Monday, July 30, 2012

நான் ரசித்த சில .. 6

 தற்போதைய இந்திய அரசு பல உரிமை தரும் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. அதில் சொல்லாததைச் செய்த சொக்கத் தங்கமாக ரயில்வே விபத்துக்களை நமது பிறப்புரிமை ஆக்கி மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது. அந்தச் சாதனையின் சிறந்த விளைவாக தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் தீப்பற்றி சுமார் 32  பேரை பலி வாங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். எதனை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும் ரயில்வேத் துறை மற்றும் இந்திய அரசின் இந்தச் சாதனையை ரசிக்காமல் போற்றாமல் இருக்க முடியாது.

விபத்துக்கள் நமது பிறப்புரிமை

Saturday, July 28, 2012

நான் ரசித்த சில... - 5

இதனை சென்ற பதிவின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன். இதுவும் சமீபத்திய நிகழ்வின் அடிப்படையில் எனக்குத் தோன்றியவற்றை இங்கே சொல்கிறேன். உத்தரப்ப்ரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலைகள் உடைக்கப்படுகின்றன. அங்கே சில நாட்களுக்குப் பின் பாபா சாஹேப் அம்பேத்கரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன. இதில் இரு வேறு கூறுகளைக் காண்கிறேன் நான்.

அடையாள அரசியல்

இந்து மதத்தில் உருவங்கள் தான் வழிபாட்டின் ஆரம்பத் தொடக்கம். ஆனால் உருவ வழிபாடுகள் புறக்கணிக்கப் படுவதாக நம்பும் சமயங்கள் தான் அதிகம் உலகில். ஆனால் அவர்களுக்கும் ஏதாவது ஒரு உருவம் தங்கள் மரியாதையின் இருப்பாக அல்லது தங்கள் வெறுப்பின் சித்தரிப்பாக இருப்பதையே காண்கிறோம். இஸ்லாத்தில் ஹஜ் பயணத்தில் ஜமாரத்தில் கல் எறிவது ஒரு முக்கியமான சடங்கு. அதே போல் யூதர்களுக்கு கொஷேல் என்ற சுவர் ஒரு வழிபடு அடையாளம். சடங்குகளை வெறுத்த புத்தனுக்கு விகாரைகளும் பகோடாக்களும் தாபகாக்களும் எழுப்பி அவனையே துதிப்பவர்கள் பௌத்தர்கள். இவை எல்லாமே உருவங்களை புறக்கணித்த சமயங்களில் சில அடையாள உருவங்கள் இருப்பதன் அடையாளம்.

ஆனால் இவை எல்லாவற்றையுமே எதிர்த்த பகுத்தறிவுவாதிகளுக்கும் சில சிலைகள் தான் முக்கியம். அவற்றின் பராமரிப்பு தான் முக்கியம். சிலைகளை வெறுத்த பெரியாருக்கே சிலைகள். அவர் எள்ளி நகையாடிய கண்ணகிக்கு சிலை. இதிலே வேடிக்கை என்னவென்றால் கண்ணகி பத்தினித் தெய்வமாகவே  - பகவதியாகவே வழி படப்படும் ஒரு பாத்திரம். திருவள்ளுவரின் ஒரு குறளுக்கும் இலக்கணமாகத் தகுதி இல்லாவிட்டாலும் அவருக்கு விண்ணை முட்டும் சிலை எடுத்து களிப்படைபவர்கள். இதெல்லாம் தமிழகத்தில் பலமுறை பேசிப்பேசி அலுத்தாயிற்று தான். அதனை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வைப்பதில் தமிழக முதல்வரின் அரசியல் அமைகிறது.  உதாரணமாக அதிலே என்ன புனிதம் என்று கோவில்களைக் கேலி செய்தவர்களை கண்ணகி சிலையின் புனிதத்தை போதிக்க வைத்தார்.

 பிறகு இந்த ஆட்சியில் தலைமைச் செயலகம். அண்ணா நூலகம். முதல் கட்டிடமாவது கேலிக்கூத்தாக திறக்கப்பட்டது. ஊழலால் கட்டப்பட்டது. ஆனால் இரண்டாவது கட்டிடம் நிச்சயம் புறக்கணிக்கத் தக்கதல்ல. அந்த நூலகத்துக்கு இன்னும் சில சிறப்புக்களைச் செய்து பெயர் எடுத்திருக்க வேண்டிய முதல்வர் அதனை மருத்தவமனையாக மாற்றுவேன் என்று விதண்டாவாதத்தில் இறங்கியிருப்பது தன்னைத் தானே நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கும் செயல். இப்போது இரு முடிவுகளும் நீதிமன்றத்தில் வழக்குகளாக மாறியிருக்கின்றன.

இது நிற்க. சிலைகள் எப்படிப்பட்ட அடையாளமாக மாற்ற முடியும் என்பதற்கு உத்தரப்ப்ரதேசம் ஒரு நல்ல உதாரணம். மாயாவதி முதல்வராக இருந்த பொழுது அவர் சமாஜ்வாதிக் கட்சியின் கொள்கை வழிகாட்டி ராம் மனோகர் லோகியாவுக்கு எழுப்பப் பட்ட சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ அவர் பராமரித்து அதுவே நல்ல நாகரிகம் எனக் காட்டினார்.  அதே போல எந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதோ, எந்த தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பொதுவிடங்களில் சம உரிமை புறக்கணிக்கப் பட்டதோ, அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களின் பெயர்களில் பல பூங்காக்களையும் நினைவுச் சின்னங்களையும் நிறுவினார். அவர்களது பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் அவற்றை அடையாளங்கள் ஆக்கினார். தனக்கும் தனது கட்சி சின்னத்துக்கும் சிலைகள் எடுத்துக் கொண்டது ஒரு அதீதமான முடிவு. (தவிர்த்திருக்க வேண்டிய முடிவு என்பது என் அபிப்ராயாயம்)

இதனை அவர் செய்த போது இரு விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக செலவழிக்கப்பட வேண்டிய பணத்தை வீணாக்குவதாக பலர் கூறினார்கள். அதிலே என்ன தவறு என்று சிலர் வாதாடினார்கள். ஆனால் இப்போதைய நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. அந்த சிலைகளை உடைத்தவர்கள் ஒரு சமூக இழிவைக் காட்டினார்கள். அந்தச் சிலைகளைக் கூட பொறுக்க முடியாத சமூகம் தான் நம்முடையது. அவர்களது வளர்ச்சியை எப்படி இவர்கள் பார்க்கக் கூடும்?

சாதிகள் இல்லையடி பாப்பா என்றானே பாரதி. அவன் சொன்ன அந்தக் கருத்தை மெய்ப்பிக்க முடியாத அவலம் ஒரு புறமென்றால். அதனையே சொல்லி சாதிகளை வளர்க்கும் அரசியல் கட்சிகளையும், அரசுகளையும் என்னவென்று சொல்வது. கல்வியை வழங்குவதில் சாதியா எனச் சாடிக்கொண்டே அதன் அடிப்படியில் சாதியைப் புகுத்திய கனவான்கள் அல்லவா நமது அரசியலாளர்கள். அது தான் அந்த மக்களின் முன்னேற்றத்துக்கு வழி என்று வாதிடுபவர்கள், அவர்கள் கட்சியின் வேட்பாளர்களை எல்லாம் அந்தந்தத் தொகுதியின் பெரும்பான்மைச் சாதியிலிருந்தே தேர்வு செய்வதிலிருந்தே இவர்கள் நேர்மை புரியாதா? தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர்த்து வேறு தொகுதிகளில் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களை நிறுத்த முயன்றிருக்கிறார்களா? அப்படியே தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளிலுமே அந்தத் தொகுதியில் பெரும்பான்மை இனம் எதுவோ அதனைச் சார்ந்த வேட்பாளரே நிற்பார். இப்படி எந்தவித நேர்மையும் இல்லாமல் நமது அரசியல் கட்சிகள் நடக்கின்றன.

ஆனால் மாயாவதி இதில் கொஞ்சம் பாராட்டத்தக்கவர் என்றே சொல்வேன் நான். அவரது ஊழல் வழக்குகளுக்காக அல்ல. அவரது சில நல்ல நடவடிக்கைகளுக்காக. உதாரணமாக பொருளாதார ரீதியில் பின்னணியில் இருக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள நியாயத்தை பேசும் துணிவு இருந்தது. இதனை மற்ற தலைவர்கள் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உதாரணமாக ஜெயலலிதா இதனைச் செய்திருந்தால் நிச்சயம் பார்பனத்தி என்று அடையாளம் காணப்பட்டிருப்பார். ஆனால் எந்த சமூகம் ஒதுக்கீட்டால் பயன் அடையுமோ, எந்தச் சமூகம் பாதிக்கப்பட்டதால் ஒதுக்கீடு கொண்டு வரப் பட்டதோ அந்தச் சமூகத்திலிருந்து வரும் ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர், பொருளாதார அடிப்படையை(அரசியல் காரங்களுக்காகக் கூட இருக்கட்டுமே)  நியாயம் எனப் பேசியது நிச்சயம் பாரட்டத்தக்க ஒரு விஷயமே. என்ன சொல்கிறீர்கள்?

Wednesday, July 25, 2012

நான் ரசித்த சில... -4

வந்தேறிகளும் மண்ணின் மைந்தர்களும்

இந்தப் பதிவில் சொல்லப்படும் வரலாற்று உண்மைகள் நான் ரசித்தவை அல்ல. மனிதனின் வேடிக்கையான மனோ பாவங்களையும் அதன் விபரீதமான விளைவுகளையும் வரலாற்றில் கண்ட பின்பும் மனிதனின் முட்டாள்த்தனம் தொடர்வதைக் கண்டு வியக்கிறேன். அந்த விளைவே இந்தப் பதிவு...
அசோம் மாநிலத்தில் கலவரம். என்ன காரணம்? யார் செய்கிறார்கள்? ஆதி சமூகங்களான பழங்குடியினர், வங்கத்திலிருந்து வந்தேறிகளாகக் கருதும் இஸ்லாமிய சமூகத்தினரை எதிர்த்து அமைத்த வன்முறைக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுகின்றனர். உடனே பழிவாங்க வேண்டாமா? தொடங்கியது கலவரம். கையாலாகாத மாநில அரசு, ராணுவப் படைகளைக் கோரி கலவரத்தை அடக்கிய பொது பலி எண்ணிக்கை 36 - வீடுகளை இழந்தோர் 150000 பேர். ஒவ்வொரு மனிதனும்(இந்தியன் அல்ல) வெட்கப் பட வேண்டிய நேர்வு.
 இனமானங்களும், சமயச் சார்புகளும் கோரக் கரங்களை விரித்த வரலாறுகளைக் கண்டது 20ம் நூற்றாண்டு. ஒற்றை நிகழ்வுக்காக துரத்தித் துரத்தி யூதர்கள் கிறித்தவ ஐரோப்பாவால் பல நூற்றாண்டுகள் பழி வாங்கப் பட்ட இழப்புகளைக் காட்டிலும், ஹிட்லர் என்ற அந்த ஒற்றை மனிதன் நிகழ்த்திய மரண விளையாட்டுக்களில் அந்த இனம் இழந்தது அதிகம். ஆனால் இழப்புக்களின் வலி அறிந்து மனிதத்தின் வழியைக் கடைபிடித்திருக்க வேண்டிய அந்த இனம் இஸ்ரேல் எனும் புராணக் கானலைத் தேடிச் சென்று பாலஸ்தீனத்தை பாலை ஆக்கியது.
வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மனித இடப்பெயர்வுகளில் வலி மிகுந்ததும், மனிதத்தின் வலி குறைந்ததுமான நிகழ்வு இந்தியப் பிரிவினை. அதன் ஒத்திகை 1905 -இல் வங்கப் பிரிவனை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. இங்கு வரலாற்றுச் சோகங்களுக்கு வடிகால் தேடுவதைச் சாக்காகச் சொல்லி ஒரு ஓரங்க நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஆண்ட இனம் வீழ்வதா என்று இசுலாமியர்கள் தூண்டப் பட்டால், வந்தேறிகளை விரட்டுங்கள் என்று அடிமைப்படுத்திய வந்தேறிகளிடமே மனுக் கொடுத்தது மனுநீதியை நம்பிய கூட்டம். யாருக்கு யார் செய்த அநீதிக்கு பழி வாங்குவது? வரலாற்றின் கோடுகளை எங்கே வரைவது?
சரி, பிரிந்து சென்ற பாகிஸ்தானமாவது நிலைத்ததா? வங்கத்துச் சகோதரர்களையும் அவர்களது மொழியையும் துச்சமென மதித்தது. அதற்கு நியாயம் செய்ய நினைத்த இந்தியாவாவது இன்று பிழைக்கிறதா என்றால் இப்படி ஒரு சிக்கல். எந்த வங்கத்தை உருவாக்கியதோ அங்கிருந்து வரும் அகதிகளாலேயே இந்தியாவின் சமன்பாட்டில் குழப்பம்.
ஒரு பக்கம் நியாயம் செய்த இந்தியா, மறுபக்கம் கொண்ட அநியாயப் பார்வை இன்னும் வெறுப்பூட்டுவது. ஈழம் இன்று இடுகாடான சோகத்தில் தான் இந்தியாவின் கபட நாடகங்கள் எத்தனை? வேடிக்கை நிலைப்பாடுகள் எத்தனை? ஒற்றை மனிதனின் மரணத்திற்கு ஒரு இனமே அழிய உதவிய இந்தியாவை எப்படி பஞ்சசீல தேசம் என்பது.
விலங்குகளை வதை செய்வதைக் கண்டு கொதித்த புத்தன் பிறந்த மண்ணும், அவனது பௌத்தம் தழைத்த மண்ணும் சேர்ந்து ஒரு மனிதப் பேரழிவை உருவாக்கியது வரலாற்றின் வீழ்ச்சி அல்லாமல் வேறென்ன?
காஷ்மீரத்துக்கு இந்தியா கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததே என்று அவர்களுக்கு வாதாடலாம் என்றால் அவர்கள் செய்த அநீதி தடுக்கிறது. தங்களுடைய இனத்தைச் சேர்ந்த சகோதர்களிடம் இஸ்ரேல் செய்த அக்கிரமத்துகாக பரிந்து பேசிக்கொண்டே காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்கு அதே அநீதியை இழைத்த மாபெரும் நீதிமான்கள் அவர்கள்.
மேற்சொன்ன அத்தனை நிகழ்வுகளிலும் இங்கிலாந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்மந்தப் பட்டிருக்கிறது. தந்திரமாக இஸ்ரேலுக்கு உதவியதாகட்டும், போரிடுவதற்காகவே இரு நாடுகளை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியதாகட்டும், ஒன்றாய் விடுதலை வேண்டிப் போராடிய இரு இனங்களைத் துண்டாடி ஈழத்தில் இழவு கொட்டியதாகட்டும் எத்தனை வக்கிர புத்தி அந்தத் தேசத்துக்கு?
இவையன்றி வியட்நாமிலும் ஜெர்மனியிலும் களம் அமைத்து வேட்டையாடிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் என்ன சொல்வது? அவர்களது அதிகாரப் போட்டிக்கும் எண்ணைப்பசிக்கும் பலியிடப்பட்ட தேசங்கள் ஈராக்கும் ஆப்கானிஸ்தானமும். இதில் மதங்களை வைத்து விளையாடி, மனிதர்களை விலை, பேசி போர்களை நடத்தியே வல்லராசாகத் தன்னை நிலை நிறுத்திய பெருமை அமெரிக்காவிற்கு பெரும்பங்கு உண்டு. வல்லரசாகத் திகழும் தேசத்தின் லட்சணம் இது தான்.
இந்த வல்லரசின் அதிபர் தேர்தலில் ஒரு அருவருப்பான வாதம் வேறு. இன்றைய அதிபரை எதிர்க்கும் வேட்பாளரின் அடிப்பொடிகள் உதிர்த்துள்ள முத்துக்களைச் சொல்கிறேன். ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ்வு தெரியாதாம், ஆங்கிலோ-சாக்சன் உறவு தெரியாதாம். அவரது நிறமும் பூர்வீகமும் காரணமாம். வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின் பழங்குடியினத்து மனிதனுக்கும், வல்லரசாகத் தன்னை நிறுவியிருக்கும் அமெரிக்காவின் அதிபராகத் துடிக்கும் மனிதனுக்கும் எத்தனை ஒற்றுமை? சக மனிதனைச் சகிக்காத மனித இனம் எப்படி படைப்பின் உயர்வு? பரிணாமத்தின் உச்சம்?
காக்கை குருவி எங்கள் சாதி என்றானே பாரதி, விரைவாகவோ மெதுவாகவோ ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும் என்றானே மார்டின் லூதர் கிங். அவர்கள் எங்கே? இந்த மதியீனர்கள் எங்கே? என்ன சொல்கிறீர்கள்?

 

Tuesday, July 24, 2012

நான் ரசித்த சில...-3

சென்னை

மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரம், எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருக்கிறது. தொண்டை மண்டலத்துச் சிறு கிராமம் இன்று அண்டை அயல் கிராமங்களையும் சிறு நகர்களையும் உண்டு விரிந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது வெள்ளைக்காரன் பேட்டை தான். கறுப்பர் நகர் என்றும் வெள்ளையர் நகர் என்றும் நிறம் பிரித்து அமைத்த வண்ணக் கனவு. இந்தியாவை வர்த்தகம் செய்ய வந்த போர்துகீசியரில் ஆரம்பித்து வசதியாக இரு நூற்றாண்டு ஆண்ட பிரிட்டிஷார் வரை தேடி உருவாக்கிய பட்டணம் இது. "கர்நாடகப் போர்" என்று வர்ணிக்கப் படும் பிரெஞ்சு ஆங்கிலப் போரின் மையம் சென்னையே. கோட்டையைப் பிடிக்கும் போட்டி மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது பாருங்கள்.

பட்டினத்தார் சமாதியும் இங்கே இருக்கிறது, பட்டணத்து சந்தடியும் இருக்கிறது. ஆழ்வார்கள் தோன்றிய அல்லிக்கேணியிலே ஆற்காட்டு நவாப் கட்டிய செம்மசூதியும் இருக்கிறது. ஏசுநாதரின் பனிரெண்டாவது அப்போஸ்தலர் தாமஸ் வந்த பரங்கி மலை சென்னப்ப நாயக்கரின் சென்னையில் தான் இருக்கிறது.
 கர்நாடக சங்கீத உலகம் போற்றும் டிசம்பர் திருவவையாரும் இதுவே, car parts தயாரிக்கும் இந்தியாவின் டெட்ராய்டும் இதுவே.
மதராஸ் மனதே என்று சொல்லித் தான் பார்த்தார்கள். ராஜாஜி விடவில்லை. மதராஸ் நமதே என்று ஆக்கினார்.

சென்னையின் அடையாளங்கள் தனித்துவமானவை. அதற்கென ஒரு மொழி... அதற்கென ஒரு வகைப் பாடல்... கொல்கத்தா இன்னும் ட்ராம்களை தன் அடையாளாமாக வைத்திருக்கிறது. சென்னை ட்ராம்களுக்கு ஓய்வு தந்து, மெட்ரோ-வைத் தாண்டி மோனோ-வுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறது.
மெரினா என்னும் உலகிலே  இரண்டாவது நீளமான கடற்கரை இருக்கிறது, கூவம் அடையாறு என்னும் இரண்டு நதி பாயும் நதிக்கரைகள் இருக்கின்றன, பல்லவர் காலத்து ஏரிக்கரைகளும் இருக்கின்றன. ஆனால் தெலுகு-கங்கைக் கால்வாயோ, சோழன் கட்டிய வீராணமோ சென்னைக்கு தண்ணீர் தந்தால் தான் இதன் தாகம் தீரும்.

உலக வங்கிக் கிளை உள்ள கீழை நகரம் இதுவே. உலகிலேயே நாலரை சதவிகித பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் பல்கலைக் கழகம் இருப்பதும் இங்கேயே. வந்தாரை வாழ்விக்கும் தமிழகம் என்ற பெயருக்கு பொருத்தமான தலை-நகரம். வாழ வைப்பது மட்டுமல்ல வருவதைப்  பயன்படுத்தவும் தயங்காத நகரம்.

லண்டனுக்குப் பிறகு இரட்டை நதி பாயும் தருமமிகு சென்னை என்பது அழகிய கற்பனை. அரை நூற்றாண்டிலே அந்த கற்பனை விரிந்து இருக்கிறது. ஆனால் அழகை இழந்து விட்டு.  ஆனால் ஆங்கிலத்திலே சொல்லுவது போல இது greater சென்னை தான். என்ன சொல்கிறீர்கள்?

Saturday, July 21, 2012

நான் ரசித்த சில... - 2

பெரியார் - சில முரண்கள்


ஈ.வே.ராமசாமி நாயக்கர் எனப் பெயர் பெற்ற இவர் தமிழகத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படியாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சிலருக்கு ஞானத் தந்தை. சிலருக்கு பிழைப்புக்கு சந்தைப் பொருள். சிலருக்கு வெறுப்பூட்டும் மனிதர். இவரது கடவுள் மறுப்பையும், உயர் சாதீய வெறுப்பையும் பேசிப் பேசி தமிழ்நாட்டு மேடைகள் வாக்குகளையும், வசைகளையும் பெற்று விட்டன. கடவுள் மறுப்பு - ஒரு கட்டத்துக்கு மேல் போலி நடிப்பானதை வரலாறு கண்டது. சாதீய முறை - இட ஒதுக்கீட்டை குறிக்கோளாக வைத்து ஒழிக்கப்பட்டதாக முலாம் பூசப் பட்டது.
ஆனால் இவர் நிச்சயம் ஒரு நல்ல கருத்தாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது பெண் விடுதலை பற்றிய சிந்தனை, மாற்றாரை தனிப் பட்ட அளவில் மதிக்கும் பண்பு-நிச்சயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றே. அண்ணாவைப் போல் இவர் தமிழ் வல்லுநர் இல்லை. இவரது பேச்சும் எழுத்தும் கரடு முரடானவை. ஆனால் கருத்துக்களில் தெறித்த கோபம் - பாரதி சொன்ன அந்த தார்மீக ரௌத்ரம் தான்.

இவரது வாழ்வில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்ட சில முரண்கள் இவை:
  1. ராமர் - இவருக்கு ஒரு ஆதர்ச எதிர்ப்பு  பொருளாயிருந்தார். ஆனால் இவரது பெயரின் தொடக்கமே "ராம"சாமி.
  2. இவர் உடைக்காத பிள்ளையார் சிலைகளே இல்லை. ஆனால் தனது சொந்தக் குடும்பத்தின் பிள்ளையார் கோவில் ஒன்றை பொறுப்பு காரணமாக கவனிக்க நேர்ந்தது.
  3. பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்தார் இவர். தனது வாழ்வின் அறுபது வயதுக்குப் பின் மணியம்மையாரை(அவர் முப்பதுகளில் இருந்தார்) உடல் நிலை காரணமாக மணக்க நேரிட்டது.
  4. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திராவிடர் கழகம் கண்ட இவர், அண்ணாவின் திமுகவை எதிர்க்க காங்கிரஸின் காமராஜரை ஆதரிக்க வேண்டி வந்தது.
  5. பாம்பையும் பார்பனரையும் கண்டால் பார்பானை அடி என்பது இவரது கட்சியின் பிரபல வசனங்களில் ஒன்று. ஆனால் தனது திருமணத்தைப் பற்றி ஆலோசிக்க காலமெல்லாம் யாரை எதிர்த்தாரோ அந்த ராஜாஜியைத் தான் இவர் தேர்ந்தெடுத்தார்.
  6. சிலைகளே வேண்டாம் என்ற இந்த மனிதனுக்கு 108 சிலை வைக்க முடிவெடுத்தது இவரது கட்சி.
மேற்சொன்னவற்றில்  சில திமுக உருவாகக் காரணமாயிருந்தன. ஆனால் திமுக ரொம்ப வசதியாக, இவரைத் தலைவராக வரித்து ஆரம்பிக்கப் பட்டது. இந்த போலித்தனமெல்லாம் வேண்டாமென்று தான் அண்ணா மறைந்த பின் கருணாநிதி தானே தலைமை ஏற்றார் போலும்.
ஆரம்பத்தில் எல்லா மதங்களையும் சாடிக் கொண்டிருந்த இவர் ஏனோ இந்து மதத்தை சாடுவதொடு நிறுத்திக் கொண்டார். மொத்தத்தில் கூர்மையான கேள்விகளை சமூகத்தின் பால் எழுப்பிய தீரர் இவர். ஆனால் இவரைப் பின்பற்றியதாகத் தோன்றியவர்கள் இவரது கருத்துக்களையே மறைக்க ஆரம்பித்தார்கள். மொத்தத்தில் புத்தனுக்கு ஆன அதே துரதிர்ஷ்டம் இவருக்கும் நேர்ந்தது. என்ன சொல்கிறீர்கள்?

நான் ரசித்த சில... -1

சில சம்பவங்கள் என் கண் முன் நடந்து என்னை சிந்திக்க வைத்தவை. சில நான் படித்து, பகிர்ந்து கொள்ள நினைத்தவை. சில சமூகத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள். அப்படி என் எண்ணத்தை ஈர்த்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம் எனக் கருதுகிறேன். இதனை ஒரு தொடர் போல எழுத ஆசைப்படுகிறேன்.


ராமானுஜம்


நான் பணியளவில் ஒரு கணிப்பொறியாளன். ஆனால் கணிதத்துக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம் தான். கணிதம் என்னை ஈர்க்காத பொழுதும் கூட கணிதவியலாளர்களின் வாழ்வு - அவர்கள் வரலாறு என்னை ஈர்த்தே வந்திருக்கிறது.
பொறியியல் இளநிலைக்கல்விக்கான நேர்முகத்(Engineering entrance) தேர்வின் பயிற்சி புத்தகத்தில் ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் அதன் சிறிய வரலாறு அல்லது அந்த துறையில் சிறந்த கணித வல்லுனரைப் பற்றிய குறிப்பு கொடுக்கப் பட்டிருக்கும். நான் கணக்குப் புத்தகத்தின் பயிற்சிக் கணக்குகளைப் படித்ததைக் காட்டிலும் இந்த குறிப்புகளை விரும்பி படித்திருக்கிறேன். அதில் நிகழ்-தகவு(Probability) பற்றிய பாடத்தில் ஒரு குறிப்பு. கர்டனோ கிரோலமோ(Cardano Girolamo)  என்ற 15 ம் நூற்றாண்டு கணித வல்லுநர், தனது இறப்பை கணித்தார் . அந்த நாளில் தான் இறக்காத பொழுதும் தனது கணிப்பை உண்மையாக்குவதற்காக தற்கொலை செய்து கொண்டாராம். அதிலிருந்து இந்த கொலை-வெறி பிடித்த கணிதத்தின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பையும் விட்டு விட்டேன்.
ஆனால் சமீபத்தில் ராபர்ட் கநிகேல்(Robert Kanigel) என்ற அமெரிக்க எழுத்தாளர் ராமானுஜம் அவர்களின் வாழ்வைப் பற்றி "The man who knew infinity" நூல் ஒன்று எழுதி இருப்பதாக அறிந்தேன். அந்த புத்தகத்தில் நான் ரசித்த சிலவற்றை என் பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன்.
ராமானுஜம் தமிழகத்தில் இருந்து பிரிட்டன் சென்ற பொழுது அவரைப் பேணியவர் ஜி.எச்.ஹார்டி . அவரும் ஒரு மிக சிறந்த கணித மேதை. அவரைப் பொறுத்த மட்டில் பயனுறு கணிதம்(Applied Mathematics) கொஞ்சம் மட்டமானதே. கணிதமும் ஒரு கலை போல. அதற்கு பயன் ஆன்ம அனுபவமே என்பது அவரது முடிவு.  (ஹார்டி ஒரு நாத்திகர்)
தீவிர வைணவரான ராமானுஜமும் அப்படி எண்ணுபவரே. ஒரு கணித சமன்பாடு(Equation) கடவுளின் குறிப்பு எனக் கருதியவர் அவர். அவருக்கு எண்-கணிதத்தில் குறிப்பாக முடிவிலித் தொடர்களில்(Infinite series) ஆர்வம் அதிகம்.

1+ 1/2 + 1/4 + 1/8 + 1/16 +....

இந்தத் தொடரில் எண்கள் இரண்டை நோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆனால் அதனை அடையாது. ஏதோ ஒரு சிறிய அளவு மிச்சம் இருந்து கொண்டே இருக்கும். இதில்  என்ன கடவுள் தத்துவம் இருக்கிறது என்கிறீர்களா?
ஆன்ம அனுபவத்தில் உயர்நிலை என்பதோ உச்சம் என்பதோ விவரிக்க முடியாதது. அதைத் தான் மாணிக்கவாசகர் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்கிறார். அந்த உச்சத்தை நோக்கிய பயணம் எல்லை இல்லாதது. அதனை நோக்கிய பயணத்தில் முன்னேற்றம் இருக்கும் ஆனால் முழுமை இருக்காது. இந்த எண்களும் அதைத் தானே செய்கின்றன. இரண்டை நோக்கிய பயணம். ஆனால் முடிவில்லாத பயணம்.
இந்தப் பார்வை ராமானுஜத்துக்கு இருந்திருக்கிறது. நாமக்கல்லில் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி நாமகிரி தாயாரே தனது கணித ஆற்றலுக்கு ஊற்று என எண்ணியவர் ராமானுஜம். பிரிட்டன் செல்ல அந்த நாமகிரித் தாயாரே உத்தரவு கொடுத்ததாக நம்பியவர். 
பலரும் விஞ்ஞானிகள் கடவுளை நம்புவது முரண் என்கிறார்கள். ஆனால் இப்படி கணிதத்தையே ஆன்ம வழியாக எடுத்துச் சென்ற இந்தியர்கள் பலர். இன்றைய காலகட்டத்தில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் கூட ஒரு சிறந்த உதாரணம். என்ன சொல்கிறீர்கள்?






என்னைப் பற்றி...

என்னைப் பற்றி...