Thursday, September 27, 2012

துருவங்களின் வேற்றுமையில் ஒற்றுமை

ஒன்றை ஒன்று விழுங்கக் காத்திருக்கும் தேசங்கள், உள்ள  இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப் பரப்பின் அரசியல் ஊடு பாவல்கள் விநோதமானவை. ஆனால் ஒரே விதமான பிரச்னைகள். ஒரே விதமான பார்வைகள். ஒரே விதமான சாயம் பூசுதல்கள். பெண்களின் சமநிலையைக் கேள்விக்குறியாக பாவிப்பதிலிருந்து, இறுக்கமான சமூக அமைப்புகள் வரை ஒன்றை ஒன்று அச்சில் வார்த்த பிரதிபிம்பங்கள் தான் இந்தத் தேசங்கள். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான உறவு காந்தத்தின் பிளவு போல. பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் அதே   உறவுமுறை தான். இந்தியாவும் வங்கதேசமும் கட்டாயக் கூட்டணி உறவு கொண்டவை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள உறவு திருமணத்துக்குப் பிந்தைய காதல் விவகாரம் போல, இந்தியாவால் விட்டுக் கொடுக்கவும் முடியாது. வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் முடியாது. இவற்றை எல்லாம் ஒரே புள்ளியில் எடை போடக் கூடிய சமீபத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன். 

ஹினா ரப்பானி க்ஹெர் - பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர். இரு குழந்தைகளின் தாய். அவருக்கும் அந்நாட்டின் அதிபர் மகனுக்கும் உறவு சொல்லி அழைத்தது வங்கதேசத்தின் ஒரு நாளிதழ். உடனே நமது இந்தியப் பத்திரிக்கைகள் எல்லாம், நாட்டின் மிக முக்கியமான பிரச்னையாக அதனைக் கருதி எழுத ஆரமிபித்திருக்கின்றன. இதிலே முற்போக்கானவை என்றும் மேம்பட்டவை என்றும் தமக்குத் தாமே சான்றிதழ் கொடுக்கும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தான் முன்னணியில் நிற்கின்றன. ஆயிரமாயிரம் வெளியுறவு சார்ந்த பிரச்னைகள் இருக்கும் போதே அவருடைய நடையையும் உடையையும் பற்றி எழுதி போகும் இடத்துக்கு புண்ணியம் சேர்த்த நமது பத்திரிக்கைகள் இதனை எழுதுவது என்ன ஆச்சர்யம்.இதிலே என்ன குரூர நகைச்சுவை என்றால் இந்த விவகாரத்திற்காக அந்தப் பெண்ணின் மீது பத்வா பிறப்பிக்கப் போவதாக பாகிஸ்தானின் அடிப்படைவாதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.  நாள்தோறும் பத்து உயிர்கள் மதத்தின் பெயரால் பாகிஸ்தானில் பறிக்கப் படுவதை எதிர்த்து பத்வா பிறப்பிக்க ஒரு மதகுருவுக்கும் அங்கே தோன்றவில்லை.

இங்கு மட்டுமல்ல. தமிழகத்தின் முதல்வர் இலங்கைக்கு எதிராக பல கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக இலங்கை தமிழகத்தை ஏதோ மிட்டாய்க்கழும் பிள்ளை போல் நடத்தத் தொடங்கியதை சுட்டும் வகையிலும் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்த்தும் வகையிலும் செயல்பட்ட போது மிக எளிதாக இலங்கை ஊடகங்கள் அவரது பெண் என்ற நிலையைத் தான் விமர்சித்தன. அவ்வளவு ஏன்? தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வரை விமர்சிப்பவர்கள் எல்லாம் அந்தப் பாலின அடையாளத்தையே விமர்சிக்கின்றனர். 

மற்றவர்களைப் பற்றி சொல்லும் போது தமிழகத்தின் பெருமைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. தி.மு.கவின் பேச்சாளர்கள் முதல்வரின் பெண்மை பற்றி பேசாமல் இருந்தால் அவர்களுக்கு கொள்கை பரப்பவே முடியாது. அதே போல தமிழினப் பெருமை காக்கும் இயக்கங்களுக்கெல்லாம் எல்லாப் பிரச்னைகளிலும் பாரிய பிரச்னை நடிகைகளின் ஆடையும், அவர்களது பேட்டிகளும் தான். இவை எல்லாம் அரசியலின் கோர முகங்கள் என்று மட்டும் விலக்கிவிட முடியவில்லை. எத்தனை எத்தனையோ வேற்றுமைகளும் பிரிவினைகளும் இருந்தாலும் பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடும் பொது நமது துணைக்கண்டம் அவர்களை அளக்கப் பயன்படுத்துவது பாலின அளவுகோல் தான். அவர்களை விமர்சிக்கப் புகுமுன் அவர்களது தனிப்பட்ட வாழ்கை பற்றிய கேவலமான இடைச்செருகலைத் தான் முக்கியப்படுத்துகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல நமது துனைக்கண்டதுக்கே இந்த விஷயத்தில் வேற்றுமையில் ஒற்றுமை.

Monday, September 24, 2012

சிங்கம் கெளம்பிருச்சு!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்கிறது தமிழ். மன்மோகன்சிங்குக்கு இது தெரிய நியாயமில்லை! ஆனால் அப்படிப் பட்டவர் தான் அவர். இந்தியாவின் மானம் அலைக்கற்றை ஊழலில் கப்பலேறிய போது சிங்கம் சீறவில்லை. நிலக்கரி ஊழலால் இந்தியாவின் மின் உற்பத்தி சீரழிந்த போது சிங்கம் கிளம்பவில்லை. உச்ச நீதிமன்றம் பல முறை அரசைக் குட்டிய போதும் தலைப்பாகை கூட அசையவில்லை. மாநில அரசுகள் மத்திய அரசைத் துச்சமென மதிக்கும் போதும் அவரது வெண்தாடிக்குள் இருந்த சிரிப்பு மறையவில்லை. சீனா எல்லைகளை விழுங்க முயன்ற போதும் சொரணை தோன்றவில்லை. பாகிஸ்தான் பல முறை தன் கூலிப்படையை ஏவிய போதும் சீற்றம் எழவில்லை. இலங்கை விலாங்கு மீன் போல் துள்ளிய போதும் அவருக்கு தமிழன் எள்ளலாகவே பட்டான். அவரது அமைச்சரவை, கூட்டணித் தலைமைகளின் மைதானம் ஆன போதும் அவருக்கு உரைக்கவில்லை. ஆனால் அவரது பொறுமைக்கும் எல்லை வந்தது.

அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க முடியாத போதெல்லாம் அவருக்கு மீசை துடிக்கும். புருவம் நெரிக்கும். ரோஷம் பொங்கும். சிங்கம் கிளம்பிவிடும். அணுமின் ஒப்பந்தம் தான் இந்தியாவின் மின்-தேவைகளைத் தீர்க்கும் அரு மருந்து என்றார் 2008 -இல். ஆண்டுகள் நான்காகின்றன. ஒரு மாநிலமாவது மின் தடையைத் தீர்திருக்கிறதா. "அதெல்லாம் என் கேக்கற நீ" - என்பார் 'அன்னை' சோனியாவின் ஆசி பெற்ற இந்த அற்புதப் பிரதமர். அவருக்கு "செல்லம்" அமெரிக்கா தான்.

பழைய கதையில் ஒரு வங்காள ஏமாளி வில்லன்(கம்யூனிஸ்ட்) என்றால் இப்போது ஒரு வங்காள ஏமாளி வில்லி(மமதா தாங்க!). போன ஆட்சி அமெரிக்காவின் அணு வியாபாரிகளின் குறைகளைக் களைந்தது. இம்முறை அன்னையின் அருளாசி அமெரிக்காவின் பெரு வணிகத் தொடர்களுக்கு கிடைத்திருக்கிறது. "ஆஹா-வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று ஆனந்த் ஷர்மாக்கள் லாலி பாட, "மாற்றமில்லை" என்று உடைவாளை வீசி அண்ணாச்சி சிதம்பரம் ஆட, வந்துவிட்டது அந்நிய நேரடி முதலீடு.

முலாயம் இருக்கிறார் காவல் காக்க, பாலுக்கு பூனை போல. மாயாவதி இருக்கிறார் கரும்புக்கு யானை போல. காணாவிட்டால் நமது கழகக் கண்மணிகளோடு தமிழினத் தலைவர் இருக்கிறார். விதர்பா விவசாயிகளின் பாதுகாவலர், மட்டைபந்து சம்மேளனத் தலைவர் சரத் பவார் இருக்கிறார். நகைச்சுவை நவரசத்துக்கு லாலுவும் பாஸ்வானும். கேட்பானேன், அன்னையின் ஆட்சியில் ஒரே கொண்டாட்டம் தான். அம்மணிக்கு இப்போது வீரம் வேறு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் படை திரட்டுகிறார். ஊடகங்களில் கருத்து விதைக்கிறார். ஆனால் அறுவடை எல்லா ஏழை இந்தியன் தலையில் தான்.

பாரதி பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது, "பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்!"

Sunday, September 23, 2012

விலை பேசப்படும் தேசம்

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல. ஆனால் எனது தேசத்தில் நிகழும் சம்பவங்களை நான் கண்ட வாழ்வோடு பிணைத்துப் பார்த்து இதனை எழுதுகிறேன். எனது ஊர் திருநெல்வேலி, சிறு நகரம் என்று அடையாளப் படுத்தலாம். தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் சூழ்ந்த நகரம். கொஞ்சம் நகரத்தின் சந்தடிகள் இருந்தாலும் பெரும்பாலும் அமைதியான ஊர். நடுத்தர வர்க்கக் குடும்பம் என்னுடையது.

அரசு ஊழியமென்று முன்னர் இருந்து பின்னர் இந்திய அரசால் கைவிடப் பட்ட ஒரு நிறுவனத்தின் அதிகாரி என் தந்தை.என் தாயார் தான் ரொம்ப நாளாக எங்கள் வீட்டின் முதல்வர், நிதியமைச்சர். அப்பா கொஞ்ச காலம் மளிகை வாங்கி வந்தது என் நினைவில் இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக என் தாயார் தான் மொத்த குத்தகை. (அவருக்கு ஒண்ணும் தெரியாது என்று சலித்துக்கொண்டே அதிகாரம் செலுத்தும் வித்தை எங்கள் பெண்களிடம் தான் கற்க வேண்டும். ) என் தாய்க்கு சொந்த ஊர் நெல்லை தான். காந்திமதி அம்மன் சந்நிதி தெருவென்று அவளுக்கு உள்ள பெருமை சொல்லிலடங்காது. பிறந்த ஊரிலேயே வாழ்க்கைப் பட்டு, தனது வாழ்வை மண்ணோடு பிணைத்துக் கொண்ட பாக்கியசாலி அவள். அவளது பால்யம் முதலே அவள் விளையாடிய தெருக்களையும் அவள் பண்டங்கள் வாங்கித் தின்ற கடைகளையும் பார்த்து தன் மகனுக்கு(எனக்கு) கதை சொல்லி காட்சிப் படுத்தியவள். இன்றும் மாதச் சாமான் வாங்க அவள் தான் செல்கிறாள். அது ஒரு சுவாரஸ்யமான பயணம். நான் கல்லூரிப் படிப்பு முடிந்த பின், அவளோடு சென்று வந்த முக்கியமான பயணங்கள் அவை. சொந்தப் புராணத்தை இங்கே நிறுத்தி, கொஞ்சம் எங்கள் ஊர் சந்தைப்(மார்க்கெட்) புராணத்தை பாடலாமென்று பார்க்கிறேன்.

"நாளைக்கு மாச சாமான் வாங்கப் போறேன்" என்று ஆரம்பித்து மஞ்சளில் ஆரம்பித்து பட்டியல் இடுவாள். நாங்கள் பேருந்தில் தான் செல்கிறோம் என்று அப்பாவிடம் பூசிமெழுகி விட்டு தானியில் செல்வோம். எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள தானி ஓட்டுனர்களில் இவளுக்கென்று பல தம்பிகள். சிலரை வேண்டாமென்பாள். பேரம் பேசாமல், பெட்ரோல் விலையைப் பற்றி விமர்சிக்காமல், ஏற மாட்டாள். ஏறிய பின் புறவழிச் சாலையில் வண்ணார்பேட்டை அருகில் உள்ள மேம்பாலத்தில் இரு மருங்கிலும் காந்திமதி அம்மன் கோபுரமும் பாளை ராஜகோபால் சுவாமி கோபுரமும் "கன்னத்தில்" போடுவாள்.

காந்திமதி அம்மன் கோவில் வாசலில் உள்ள பூ விற்கும் முத்தம்மாக் கிழவியைப் பார்த்து,  மறைந்த எங்கள் கோமதிப் பாட்டியை நான் நினைவு கூர்வேன். என் தாயார் "நான் சின்னக் குழந்தையாய் இருக்கும் போதே இவள் பூ கொண்டு வர்றவள்" என்பாள். காந்திமதி அம்மனுக்கு இரு மாலைகளும் ஒரு தாம்பூலமும் படைத்து விட்டு சந்தைக்கு உள்ளே செல்வாள். "எந்த ஊர் சந்தையும் நம்ம ஊர் மாதிரி செழிப்பு இல்லை" என்பாள். அவளது தந்தை வழி முன்னோர்கள் விவசாயம் செய்த ஊர் பல்லிக்கோட்டை. அங்கிருந்து அவளது தந்தைப் பிராயமான கிழவரிடம்,  பூசணிக் கீற்றும் தடியங்காயும் வாங்கும் போது ரெண்டு ரூபாயாவது குறைக்கச் சொல்லி சண்டையிடுவாள். "என்ன பாப்பா நீ, வேலையை ஏத்தவே மாட்டேங்கியே!" என்று சலித்தவாறே கிழவர் காயைத் தருவார்."உங்க அம்மாவை எனக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே தெரியும் தம்பி" என்பார்.

ஒரொரு கடையாக காய்களைப் பார்த்து, விலை கேட்டு, அளவை சரி பார்த்து, விலைக்கு பேரம் பேசி, காய் வாங்குவதற்குள் சந்தையை ஒரு சுற்று சுற்றி ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். அப்புறம் கொத்துமல்லிக்காரரிடம் "இந்தா பாரு.. கட்டு அஞ்சு ரூபாய்க்கு மேல குடுக்க மாட்டேன்" என்று ஆரம்பித்து, ஒரு பத்து நிமிடம் இருவரும் வாய் ஓய்ந்த பின், "அக்கா, சும்மான்னாலும் எடுத்துக்கோ, இது கட்டாது" என்பார் அவர். "என்கிட்டே கூட காசு வாங்காம இருக்க மாட்டியே" என்று ஏசிக் கொண்டே இவளும் ஒரு வழியாக "காய் வாங்கும் படலத்தை" முடித்திருப்பாள்.

அப்புறம் கோவிலின் பின்புறத் தெருவில், "பாய் கடை கூட்டமாயிருக்கும். முதல்ல அரிசி சொல்லலாமென்று", கிருஷ்ணன் செட்டியார் கடையில் அரிசியைப் பட்டியலிட்டு விட்டு, பாய் கடைக்குள் நுழைய முயற்சிப்பாள். அங்கே எப்போதும் கூட்டம். என் தாயார் தலையைக் கண்டதும் அவர் "சகோதரி வருக" என்பார் செந்தமிழில். "நேராச்சு பாய்! எனக்கு சீக்கிரம் குடுங்க" என்று ஆரம்பித்து, "ஏய் காஜா சீக்கிரம் கொண்டாடா" என்று கடையில்  வேலை செய்யும் அண்ணன்மாரை ஏவி, ஒரு வழியாக சலவை, குளியல், அழகுச் சாமான்கள் வாங்கி முடிக்க ஒரு முக்கால் மணி. 


பிறகு என்னிடம் "கோமதி விலாஸ்ல எதாவது டிபன் சாப்டரையா" என்பாள். அது அவளது தாயின் தூரத்து உறவினர் கடை. இப்போது கடை மூடப்பட்டுவிட்டது. இப்படி அது முடிந்து, அருகே உள்ள நரசிம்மர் கோவிலில் வாசலிலிருந்தே ஒரு கும்பிடு. கூலக்கடை பஜார் வழியாக அடுத்த ரத வீதியில், எண்ணை, வெண்ணை, நெய் வாங்கி விட்டு, மொத்த மளிகைக் கடையில் பொருட்களைப் பட்டியலிட்டு வாங்கி அங்கு கொஞ்சம் கதை பேசி, பூஜைத் திரவியங்களை வாங்கி முடித்து ஒரு தானியைப் பிடித்து(இங்கும் சில வாடிக்கைத் தம்பிகள் உண்டு, என் தாயாருக்கு!) வீடு வந்து சேர்வது ஒரு சுகமான பிரயாணம். பொருள் வாங்குவதிலேயே தன் வாழ்கையின் வேர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பல்லவா இது.

இது மட்டுமா? இட்டடியிலிருந்து காய்களும் வாழைகளும் கொண்டு வரும் அவ்வையார் அம்மாள் எங்கள் குடும்ப உறுப்பினரைப் போல. அவரது குடும்பமே எங்களுக்கு பழக்கம். காபிபொடி திரிக்கும் அண்ணனிலிருந்து தண்ணீர் கொண்டு தரும் அண்ணன், பூ தரும் சிவா அண்ணன் வரை பலரையும் ஒரு உறவு போல அல்லவா நாங்கள் நினைக்கிறோம். பல வருடங்களாக நெய் கொண்டு தந்த வள்ளியூர் அம்மாளை இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது. என் குழந்தைப் பருவத்தில் பால் கொண்டு வந்த பாலுக் கோனார் முதல் வளர்ந்த பின் பால் விற்ற சுப்பக்காள் வரை என் நினைவில் இருக்கிறார்கள்.


 இந்த அனுபவங்களும் இந்த மனிதர்களும் இல்லாத வாழ்கை வீண் அல்லவா. இந்த மனிதர்களைத் தான் மாண்புமிகு மன்மோகன்சிங், அறிவில் சிறந்த சிதம்பரம், ஹார்வர்ட் மோன்டேக் ஆகியோர் இடைத் தரகர்கள் என்று பழிக்கின்றனர். இவர்களுக்கு நாங்கள் கூடப் பத்து ரூபாய் கொடுத்தாலும் எங்கள் மனிதர்களுக்கு எங்கள் வேர்களுக்கு எங்கள் நாட்டுக்குத் தானே தருகிறோம்.

இப்போது அமெரிக்காவிலிருந்து இந்தப் பதிவை மேற்கொள்ளும் போது கூட நான் வாரச் சாமான்களை வாங்கி வந்து விட்டுத்தான் வந்திருக்கிறேன் . இங்கே மகிழ்வுந்து இல்லாமல் வாழ்க்கையில்லை. எல்லாமே பெரும் கடைகள். நடக்கிற தூரமும் இல்லை. விலையிடும் இடம் தவிர வேறு எங்கும் நீங்கள் மனிதர்களைக் காண முடியாது. பொருட்களைத் தேர்வு செய்ய நீங்கள் மலைக்க வேண்டும். "எது எங்கே இருக்கிறது" என்று கூடப் புரியாத ராட்சஷக் கடைகள். "தரம் மேம்படும்" என்கிறார்கள் நம் நாட்டு மேதாவிகள். இங்கு கூட அழுகிய தக்காளிகளும் பிரிந்த சரக்குகளும் கடை விரிப்பது உண்டு.  வாங்கி நட்டப் பட்டதும் உண்டு. வால்மார்ட் போன்ற கடைகளில் அதைப் பற்றிக் கேட்டாலும் சட்டை செய்ய மாட்டார்கள். நமது வணிகர்கள் இப்படிச் செய்தால் சும்மா இருப்போமா? நமது நாம் உலுக்கி விட மாட்டோமா.

எல்லாவற்றையும் இயந்திரப் படுத்தி, தரம் என்ற பெயரால் விலைகளை அதிகப் படுத்தி, வாழ்வை அன்னியப் படுத்தும் இந்த பூதங்கள் எனக்கு வேண்டாம். முகம் தெரிந்த எங்கள் மக்களுக்கு, செல்லும் பணத்தை இந்த முகம் தெரியாத, அசுர வணிகத் தொடர்களுக்கு திருப்பி, முதலாளிகளாக இருக்கும், எங்கள் மக்களை இந்த பெரும் வயிற்று கபந்தன்களுக்குஅடிமைப் படுத்தும் முடிவு தேவையில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் சொல்வதை போல் என் பாட்டன், வ.உ.சி மானம் நாட்டின் மானம் காக்க கப்பல் விட்டான், நீங்கள் அடிமைப் படுத்த அல்லவா இதைச் செய்கிறீர்கள்.


 "ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்" என்று பாடிப் பாடி, தேசப் பற்றை ஏற்றி, நாங்கள் விரட்டியடித்த அதே துரைமார்களின், தூரத்து சொந்தக்காரர்களுக்கு வழி விடுகிறது காங்கிரஸ் அரசு. மொகலாய மன்னன், கூறு கெட்டு, வழி விட்டு அரசை இழந்த கதை மீண்டும் அரங்கேறப் போகிறது.

நாட்டுடைமைகளை உருவாக்கி வேலை வாய்ப்பு பெருக்கிய நேருவின் குடும்பம் நாட்டை விற்கத் துணிந்திருக்கிறது. சோனியா அவர்களே, நீங்கள் ஒன்றும் இந்திரா அல்ல. இந்தியாவின் இதயத்தை உலுக்க. சக்கரவர்த்தித் திருமகளே ஆனாலும் தவறிழைத்த பின் அவரும் தோற்கடிக்கப் பட்டார். மமதா பல விதங்களில் தவறியிருக்கலாம், ஆனால் இந்த அவரது முடிவு சரியே! தமிழக முதல்வர் இட்ட தாழைத் திறவாமல், தமிழகத்தை இந்தச் சூறையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும். அன்னியப் பொருட்களை வாங்க மாட்டோம் என்று, வெள்ளையனின் நாடியை அறுத்த மராட்டிய சிங்கம் திலகர் போன்ற பெருமக்கள் அன்றே காங்கிரச்சைப் பழித்தது சரி தான்.