்று சிலர் இன்று விமர்சிக்கிறார்கள். நடிப்பென்றால் என்னவென்று இலக்கணம் வகுத்த அந்த ஆசிரியன், இத்தனை இருக்கிறது என்று காண்பித்தால் தான், அதில் சிறு பங்காவது சென்றடையும் எனக் கருதியிருக்கலாம். அவர் தான் நமக்கு ராஜராஜ சோழன். அவர் தான் நமக்கு வீர பாண்டிய கட்டபொம்மன். அவரே வ.உ.சி.  எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் அதில் தன் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை அந்த மா பெரும் மனிதன். அவர் ஏற்ற சரித்திர நாயகர் வேடங்களில் ஒன்று தான் கர்ணன் எனும் ஏற்ற மிகு பாத்திரம்.      
 
கர்ணன் திரைப்படம் பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த வெற்றிக் காவியம். அந்தப் படைப்பின் வீச்சு நாற்பத்தெட்டாண்டுகள் கழிந்தும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. படத்தின் கதை இந்தியாவின் ஆன்மாவுக்கு நெருக்கமான மகாபாரதக் கதை. கதையின் தலைவன் கண்ணனல்ல. கன்னன், ஆம் கர்ணன். நட்புக்கு இலக்கணம். வீரத்தின் விளைகளம். பெற்ற தாயிலிருந்து படைத்த தெய்வம் வரை அவனை வஞ்சித்தது துயரம். தீங்கு கருதாத நல்லான் ஒருவன் தன் நட்புக்காகத் தன் சொந்தங்களையே எதிர்க்கிறான். தோற்கும் விதி அறிந்தே தோற்கிறான். ஆட்டத்தின் விதிகள் அவன் நிர்ணயித்தது அல்ல. ஆட்டத்தின் வெற்றியோ தோல்வியோ அவனது அல்ல. ஆனால் ஆட்டத்தில் அதிகம் இழந்தது அவன் தான். துன்பகரமான அவன் வாழ்வில் அவன் கண்டதெல்லாம் அவமானமும் ஏமாற்றமும். எனினும் அவன் ஏற்றத்துக்கு ஒரு குறையுமில்லை. வீரம், மானம் என்ற இரு பண்புகளின் குவியலாகவும், நட்பின் சிகரமாகவும், தன் மரணத்தின் மூலம் கண்ணனையே யுதிட்டிரன் ஏசும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் கர்ணன். அந்தக் கர்ணனின் சிறப்பைக் கண்ணெதிரே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். கர்ணன் என்றால் எப்படி நடிகர் திலகமோ அப்படியே கண்ணன் என்றால் திரு. என்.டி.ராம ராவ் அவர்கள். அவர் உருவமும் நடிப்பும் அந்தக் கண்ணனின் சாதுர்யத்தை நம் கண் முன்னே கொண்டு வருபவை.

கர்ணன் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாமே இனிமையானவை. வாடா வட இந்திய இசையை அடித்தளமாக கொண்டு சமைக்கப் பட்டவை. திரையிசைச் சக்கரவர்த்தி தானே என்று என்று திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டியம் கூறியவை. அவற்றில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. முதல் பாடல், "கண்கள் எங்கே" என்ற இனிய பாடல். திருமதி. பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் அமைந்த தெய்வீக ராகம். காதலுக்கே உரிய சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த இனிய ராகம். கர்ணனைக் கண்ட சுபாங்கி பாடும் பாடல். சுபாங்கியாகத் திரையில் தோன்றுபவர் மறைந்த திருமதி. தேவிகா அவர்கள். இனிமையான அந்தப் பாடலில் எனக்குப் பிடித்த சில வரிகள். 
 
அவனைக் கண்ட பின் அவள் கண்களைக் காணவில்லையாம். அவள் காண்பதெல்லாம் அவனாகவே இருக்கின்றனவாம். அவள் அறிவும் மனமும் பேசிக் கொள்வதாகவே நமக்குத் தோன்றும். அவள் அறிவு கேட்கிறது 
"கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?"
அவள் மனது சொல்கிறது
"கண்ட போதே சென்றன அங்கே..
 கால்கள் இங்கே மேனியும் இங்கே ...
காவலின்றி வந்தன மேனியும் இங்கே.."

 கண்களே உடலுக்குக் காவல் என்ற அழகிய சிந்தனை நம்மை வியக்க வைக்கிறதென்றால், சுபாங்கியின் பாத்திரத்தை இரு வரிகளில் கோடிட்டுக் காட்டி, கண்ணதாசன் நம்மைக் கட்டிப்போடுகிறார். அந்த வரிகள்,
"இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் 
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்"
எந்தப் பிறப்பின் கேள்வி அவனைத் துன்புறுத்தியதோ அதை அவள் பொருட்படுத்தாதவள் என்றும் அவனைத் தன் தலைவனைக் கொள்பவள் என்றும் உணர்த்தும் அந்தப் பாடலை "https://www.youtube.com/watch?v=mrzVWyWe7E8" காணலாம்.


அதே கர்ணன் திரைப்படத்தில் கர்ணனின் வாழ்வையும் அவன் ஏற்றத்தையும் சொல்லும் பாடல் எனக்குப் பிடித்த தலையாய பாடல். சீர்காழி கோவிந்தராஜனின் ராஜகம்பீரக் குரலில் கண்ணனின் எண்ணவோட்டமாக வரும் தேன்தமிழ்ப் பாடல். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்று கவியரசு நமக்கு எடுத்தோதிய பாடல். இந்திரன் அருளிய சக்திகணையை அந்த மாயவன் தடுத்து அர்ச்சுனனைக் காப்பாற்றுகின்றான். தன் ஒரு அத்தை மகனைக் காத்து விட்டு, அதே அத்தையின் மூத்த மகனை அழிக்க யோசனை சொல்கிறான் அந்த கண்ணன். வாழ்நாளெல்லாம் நன்மையே செய்து வந்த கர்ணன் தவறியது மூன்று இடங்களில். 
ஒன்று, பாஞ்சாலி துகிலுரியப் பட்ட போது அவன்  பேசிய பேச்சு. ஐவர்க்கழியாப்  பத்தினி என்ற அவள் நிலையை இகழ்ந்தது. அது அவன் மனத்திலிருந்த மாறாத வடுவையும் மறக்காத காதலையும் காட்டியது.
இரண்டு, பரசுராமரிடம் பாடம் படிக்க அந்தண வேடம் இட்டது, அதற்காக அந்த குரு தந்தது மரண ஓலை.
மூன்று. போர் நிகழும் தருவாயில் சல்லியனை அவமதித்தது. அது கூட கர்ணன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவே. 
 
 

ஆனால் கர்ணனுக்கு அந்தத் தெய்வம் இழைத்த கொடுமை பிறப்பிலிருந்தே தொடங்குகிறது. கன்னிப்பெண்ணுக்கு அந்த மகவைப் பிறக்க வைத்து, அவள் கையாலேயே ஆற்றில் மிதக்க வைத்து. தேரோட்டி மகனாக வளர வைத்து, தம்பியரையே இகழ வைத்து, அவனுக்கு இயற்கை தந்த காப்பை இந்திரனைக் கொண்டு தானம் பெற வைத்து, பெற்ற தாயே அவனது மரணத்தை உறுதி செய்ய வைத்து, அந்த ஆதிமூலம் இழைத்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல. பார்தனிட்ட கணை கர்ணன் உயிரைத் தொடவில்லை. அவன் புண்ணியம் காத்தது. அந்தப் புண்ணியத்தையும் தானே பெற்று அவன் வேதனை மிக்க வாழ்வுக்கெல்லாம் காரனமாய் இருந்த அந்தத் தெய்வத்தின் மனச் சான்று பேசும் பாடலாக இது. எனக்குப் பிடித்த வரிகள்,
 
"தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை..
ஊர்பழி ஏற்றாயடா.. நானும் உன் பழி கொண்டேனடா.." 

இந்த வரிகள் மிக முக்கியமானவை. தாய் என்பவள் உலகில் எத்தனை தவறினும் ஏற்கக் கூடியவள். தன் மகவுக்காகப் பேசக் கூடியவள். அவளே இவனை வஞ்சித்தாள். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று ராமாயணத்தில் அந்த இன்னொரு கர்ணன்-கும்பகர்ணன் உரைப்பானே - அந்தச் சிறப்பு பெற்ற தம்பியும் இவனை வஞ்சித்தான். தாயினும் சாலப் பரியும் அந்தத் தெய்வமும் இவனை வஞ்சிக்கிறது. அதனை ஒப்புக்கொண்டு

 "செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து 
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா"

 
என்று அந்தப் பரம்பொருளே பேசக் கூடியவன் இந்தக் கர்ணன் என்று கவிப்பேரரசு நம்மக்கு உணர்த்துகிறார். அந்த வரலாற்றுச் சோகப் பதிவை "https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4" காணலாம். இந்தப் படைப்பின் வலுவை, கெளதம் என்ற சிறுவன் பாடும் போது, கர்நாடக இசை மேதைகளே உருகியதை "https://www.youtube.com/watch?v=Xd3C3hnMN7Q&feature=related" கேட்கலாம். 
 
12. இறுதியாக உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட புரத்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது. 
 
 அந்தக் கூட்டம் அடிமைப்  பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்" 

 திரையில் தோன்றும் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ள "https://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk" என்ற பதிவைக் கேளுங்கள்.

                                *************************முற்றும் **********************

2 comments:

  1. Song states உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது

    But Karnan did the following mistakes as well so basically he is good or bad???"
    ஒன்று, பாஞ்சாலி துகிலுரியப் பட்ட போது அவன் பேசிய பேச்சு. ஐவர்க்கழியாப் பத்தினி என்ற அவள் நிலையை இகழ்ந்தது. அது அவன் மனத்திலிருந்த மாறாத வடுவையும் மறக்காத காதலையும் காட்டியது.
    இரண்டு, பரசுராமரிடம் பாடம் படிக்க அந்தண வேடம் இட்டது, அதற்காக அந்த குரு தந்தது மரண ஓலை.
    மூன்று. போர் நிகழும் தருவாயில் சல்லியனை அவமதித்தது. அது கூட கர்ணன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவே. "

    :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்கு நன்றி திரு. ப்ரகாஷ் பாலாஜி அவர்களே!
      கர்ணனின் செயல்களில் சில மாற்று குறைந்தவையே. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மகாபாரதத்தில் எல்லொரும் கர்ணனின் மனத்தை கிழித்திருக்கிறார்கள். எல்லா விதங்களிலும் (பிறப்பு, வளர்ப்பு, பதவி) அவனைக் கேவலப் படுத்தவும், அப்படியில்லையெனின் அவனைப் பயன்படுத்தவும் முயல்கிறார்கள். எந்தச் சூழ்நிலையும் அவனை ஆதரித்தது துரியோதனன் மட்டுமே. அதற்காக அவன் செய்த எல்லாக் காரியங்களிலும் அவனை ஆதரித்தான் கர்ணன். (அவனுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை.)
      நடந்த எல்லாவற்றுள்ளும், தான் ஏமாற்றப் பட்டது தெரிந்தும் தன் தாயிடம் தன் தம்பியரைக் கொல்வதில்லை என வாக்களித்தது, தன்னை அழிக்க நினைக்கும் அர்சுனனுக்கும் எதிராக ஒரு முறையன்றி மறுமுறை சக்தி ஆயுதம் பயன்படுத்தாதது, தோற்றாலும் வென்றாலும் தன் நட்பை உயர்த்திப் பிடித்தது, கொடைத் தன்மை, இவை எல்லாம் நல்ல உள்ளச் செயல்களே.
      எல்லா விதமான சாதகங்களையும்(ராஜாதி ராஜன்) கொண்ட தருமன், சூதில் தன்னை இழந்த பின் தன் மனைவியை வைத்தாடிய போது அவமானங்களை மட்டுமே சுமந்த கர்ணன் பேசியது ஒரு குற்றமா?
      ஆபத்து என்று தெரிந்தும் தன் நட்புக்காக பரசுராமரிடம் சென்ற செஞ் சோற்றுக்கடன் தவறா?
      சல்லியன் அவனை இகழ்ந்து பேசி கவனத்தைக் கலைக்க முயன்ற போது அவனை இவன் மதியாதது தவறா?
      அவன் பிழைகள் எல்லாமே மற்றவர்கள் செயலின் எதிர் வினைகள் தான். அம்மட்டில் அவன் உயர்ந்த உள்ளம் தான். இதை நான் அல்ல அந்தக் கண்ணனே சொல்கிறான். அவனுக்கு விஸ்வரூபமும் காட்டுகிறான்.

      Delete