பெரியார் - சில முரண்கள்
ஈ.வே.ராமசாமி நாயக்கர் எனப் பெயர் பெற்ற இவர் தமிழகத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படியாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சிலருக்கு ஞானத் தந்தை. சிலருக்கு பிழைப்புக்கு சந்தைப் பொருள். சிலருக்கு வெறுப்பூட்டும் மனிதர். இவரது கடவுள் மறுப்பையும், உயர் சாதீய வெறுப்பையும் பேசிப் பேசி தமிழ்நாட்டு மேடைகள் வாக்குகளையும், வசைகளையும் பெற்று விட்டன. கடவுள் மறுப்பு - ஒரு கட்டத்துக்கு மேல் போலி நடிப்பானதை வரலாறு கண்டது. சாதீய முறை - இட ஒதுக்கீட்டை குறிக்கோளாக வைத்து ஒழிக்கப்பட்டதாக முலாம் பூசப் பட்டது.
ஆனால் இவர் நிச்சயம் ஒரு நல்ல கருத்தாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது பெண் விடுதலை பற்றிய சிந்தனை, மாற்றாரை தனிப் பட்ட அளவில் மதிக்கும் பண்பு-நிச்சயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றே. அண்ணாவைப் போல் இவர் தமிழ் வல்லுநர் இல்லை. இவரது பேச்சும் எழுத்தும் கரடு முரடானவை. ஆனால் கருத்துக்களில் தெறித்த கோபம் - பாரதி சொன்ன அந்த தார்மீக ரௌத்ரம் தான்.
இவரது வாழ்வில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்ட சில முரண்கள் இவை:
- ராமர் - இவருக்கு ஒரு ஆதர்ச எதிர்ப்பு பொருளாயிருந்தார். ஆனால் இவரது பெயரின் தொடக்கமே "ராம"சாமி.
- இவர் உடைக்காத பிள்ளையார் சிலைகளே இல்லை. ஆனால் தனது சொந்தக் குடும்பத்தின் பிள்ளையார் கோவில் ஒன்றை பொறுப்பு காரணமாக கவனிக்க நேர்ந்தது.
- பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்தார் இவர். தனது வாழ்வின் அறுபது
வயதுக்குப் பின் மணியம்மையாரை(அவர் முப்பதுகளில் இருந்தார்) உடல் நிலை
காரணமாக மணக்க நேரிட்டது.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திராவிடர் கழகம் கண்ட இவர், அண்ணாவின் திமுகவை எதிர்க்க காங்கிரஸின் காமராஜரை ஆதரிக்க வேண்டி வந்தது.
- பாம்பையும் பார்பனரையும் கண்டால் பார்பானை அடி என்பது இவரது கட்சியின் பிரபல வசனங்களில் ஒன்று. ஆனால் தனது திருமணத்தைப் பற்றி ஆலோசிக்க காலமெல்லாம் யாரை எதிர்த்தாரோ அந்த ராஜாஜியைத் தான் இவர் தேர்ந்தெடுத்தார்.
- சிலைகளே வேண்டாம் என்ற இந்த மனிதனுக்கு 108 சிலை வைக்க முடிவெடுத்தது இவரது கட்சி.
மேற்சொன்னவற்றில் சில திமுக உருவாகக் காரணமாயிருந்தன. ஆனால் திமுக
ரொம்ப வசதியாக, இவரைத் தலைவராக வரித்து ஆரம்பிக்கப் பட்டது. இந்த
போலித்தனமெல்லாம் வேண்டாமென்று தான் அண்ணா மறைந்த பின் கருணாநிதி தானே
தலைமை ஏற்றார் போலும்.
ஆரம்பத்தில் எல்லா மதங்களையும் சாடிக் கொண்டிருந்த இவர் ஏனோ இந்து
மதத்தை சாடுவதொடு நிறுத்திக் கொண்டார். மொத்தத்தில் கூர்மையான கேள்விகளை
சமூகத்தின் பால் எழுப்பிய தீரர் இவர். ஆனால் இவரைப் பின்பற்றியதாகத்
தோன்றியவர்கள் இவரது கருத்துக்களையே மறைக்க ஆரம்பித்தார்கள். மொத்தத்தில்
புத்தனுக்கு ஆன அதே துரதிர்ஷ்டம் இவருக்கும் நேர்ந்தது. என்ன
சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment