Sunday, November 18, 2012

அங்கோர் வாட் - கலைக் கோயிலில் காலத்தின் சுவடுகள் - 1

காலம் நீர்ப்பெருக்காக, கடக்க முடியா பெருவெள்ளமாக ஆழ்ந்தும் அகண்டும் கிடக்கிறது. அதன் கரைகள் கண்களுக்கு எட்டாதவை. அந்த நீர்பரப்பு தோன்றிய இடம் அறியவொட்டாதது. அதன் முடிவு காண முடியாதது. அக்கால வெள்ளத்தின் சுழல்கள் நுரைத்துப் பொங்கிய தருணங்கள் வரலாற்றுச் சுவடுகள். அது சலசலத்து ஓடிய தருணங்கள் கலைப் படைப்புக்கள். ஆங்காங்கே அந்த வெள்ளத்தின் குறுக்கே சில திட்டுக்களாக தீவுகளாக சில அடையாளங்கள். மனித முயற்சியின் மிகப் பெரும் சாதனைகள் அவை. காலத்தின் குறுக்கே சில மனிதக் கனவுகள் நின்று வென்று இருப்பதை உணர்த்தும் மனித சாதனை தான் அங்கோர் வாட்.

இந்தப் பதிவில் காணப் படும் புகைப்படங்கள் பல தளங்களில் இருந்தும் பெறப் பட்டு தொகுக்கப் பட்டுள்ளவை. நான் காண விழையும் ஒரு இடமாக இருக்கும் இதனைப் பற்றி தேடிய பொழுது கிடைத்த பல தகவல்களை இங்கே தொகுக்கின்றேன்.


இந்தியாவின் பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தின் சுவடுகள் கீழை நாடுகளில் பதிக்கப் பட்டிருக்கின்றன. அதனை ஏந்திச் சென்ற கருவிகள் தான் இந்தியாவின் சமயங்கள். சைவம், வைணவம், பௌத்தம், ஜைனம் என்று இந்தியா அளித்த தத்துவங்கள் இன்றும் பல நாடுகளில் அந்நாடுகளின் மணமும் கனமும் பெற்று புதிய வடிவங்களில் முகிழ்த்து இருப்பதற்கு பல சான்றுகள். தாய்லாந்தில் திருப்பாவை திருவெம்பாவை நோன்புத் திருவிழா ஒரு சான்று. இந்தோனேசியாவில் ராமாயணக் கூத்தும் நாடகமும் மற்றொரு சான்று.இந்தச் சான்றுகளிலேயே மிக முக்கியமானதும் மலைக்கவைப்பதுமான சான்றுகளில் ஒன்று அங்கோர் வாட்.

காம்போஜம் என்று பண்டைய இந்தியாவில் அறியப் பெற்ற இன்றைய கம்போடியா நாட்டில் சியெம் ரீப் என்ற நகரிலிருந்து ஐந்தரைக் கிலோமீட்டர் தூரத்தில் அமைத்திருக்கும் ஆச்சர்ய உலகம் அங்கோர் வாட். வைணவத்துக்குப் பெரிய கோவிலென்றால் ஸ்ரீ ரங்கம். அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் காவிரிக்கரை நகரம் என்பார்கள். சைவத்துக்குப்  பெரிய கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில். ராசராசன் கட்டிய அந்த தக்ஷின மேரு தான் என்பார்கள். ஆனால் உண்மையிலேயே இந்து மதத்தின் பெரிய கோவில் அங்கோர் வாட் தான்.

 நிலத்தினில் இருந்து சுமார்  215 அடி உயரத்தில் மூன்றடுக்குகளாக அமைந்த கோபுரம் கொண்டது அங்கோர் வாட். தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானமும் சற்றொப்ப இதே உயரம் கொண்டது தான். தஞ்சைக் கோவில் ஒரு கோவில் என்ற அளவோடு ஒரு கோட்டை என்ற எல்லையோடு நின்று விட்டது. ஆனால் அங்கோர் வாட் ஒரு மிகப் பெரு நகராக அமைந்தது. ஐந்து இதழ் கொண்ட தாமரை போன்று, நடுவிலே ஒரு பெரிய விமானமும் சுற்றி சிறிய விமானங்களுமாக அமைந்த மாபெரும் கோவில் இது. இது ஒரு விண்ணகரம் - அதாவது திருமாலின் பரம பத உறைவிடமாகவே கட்டப்பட்ட இடம். 12-ஆம் நூற்றாண்டிலே இரண்டாம் சூர்யவர்மன் என்ற கெமர் வம்சத்துப் பேரரசன் உருவாக்கிய கலைப் பேரரசு இந்த அங்கோர் வாட்.

அங்கோர் என்பது நகர் என்பதன் திரிபு. வாட் என்பது கோவிலுக்கான கெமர் மொழிச் சொல். அங்கோர் வாட் என்றால் கோயில் நகரம் என்று நாம் பொருள் கொள்ளலாம். இந்த நகர் நீரால் சூழப் பட்டிருக்கிறது என்று பார்த்தவுடன் நமக்குத் தோன்றும். ஆனால் உண்மையிலே இது நீரின் மீது கட்டப் பட்டிருக்கும் ஒரு கற்கப்பல். அந்நாட்டின் கங்கை எனப் புனிதமாக எண்ணப் படும் மேகாங் நதியின் நீரின் மீது எழுப்பப் பட்டிருக்கும் நீராழி நகரம் அங்கோர் வாட். ஒரு பறவைப் பார்வை புகைப்படம் இதற்குச் சான்று கூறும்.


 இந்து மதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பஞ்சாயாதன பூஜை விதிப்படி  திருமால் நடுவிலும், துர்க்கை வட மேற்கிலும், சூரியன் தென்மேற்கிலும், சிவன் வடகிழக்கிலும், விநாயகர் தென்கிழக்கிலும் அமையும் படி விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரைபடம் கூர்ம மஹா மேரு என்ற யந்த்ர  அமைப்பின் படி உள்ளது.
 இரு நாகரீகக் கலப்பாக அமைந்துள்ள இந்த அங்கோர்வாட் எப்படி கட்டமைக்கப் பட்டது என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Saturday, November 10, 2012

சில செய்திகளும் சில கருத்துக்களும்

இன்றைய இந்தியாவின் வரலாறு எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை நமக்கு, நமது சமூகத்துக்கு இருக்கிறதா? இந்தக் கேள்வி என் மனதில் கடந்த இரு வாரங்களாக எழுந்து கொண்டே இருந்தது. சில செய்திகளைப் படித்தவுடன் அயர்ச்சியும் சில செய்திகளைப் படித்தவுடன் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது.


1. பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி மீதான ஊழல் புகார்.

இன்றைய மத்திய அரசு பெற்றுள்ள எல்லாப் பெருமைகளிலும் தலையாயது ஊழலுக்கு முன்னுரிமை அளித்து பதவி வழங்குவது என்ற உயரிய பெருமை தான். அலைக்கற்றை ஊழலில் புகழ் பெற்ற ஆ.ராசா நாடாளுமன்ற குழுவில் உறுப்பினர். குற்றச்சாட்டுக்கள் என்னவானது என்றே தெரியாத நிலையில் மீண்டும் சசி தரூருக்குப் பதவி. இதற்கெல்லாம் தார்மீக உரிமையோடு பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டிய தருணத்தில், அதன் தலைமை மீதே புகார் வருகிறது. தனது அமைச்சர்களையும், தலைவியின் குடும்பத்தையும் விசாரணையின் தொடுகைக்கு அப்பால் வைத்திருக்கும் காங்கிரஸ் அரசு கட்கரியின் மீதான புகாரை விசாரிக்க உத்தரவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க. என்ன செய்திருக்க வேண்டும்?

ஆ.ராசாவின் பதவி எப்படி untenable-ஆக செல்லாததாகப் பட்டதோ, எந்தக் காரணத்துக்காக எடியுரப்பா பதவி விலக வலியுறுத்தப் பட்டதோ, அதே காரணத்திற்கு கட்கரியும் பதவி விலக வேண்டியது தானே நியாயமான முடிவாக இருக்க முடியும்? அதை விட்டு கூடிக்கூடிப் பேசி ஆவதென்ன? தார்மீக உரிமையையும் தர்க்க ரீதியான தோல்வியையும் பா.ஜ.க அடைந்து விட்டதாகவே எனக்குப் படுகிறது. இந்த ஆட்சிக்கு மாற்று என்று பா.ஜ.க தன்னை நிலை நிறுத்த முடியாத நிலைக்கு தன்னைத் தானே இட்டு வருகிறது. வருந்தத் தக்க நிகழ்வுகள்.


2. சாதீயக் கலவரங்கள்

அமைதிப் பூங்கா என்றும் பகுத்தறிவின் பயிற்சிக் களம் என்றும் தமிழகத்தை நாம் வருணித்துக் கொள்வதில் உள்ள அபத்தம் கடந்த இரு வாரங்களாக நிரூபிக்கப் பட்டு வருகிறது. ஒரு புறம் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் முட்டலும் மோதலும். மறு புறம் குடும்பப் பிரச்னைகளைச் சாதிப் பிரச்னைகளாக்கி வன்முறைக்கு வித்திடுவது. எத்தனை எத்தனை கேவலமான பிறவி இந்த மனிதன் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

மறைந்த தலைவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தா விட்டாலும் அவர்களது புகழுக்கு மாசு ஏற்படப் போவதில்லை. அவர்கள் அதற்காக ஏங்கித் தம் வாழ்நாளில் பணியாற்றவுமில்லை. நமது குறுகிய எல்லைகளுக்குள் அவர்களை நிறுத்தி அதற்காக வன்முறையில் ஈடுபட்டு மறைந்தவர்களுக்கு இழுக்குத் தேடித் தருவதில் என்ன பயன்?

வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் திருத்த வேண்டும் என்று பல்வேறு கூக்குரல்கள். அதிலே பா.ம.க., கொ.மு.க. என்று அரசியல் அவதாரம் எடுத்த சாதீயக் கட்சிகளின் மலிவான பிரச்சாரங்களும் சுய சாதித் தம்பட்டமும் ஒடுக்கப் பட வேண்டியவை. அதிலும் காதல் திருமணங்களைக் கண்டித்து இவர்கள் எழுப்பும் முழக்கங்கள் சுத்தமான சாதீய வெறிப் பிதற்றல்கள். இதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டிக்க வேண்டிய தாழ்த்தப்பட்டோருக்கான இயக்கங்கள், தாமும் கலாசாரக் காவலர் பதவிக்குப் போட்டியிடுகின்றன.

சட்டம் ஒழுங்கைக் காப்பேன் என்று சூளுரைத்து ஆட்சிக்கு வந்த அரசு அதிமுக அரசு. அதனை உறுதி செய்ய வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதனை அவர் அறியாதவர் அல்ல. ஆனால் அரசின் நடவடிக்கைகள் பிரச்னைகளைச் சமாளிக்கின்றனவே ஒழிய தவிர்க்கவில்லை. இது நிச்சயம் வருந்தத் தக்கதே. நிவாரண அறிவுப்புகள் விரைவான விசாரணைகள் நடந்த நிகழ்வுகளுக்கு பரிகாரம் அல்ல. அடுத்து இது மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க வேண்டியதே அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.