Sunday, October 28, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள் - 5

பாடல்களுக்காக வெற்றி பெற்ற திரைப்படங்கள் உண்டு தமிழ்த் திரையில். பாடல்கள் மட்டுமே திரைப்படம் என்ற காலமும் இருந்தது. இப்படிக் காலத்தால் அழியாத பல பாடல்களில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பதிவு செய்து வருகிறேன். இதுவே இந்த வரிசைத் தொடரில் நிறைவுப் பகுதி.

11. சரித்திரக் கதாபாத்திரங்களைத் திறம்படக் கையாளும் நடிகர்கள்  மிகக் குறைவு. நடிகர் திலகம் அவர்களின் நடிப்பைப் பற்றி நான் சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. மிகை நடிப்பு என்று சிலர் இன்று விமர்சிக்கிறார்கள். நடிப்பென்றால் என்னவென்று இலக்கணம் வகுத்த அந்த ஆசிரியன், இத்தனை இருக்கிறது என்று காண்பித்தால் தான், அதில் சிறு பங்காவது சென்றடையும் எனக் கருதியிருக்கலாம். அவர் தான் நமக்கு ராஜராஜ சோழன். அவர் தான் நமக்கு வீர பாண்டிய கட்டபொம்மன். அவரே வ.உ.சி.  எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் அதில் தன் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை அந்த மா பெரும் மனிதன். அவர் ஏற்ற சரித்திர நாயகர் வேடங்களில் ஒன்று தான் கர்ணன் எனும் ஏற்ற மிகு பாத்திரம்.      
 
கர்ணன் திரைப்படம் பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த வெற்றிக் காவியம். அந்தப் படைப்பின் வீச்சு நாற்பத்தெட்டாண்டுகள் கழிந்தும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. படத்தின் கதை இந்தியாவின் ஆன்மாவுக்கு நெருக்கமான மகாபாரதக் கதை. கதையின் தலைவன் கண்ணனல்ல. கன்னன், ஆம் கர்ணன். நட்புக்கு இலக்கணம். வீரத்தின் விளைகளம். பெற்ற தாயிலிருந்து படைத்த தெய்வம் வரை அவனை வஞ்சித்தது துயரம். தீங்கு கருதாத நல்லான் ஒருவன் தன் நட்புக்காகத் தன் சொந்தங்களையே எதிர்க்கிறான். தோற்கும் விதி அறிந்தே தோற்கிறான். ஆட்டத்தின் விதிகள் அவன் நிர்ணயித்தது அல்ல. ஆட்டத்தின் வெற்றியோ தோல்வியோ அவனது அல்ல. ஆனால் ஆட்டத்தில் அதிகம் இழந்தது அவன் தான். துன்பகரமான அவன் வாழ்வில் அவன் கண்டதெல்லாம் அவமானமும் ஏமாற்றமும். எனினும் அவன் ஏற்றத்துக்கு ஒரு குறையுமில்லை. வீரம், மானம் என்ற இரு பண்புகளின் குவியலாகவும், நட்பின் சிகரமாகவும், தன் மரணத்தின் மூலம் கண்ணனையே யுதிட்டிரன் ஏசும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் கர்ணன். அந்தக் கர்ணனின் சிறப்பைக் கண்ணெதிரே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். கர்ணன் என்றால் எப்படி நடிகர் திலகமோ அப்படியே கண்ணன் என்றால் திரு. என்.டி.ராம ராவ் அவர்கள். அவர் உருவமும் நடிப்பும் அந்தக் கண்ணனின் சாதுர்யத்தை நம் கண் முன்னே கொண்டு வருபவை.

கர்ணன் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாமே இனிமையானவை. வாடா வட இந்திய இசையை அடித்தளமாக கொண்டு சமைக்கப் பட்டவை. திரையிசைச் சக்கரவர்த்தி தானே என்று என்று திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டியம் கூறியவை. அவற்றில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. முதல் பாடல், "கண்கள் எங்கே" என்ற இனிய பாடல். திருமதி. பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் அமைந்த தெய்வீக ராகம். காதலுக்கே உரிய சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த இனிய ராகம். கர்ணனைக் கண்ட சுபாங்கி பாடும் பாடல். சுபாங்கியாகத் திரையில் தோன்றுபவர் மறைந்த திருமதி. தேவிகா அவர்கள். இனிமையான அந்தப் பாடலில் எனக்குப் பிடித்த சில வரிகள். 
 
அவனைக் கண்ட பின் அவள் கண்களைக் காணவில்லையாம். அவள் காண்பதெல்லாம் அவனாகவே இருக்கின்றனவாம். அவள் அறிவும் மனமும் பேசிக் கொள்வதாகவே நமக்குத் தோன்றும். அவள் அறிவு கேட்கிறது 
"கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?"
அவள் மனது சொல்கிறது
"கண்ட போதே சென்றன அங்கே..
 கால்கள் இங்கே மேனியும் இங்கே ...
காவலின்றி வந்தன மேனியும் இங்கே.."

 கண்களே உடலுக்குக் காவல் என்ற அழகிய சிந்தனை நம்மை வியக்க வைக்கிறதென்றால், சுபாங்கியின் பாத்திரத்தை இரு வரிகளில் கோடிட்டுக் காட்டி, கண்ணதாசன் நம்மைக் கட்டிப்போடுகிறார். அந்த வரிகள்,
"இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் 
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்"
எந்தப் பிறப்பின் கேள்வி அவனைத் துன்புறுத்தியதோ அதை அவள் பொருட்படுத்தாதவள் என்றும் அவனைத் தன் தலைவனைக் கொள்பவள் என்றும் உணர்த்தும் அந்தப் பாடலை "https://www.youtube.com/watch?v=mrzVWyWe7E8" காணலாம்.


அதே கர்ணன் திரைப்படத்தில் கர்ணனின் வாழ்வையும் அவன் ஏற்றத்தையும் சொல்லும் பாடல் எனக்குப் பிடித்த தலையாய பாடல். சீர்காழி கோவிந்தராஜனின் ராஜகம்பீரக் குரலில் கண்ணனின் எண்ணவோட்டமாக வரும் தேன்தமிழ்ப் பாடல். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்று கவியரசு நமக்கு எடுத்தோதிய பாடல். இந்திரன் அருளிய சக்திகணையை அந்த மாயவன் தடுத்து அர்ச்சுனனைக் காப்பாற்றுகின்றான். தன் ஒரு அத்தை மகனைக் காத்து விட்டு, அதே அத்தையின் மூத்த மகனை அழிக்க யோசனை சொல்கிறான் அந்த கண்ணன். வாழ்நாளெல்லாம் நன்மையே செய்து வந்த கர்ணன் தவறியது மூன்று இடங்களில். 
ஒன்று, பாஞ்சாலி துகிலுரியப் பட்ட போது அவன்  பேசிய பேச்சு. ஐவர்க்கழியாப்  பத்தினி என்ற அவள் நிலையை இகழ்ந்தது. அது அவன் மனத்திலிருந்த மாறாத வடுவையும் மறக்காத காதலையும் காட்டியது.
இரண்டு, பரசுராமரிடம் பாடம் படிக்க அந்தண வேடம் இட்டது, அதற்காக அந்த குரு தந்தது மரண ஓலை.
மூன்று. போர் நிகழும் தருவாயில் சல்லியனை அவமதித்தது. அது கூட கர்ணன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவே. 
 
 

ஆனால் கர்ணனுக்கு அந்தத் தெய்வம் இழைத்த கொடுமை பிறப்பிலிருந்தே தொடங்குகிறது. கன்னிப்பெண்ணுக்கு அந்த மகவைப் பிறக்க வைத்து, அவள் கையாலேயே ஆற்றில் மிதக்க வைத்து. தேரோட்டி மகனாக வளர வைத்து, தம்பியரையே இகழ வைத்து, அவனுக்கு இயற்கை தந்த காப்பை இந்திரனைக் கொண்டு தானம் பெற வைத்து, பெற்ற தாயே அவனது மரணத்தை உறுதி செய்ய வைத்து, அந்த ஆதிமூலம் இழைத்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல. பார்தனிட்ட கணை கர்ணன் உயிரைத் தொடவில்லை. அவன் புண்ணியம் காத்தது. அந்தப் புண்ணியத்தையும் தானே பெற்று அவன் வேதனை மிக்க வாழ்வுக்கெல்லாம் காரனமாய் இருந்த அந்தத் தெய்வத்தின் மனச் சான்று பேசும் பாடலாக இது. எனக்குப் பிடித்த வரிகள்,
 
"தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை..
ஊர்பழி ஏற்றாயடா.. நானும் உன் பழி கொண்டேனடா.." 

இந்த வரிகள் மிக முக்கியமானவை. தாய் என்பவள் உலகில் எத்தனை தவறினும் ஏற்கக் கூடியவள். தன் மகவுக்காகப் பேசக் கூடியவள். அவளே இவனை வஞ்சித்தாள். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று ராமாயணத்தில் அந்த இன்னொரு கர்ணன்-கும்பகர்ணன் உரைப்பானே - அந்தச் சிறப்பு பெற்ற தம்பியும் இவனை வஞ்சித்தான். தாயினும் சாலப் பரியும் அந்தத் தெய்வமும் இவனை வஞ்சிக்கிறது. அதனை ஒப்புக்கொண்டு

 "செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து 
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா"

 
என்று அந்தப் பரம்பொருளே பேசக் கூடியவன் இந்தக் கர்ணன் என்று கவிப்பேரரசு நம்மக்கு உணர்த்துகிறார். அந்த வரலாற்றுச் சோகப் பதிவை "https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4" காணலாம். இந்தப் படைப்பின் வலுவை, கெளதம் என்ற சிறுவன் பாடும் போது, கர்நாடக இசை மேதைகளே உருகியதை "https://www.youtube.com/watch?v=Xd3C3hnMN7Q&feature=related" கேட்கலாம். 
 
12. இறுதியாக உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட புரத்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது. 
 
 அந்தக் கூட்டம் அடிமைப்  பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்" 

 திரையில் தோன்றும் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ள "https://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk" என்ற பதிவைக் கேளுங்கள்.

                                *************************முற்றும் **********************

Saturday, October 27, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள் - 4

எப்போதுமே கலைக்கான நோக்கங்கள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கின்றன. கலை மக்களைச் சென்றடையா விட்டால் கலை சமூகத்தைப் பிரதிபலிக்கா விட்டால் என்ன பயன் என்பது ஒரு வாதம். கலை கலைக்காக, ரசனைக்காக என்பது மற்றொரு வாதம். இரண்டுமே பொருள் செறிந்த வாதங்களே  எனினும், முதல் வாதமே ஜனநாயகமானது என்பது என் கருத்து. உள்மன வெளிப்பாடே கலை என்றாலும், ஒரு அழகிய எண்ணத்தின் வெளியீடாக அது இருத்தலே முக்கியம். அப்படி பொருள் செறிந்த பல பாடல்கள் தமிழ்த் திரை தோன்றிய நாள் முதலே இருந்து வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த சில பாடல்களைப் பதிவு செய்கிறேன். இது வரை ராகங்களோடு பாடல்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தேன். இப்பதிவில் ராகம் தெரியாத ஆனால் என்னைக் கவர்ந்த பாடல்களைப் பதிவு செய்கிறேன்.

8. கவியரசு கண்ணதாசன் தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதிக்கு அடுத்து நிற்பவர் என்பது என் கருத்து. பாரதி ஒரு யுகத்தின் தொடக்கம். இனிய நடை, புதிய கருத்துக்கள், எளிமையான சொற்களில் வலிமையான கருத்துக்கள் என்று, பாட்டுத் திறத்தால் இந்த வையத்தை பாலிக்க வந்த பராசக்தியின் மைந்தன் அவன். அவனது வரிசையில் வைத்துப் பார்க்கத் தக்க எல்லா இலக்கணங்களும் நிரம்பியவர் கண்ணதாசன். பாரதி தன்னை உணர்ந்து, தன் சமூகத்தை நொந்து பாடுவானே, "நல்ல சுடர் மிகு அறிவுடன் எனைப் படைத்தாய்" என்று. அந்த வலியைக் கவிஞரும் உணர்ந்திருக்கிறார். அதனால் தான், "நானே ராஜா நானே மந்திரி" என்று இந்தச் சமூகத்தைப் பார்த்து அவர் சவால் விட்டார். இருவரையும் நான் நேசிக்கிறேன். ஒருவரின் புகழை இப்பதிவில் வாசிக்கிறேன்.

இரவா இசையுடையது கவிஞரின் எழுத்து. இசை என்றால் புகழும் பண்ணும். எளிமையான சொற்களால் வாழ்வின் உண்மைகளைப் பட்டியலிடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். அப்படிப் பட்ட பல பாடல்களில் ஒன்று, "ஒரே ஒரு ஊரிலே" என்ற பாடல். படிக்காத மேதைகளான கண்ணதாசனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்த படைப்பு. திரு. பீம்சிங் அவர்களின் "ப" வரிசைப் படங்களில் இது ஒரு காவியம். எஸ்.வி.ரங்காராவ் என்ற மாபெரும் கலைஞன் நடித்த திரைப்படம். அவருடைய இணையாக பசுப்புலேட்டி கண்ணாம்பா. இசை மறைந்த திரு.கே.வி. மகாதேவன். பாடலைப் பாடியோர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன். மணியோசை போன்ற குரல் வளம். இவர் குரல் வளத்தால் செழுமை பெற்ற தமிழ்ப் பாடல்கள் ஏராளம். கூடவே திருமதி. ராஜலக்ஷ்மி.


 இந்தப் பாடலைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பங்குச் சந்தை வியாபாரத்தில் தேர்ந்த ஒருவர். அதன் மூலமே ஒரு தலைமுறையின் வாழ்வுக்கான வருவாயை ஈட்டியவர். வாழ்வின் மாலைப் பொழுதில் நிற்பவர். மணி விழா கண்டவர். மூன்று மகன்கள். ஒரு மகள். மூன்று  மகன்களும் மணமானவர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்த தருணத்தில் பங்குச் சந்தை, நட்டத்திலும் பங்கு கொள்ள வைக்கிறது. சேமிக்காததாலும் ஆடம்பர வாழ்வினாலும் விரைவில் ஏழ்மையை அடையும் நிலை வருகிறது. மகன்கள் தங்கள் வாழ்வை மட்டும் பார்த்தால் போதும் என எண்ணுகிறார்கள். அந்த வயதான தம்பதிகள் மகளின் திருமணத்தை நடத்த முடியாமலும், வாழ்வின் நிலை மாறியதை தாங்க மாட்டாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் உறவில் ஒரு தாய் தந்தையற்ற பிள்ளை. அவனையும் இவர்களே வளர்த்து வருகிறார்கள். பெற்ற பிள்ளைகள் கை விட்ட போதும் பெறாத அந்தப் பிள்ளை, இந்தப் பெரியவர்களுக்கு உதவுகிறான் என்று வரும் அந்தக் கதை. அந்தக் கதையில் ஒரு கட்டம். இந்தப் பெரியவரின் பெயரக் குழந்தைகளை மகிழ்விக்க அந்தப் பெறாத பிள்ளையும் அவன் மனைவியும் பாடும் கதைப் பாடல் தான் இது. திரையில் வெகுளித் தனமாகத் தோன்றும் கெட்டிக்கார நடிப்புக்குச் சொந்தக்காரர் நடிகர் திலகம். அவரோடு திருமதி. சௌகார் ஜானகியும்.

இந்தப் பாடல் ஒரு கதை சொல்கிறது. அந்தக் கதையும் ஒரு musical தான். "ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" என்று பிள்ளைக் கதை போலத் தொடங்கி பல பிள்ளைகளுக்கு பாடம் சொல்கிறார் கவிஞர். 

"ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை, 
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை"'
என்று அந்தப் பிள்ளைகளின் தன்மையையும் தரத்தையும் பட்டியலிட்டு விட்டு, கவிஞர் சொல்கிறார்,
 " பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் - அதைப்
   பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளர்த்தார்
  உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார் -  அதன்
  உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்"
பின்னர் மக்களைப் பார்த்து சொல்கிறார்
"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
 
துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
 நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா - நன்றி
கேட்ட மகனை விட நாய்கள் மேலடா"
எளிமையான கதைப் பாடல் முடியும் போது எத்தனை அழுத்தமான உணர்வு மனதில் பதிகிறது. படத்துக்காக எழுதப் பட்ட பாடலா இது. சமூகத் தரத்துக்காக சொல்லப் பட்ட பாடல் அல்லவா. ராகம் தெரியாவிட்டாலும் மனதைச் சுண்டும் பாடல். பாடலை "https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y" என்ற பதிவில் காணலாம். 

9. மேற்சொன்ன பாடல் பெற்றோர்க்கும் பிள்ளைக்குமான உறவென்றால், இந்தப் பாடல் ஊடல் கொண்ட கணவன் மனைவிக்கு நடுவே நடக்கும் நாடகப் பாடல். இந்த ஊடலுக்கு அவனது கையாலாகாத் தனமும் தாழ்வு மனப்பான்மையுமே காரணம். ஆண்களின் நிலவுடைமைச் சமுதாயமாகவே பல நூற்றாண்டுகளாக பாரதம் இருந்து வந்திருக்கிறது. பெண்கள் விவசாயக்  கூலிகளாகவும் குடும்பத் தொழிலில் உதவியாளர்களாகவும் இருந்திருக்கிறார்களே ஒழிய பொதுவிடங்களில் அதிகாரம் செலுத்தும் நிலைகளில் இந்தியச் சமூகத்தில் அவர்கள் இருந்ததில்லை. சில பத்தாண்டுகளாகத் தான் இது மாறத் தொடங்கி, சம நிலையில் ஆண்களோடு போட்டியிட்டு, பணிகளில் பெண்கள் இடம் பெறுகிறார்கள். ஆனால் பரம்பரை என்றும் பாரம்பரியம் என்றும் அடக்கி ஆள்வதே இயல்பு என்றும் எண்ணங்கள் ஊறிப் போயிருக்கும் ஆண் மனம், வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி குடும்பத்தை வழி நடத்தும் தலைவியாக பெண்ணை ஏற்பதில் தடங்கல் கொள்கிறது. சுயம் பாதிக்கப் பட்டதாகவும் அவள் தன்னை மதியாததாகவும் கருதுகிறது. முன்னேற்றம் பெற்று விட்டதாகச் சொல்லப் படும் இந்தக் காலத்திலேயே கூட இது ஏற்படும் போது, சுமார் நாற்பதாண்டுகள் முன்பு நிலை என்னவாக இருந்திருக்குமென்று ஊகிக்க முடிகிறதல்லவா. 


சூர்யகாந்தி என்ற திரைப்படத்தில் செல்வி. ஜெயலலிதாவும் மறைந்த திரு.முத்துராமனும் நடித்த திரைப்படம். இந்தப் படத்தில் மேற்சொன்ன ஒரு அம்சம் தான் கதையின் மையக் கரு. காதலித்துக் கடிமணம் புரிந்த அந்தத் தம்பதிக்குள் இந்த சுயம் சார்ந்த பிரச்னைகள் ஊடலைத் தோற்றுவிக்கிறது. அவனது அஹங்காரத்தை அவள் எப்படியோ தணிவிக்க முயல்கிறாள். ஆனால் அது நீடித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு தருணமாக அவன் அவளை விட மேல் எனச் சுட்ட முயல்கிறான். தற்செயலாகவோ அவளது மேலான எண்ணங்களாலோ அவளே மேம்பட்டவள் ஆகிறாள். அப்படி அவனது சுயம் காயப் பட்ட வேளையில், ஒரு பொது நிகழ்வில் ஒருவர் வருவது தெரியாமல் மற்றவர் வர, அங்கே பாடலும் அவர்கள் கதையைப் பேசுகிறது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இந்தக் காட்சியில் யார் பாடுவது போல் இருந்தால் சிறப்பு என்று விவாதம் நடந்த போது செல்வி. ஜெயலலிதா கவிஞரையே பாடுவது போல காட்சி அமைக்க யோசனை சொன்னாராம். அந்தக் கவிஞன், காலத்துக்கும் பேசப் படும் பாடலில் தோன்றினான். அவனுக்கு குரல் தந்தது டி.எம்.எஸ்.
சுயம் காயப் பட்ட மனிதனின் பாடல் என்றாலும் கூட, கவிஞர் பொதுவில் இல்லாதவன் நிலையை எண்ணிப் பாட்டை அமைத்துள்ளார். அந்தக் கதைக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும் அழகிய பாடல். பாடல் முழுவதுமே தர வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அளவு கருதி இந்தச் சில வரிகளைச் சுட்டுகிறேன்.
"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது...
கருடா சௌக்யமா? - யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே.. - கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..." இப்படி ஆரம்பமே அமர்களப் படுகிறது. 
வரிவரியாகத் தமிழ்ப் பெரியவர்களை எல்லாம் துணைக்கு அழைத்து தன் வாதத்துக்கு வலிமை தேடும் அந்த மனம் பின்னர் கேட்கிறது
"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் - அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?" 
இப்படித் தத்துவமும் தமிழுமாக மனதின் ரணத்தைச் சொன்ன பின், நேரடியாக அவளைக் குற்றஞ்சாட்டி, 
"நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே...
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே" 
என்னும் போது அந்த மனதின் வலியை அப்படியே அவளுக்குத் தந்து விடுகிறான் அவன். காட்சியில் கவிஞர் ஞானி போலத் தோன்ற, காயம்பட்ட உள்ளத்தோடு குற்றம்சாட்டும் பாவனையில் முத்துராமனும், புரியவைக்க முடியாத வேதனை, கணவன் மனம் புண்படுகிறானே என்ற யோசனை இப்படிப் பரிதவிக்கும் பாவத்தில் செல்வி.ஜெயலலிதா என அற்புதமான காட்சியை, "http://www.youtube.com/watch?v=r39pR0j144g" என்ற பதிவில் காணலாம்.
10. இந்தப் பதிவில் மூன்றாவது வகையாக நான் கொள்ளும் பாடல், ஒரு தாலாட்டு. வறுமையே வாழ்வாகிப் போன பெற்றோர் இருவர் தன் மகவுக்குப் பாடும் தாலாட்டு. அவள் எப்படியேனும் தன் மகனுக்கு ஒரு பொன்னுலகு காத்திருக்கிறது என நம்பிக்கை தெரிவிக்க, உள்ள நிலை உண்ணவும் வழியில்லை எனத் தெரிவிக்கிறான். துலாபாரம் என்ற திரைப்படம். மலையாளத்திலிருந்து தமிழ்ப் படுத்தப் பட்ட படம். திரு. ஏ.வின்சென்ட் அவர்கள் இயக்கிய திரைக் காவியம். திரு.ஜி.தேவராஜன் இசையமைப்பில் டி.எம்.எஸ். அவர்களும் திருமதி.பி.சுசீலா  அவர்களும் பாடிய அற்புதப் பாடல். 


முதல் நான்கு வரிகள் சொல்லும் பாடலின் தரத்தை. அவள் பாடுகிறாள்..
"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில் 
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே ". 
அவளது கற்பனையை எண்ணி நகைத்தவாரே அவன் பாடுகிறான்
"பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் 
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே"
நெஞ்சில் ஈரம் உள்ளோரை எல்லாம் நெகிழ வைக்கும் இந்தப் பாடல், 
"கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை" 
என்று முடியும் பொது உங்கள் இமையோரம் நீர் கசிந்திருக்கும். காட்சியை "http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw" என்ற பதிவில் காணுங்கள்
காட்சியில் தோன்றும் ஏ.வி.எம்.ராஜனையும் சாரதாவையும் இயல்பான நடிப்புக்குப் பாராட்டிக்கொண்டே..
 

Tuesday, October 23, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள்-3

ஒரு படைப்பு படைப்பாளியின் வெளிப்பாடு. படைப்பாளியின் மனச் சுரங்கத்தில் அறிவுத் தேடலின் அற்புத வெளியீடு. அது படைக்கப் பட்ட காலத்தின் குறியீடாக இருப்பது இயல்பு, ஆனால் எக்க்காலத்துக்குமான குறியீடாக ஒரு படைப்பு விளங்குவதென்றால் அது அந்தக் கலையின் உச்சம். வாழ்வின் உண்மை. அப்படிப் பட்ட சில உண்மை பேசும் படைப்புக்களைப் பட்டியலிடுவதில் உள்ள படியே எனக்கு மகிழ்ச்சி.

5. நெஞ்சில் நின்றாடும் ராகங்களைப் பட்டியலிடும் போது இந்தப் பாடலை நான் விட்டு விட்டால், இந்தப் பாடலின் குறை அல்ல அது. எனது குறையே. பாலமுரளி கிருஷ்ணா என்ற மேதையின் குரல் அந்தக் கண்ணனின் குழல் போன்றதே. இசையெனும் திருவையாற்றில் அந்தத் தியாகய்யர் செய்த உஞ்சவ்ருத்தி பல ராகங்களின் உற்பத்தியில் முடிந்தது. இந்த நூற்றாண்டின் ராக -வ்ருத்தி இவரால் ஏற்பட்டது என்றால் அது மிகை அல்ல. இவர் பெயரைத் தமிழ் படுத்தினால் "சின்னக் கண்ணன்". இவரது குரலைத் தமிழ் படுத்தியவரும் சின்னக் கண்ணன் தான் - இளையராஜா. இருவரும் இரு மேதைகள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மதிப்பு அளப்பரியது. ஒருவர் கலைத் தாயின் நெற்றிச் சுட்டியில் பதித்த நல்முத்து. மற்றொருவர் அவள் அணிந்த கருவைரம். இருவரும் சேர்ந்து செய்த அணி ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" எனும் தென்றல்.பாடல் மட்டும் சாகாவரம் பெற்றதல்ல. பாடலில் தோன்றுபவரும் திரைத்துறை மார்கண்டேயன் திரு. சிவகுமார் அவர்கள். கூடவே ஸ்ரீதேவி. பாடல் இடம் பெற்ற திரைப்படம் கவிக்குயில்.


"சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி..."

"நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?"

அவள் நெஞ்சில் ஒரு ராகம் நின்றாடுகிறது. அவன் நெஞ்சில் அவள் நிழலாடுகின்றாள். அவனுக்குக் கண்ணன் நல் ஆசானாய் உற்ற தோழனாய் விளங்குகிறான். பாரதி சொல்வானே, தங்கை சுபத்திரையைக் கவர்ந்திட நண்பனுக்கு யோசனை சொல்லும் அற்புதத் தோழன் கண்ணனென்று, அதே போல் அவள் நெஞ்சில் நினைத்த ராகத்தை அவன் குழலில் நனைத்துத் தருகிறான் அந்த மாயக் கண்ணன். அவனுக்கு அவள் மேல் இருந்த சிலிர்ப்பு அவளுக்கு அவன் குழல் மேல் ஏற்படுகின்றது. 



ஒரு படைப்பு காலத்தைக் கடந்து நிற்பது கலைஞனின் நிலைத்த தன்மையைக் காட்டுகிறது என்றால், அந்த நிலைத்த தன்மைக்கு ஒரு காட்சி சாட்சியாக 2011-இல் கிடைத்தது. "என்றென்றும் இளையராஜா" என்ற நிகழ்வில் என்றென்றைக்கும் நிற்கக் கூடிய இந்தப் பாடலை இன்னும் இளையவராக இருக்கும் பாலமுரளி கிருஷ்ணா பாடிய காட்சியை "http://www.youtube.com/watch?v=7Hu-dHfqrJQ" பதிவில் காணலாம். 

காலத்தில் அழியாத கோலம் படைத்த அந்தப் பாடலின் சாயலை இந்தக் காலத்தில் ஒரு பாடல் கொண்டிருக்கிறது. முன்னதைப் போலவே இதுவும் தேன்தமிழ்ப் பாடல் தான். சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில், திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசையமைத்த "கண்கள் இரண்டால்" என்ற இனிய பாடல் தான் அது. இதுவும் ரீதிகௌளை ராகத்தில் இடம் பெற்ற பாடல் தான். மூத்தவர் சிறப்பை "http://www.youtube.com/watch?v=wtfhzlOMi3M&feature=related" -இல் காணுங்கள். கண்கள் இரண்டால் இளையவர் இனிமையை "http://www.youtube.com/watch?v=eNLZ06k9KNY" -இல் கேளுங்கள்.


6. ஒரு ராகம் பல பாடல்களுக்கு அமைவது ஒன்றும் புதிதல்ல. அதுவே மூன்று காவியங்களுக்கு அமைவது? அமைத்தவர் இளையராஜா எனும் இனியராஜா. காலத்தின் வீச்சுக்கு அழியாத அஜந்தா ஓவியங்களைத் தெரியும் நமக்கு. அப்படிப் பட்ட அழியாத ஓவியங்கள், இயற்கையாகவே மலைப்பாறைகளின் மீது ஏறும் சாயங்களைக் கொண்டு தீட்டப்பட்டவை. அந்த ஓவியங்களைப் போன்றே அழகாகவும் இனிமையாகவும் உள்ள இந்தப் பாடல்கள் கீரவாணி என்னும் அற்புத ராகத்தில் அமைந்த ஒலி ஓவியங்கள். 

இந்தக் கீரவாணி ராகம் எனக்கு அறிமுகம் ஆனது ஒரு சுவாரஸ்யமான கதை. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கணையாழியில்(இது ஒரு சிறு பத்திரிக்கை. இலக்கிய வட்டங்களில் பிரபலம்.)  எழுதிய கடைசிப் பக்கங்கள் என்ற பல்சுவைத் தொடரின் தொகுப்பை படிக்க நேர்ந்தது. கணையாழியில் அச்சுப் பிழை ஏற்படுவதை சுஜாதா அவர்கள் கேலி செய்திருப்பார். அந்தக் கேலியின் மையமே இந்த ராகம் தான். பிரபல வயலின் வித்வான் ரவி ஷங்கரின் கச்சேரியைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார் ஒரு இடத்தில். அங்கே இந்த ராகத்தைக் குறிப்பிட்டிருப்பார். அது தவறாக அச்சுப்பிழையாக "கீரகவராளி" என்று வந்திருக்கும் பதிப்பில். அடுத்த இதழில் இவர் அதனைச் சுட்டிக் காட்டி, கணையாழியின் அச்சுப் பிழையால் புதிய ராகம் பிறந்தது என்று நயமாகக் கேலி செய்திருப்பார். இந்தப் பதிவு மட்டுமல்ல, இந்த ராகத்தில் வந்த பாடல்களும் சுவாரஸ்யம் தான். ஒன்றொன்றாகப் பார்க்கலாமா.
திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு என்பது நிச்சயிக்கப் பட்ட மணங்களில் கூட நிரூபணம் ஆகும் எனச் சொல்லும் கதை. எந்த வேலைக்கும் ஒரு probationary காலம் உண்டு. அந்தக் காலத்தில் பயிற்சி கொடுக்கப்படும். வேலை செய்ய பழக்கப் படுத்தப்படும். ஒரு வேலைக்கே இப்படி என்றால், ஒரு வாழ்வுக்குத் துணை தேடும் திருமணத்துக்கு அது தேவை இல்லையா எனச் சொல்லாமல் சொல்லும் மௌன ராகம். மணிரத்னம் என்ற மௌனம் விரும்பும் மனிதன் இசைத்த அற்புத ராகம் இந்தத் திரைப்படம். எண்பதுகளின் ராஜ்யத்தில் மோகனின் ராஜாங்கம் கம்பீரமானது. கேள்விக்கு இடமில்லாதது. படங்களின் வெற்றியும் பாடல்களின் வெற்றியும் இவரது பெயரைத் தமிழ் திரை வரலாற்றில் அழுந்தப் பதித்திருக்கின்றன. பாரதிராஜா கண்டெடுத்த பல நட்சத்திரங்களில் அழகியதும் அழுத்தமானதுமான ஒன்று ரேவதி. இவர் நடிப்பு ஆற்றொழுக்கைப் போன்றது. 

சரி பாடலுக்கு வருவோம். காதலித்தவன் ஒருவன், அவன் காலத்தில் கரைந்து போனான். கைப்பிடித்தவன் ஒருவன். அவன் கண்ணீரைக் கரித்தான் அவளுக்கு. மன்றத்தில் கரம் பற்றிய அவளுக்கு மஞ்சத்தில் இடமளிக்க மனம் ஒப்பவில்லை. மறைந்திருந்து வில்லேற்றிய ராமனைக் கேள்விகணை தொடுக்கும் வாலியை போல் நமது கவிஞர் வாலியும் கேட்கிறார்,
"மஞ்சம் வந்த தென்றலுக்கு, மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ" 
பல படியாக அந்த நிலையை வருணித்து விட்டு, அவர்கள் உறவை விமர்சித்து விட்டு கவிஞர் அந்தப் பெண்ணைக் கேட்கும் கேள்வியில் கூர்மை தான் எத்தனை? கலையின் ஓர்மை தான் எத்தனை, பாருங்களேன்..
                      " ...பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்", "

பாடலைத் தேனினும் இனிய தன் குரலால் தந்திருப்பவர், திரு.எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்கள். "http://www.youtube.com/watch?v=oGAY6E3arrY" காணலாம்.


முதல் பாடல் ஒட்டாத இரு மனங்களைப் பற்றியது என்றால், இரண்டாவது பாடல் நம்ப மறுக்கும் மனத்தைப் பற்றியது. ஒரு பூவின் வாசத்தைக் கலைஞன் ஒருவன் பாடுகிறான். அந்தப் பூ தனது சொந்தப் பூவோ என்று ஏங்குகிறான் தலைவன். "சொல்லத் துடிக்குது மனசு" என்று இந்தத் தலைவனின் நிலைக்கு ஏற்ப படத்துக்கு தலைப்பு. அந்தக் கலைஞனாக நடிக வேளின் மகன் ராதா ரவி. அந்தத் தலைவானாக நவரச நாயகன் கார்த்திக். இருவரும் வயதின் செழிப்பிலும் வாலிப முறுக்கிலுமாக - அழகிய காட்சி அமைப்பு. இந்தப் பாடலும் கவிஞர் வாலியின் கைப்பட்ட கவிதைப் பெண் தான். உயிர் தந்தவர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். ஒரு கலைஞனின் மனது எப்படி இருக்கும் என்பதற்கு சான்று பின் வரும் வரிகள்.

" உனைப் போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப் போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்" 

தன் மனதில் தோன்றும் ஆயிரம் உணர்வுகளையும் ஒரு கலைஞன் மறைத்து அந்த ரசிகனுக்கு இன்பத்தைத் தரும் உன்னத உணர்வு போற்றத் தக்கதல்லவா. போற்றிக் கொண்டே பாடலை  "http://www.youtube.com/watch?v=GmY1x-QkJSs" இங்கே காணுங்கள்.

முதலிரண்டு பாடல்கள் ரசிகனின் மனதில் விருந்து படைத்து விருது படைத்த பாடல்கள் என்றால், மூன்றாம் பாடல், கவிஞர் வாலி அவர்களுக்கு தேசிய விருது கிடைத்த பாடல். இசைஞானி இசையில் கலைஞானி நடிப்பில் "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் வந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் உள்ள நட்பு இந்தப் பாடலின் இசைவுக்கு சாட்சி. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கும் கமல் ஹாசன் அவர்களுக்கும் உள்ள உறவின் நீட்சி நாம் காணும் காட்சியில். இந்தக் கூட்டணி சமைத்த வெற்றிப் பாடல் ஒரு சோக கீதம். ஆனால் பாடல் வந்த விதம் ஒரு இனிய கதை. கவிஞர் வாலி, கமல் ஹாசனிடம் கொண்ட பூசலில் அவர் நொந்து எழுதிய வரிகள் இவை. கதையைக் கலைஞானி சொல்வார். "http://www.youtube.com/watch?v=jvjO7l8Dc4o&feature=related" இங்கே கேளுங்கள். கரும்பை வண்டு துளைத்த சுவாரசியக் கதை.


உருவம் குறுகிப் போன ஒரு மனிதனின் உள்ளத்தைக் குறுக வைக்கிறாள் அவள். கூத்தில் கோமாளி ஊருக்குத் - தான் அவன் நகைச்சுவை, அவனுக்கு அவனே அவலச் சுவை. இப்படி பாராத கோணத்தைச் சொன்ன அப்பு பாத்திரத்துக்கு முட்டி தேய கலை ஞானி வாழ்ந்தார் என்றால், அந்த வாழ்வின் பொருள் இந்தப் பாடலில். வரிகளைச் சொல்லத் தான் வேண்டும். அதற்கு முன் ஒரு சோக வயலின் இசையையும். பாடலின் இடையிலும் முடிவிலும் ஒரு சோக கீதம் பாடும் வயலின். அழாமல் நீங்கள் கேட்டு விட்டால், மரத்து விட்டீர்கள் என்று அர்த்தம். இனி வரிகள்,
"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
 மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்...
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்..
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்..
தப்புக் கணக்கைப் போட்டுத் தொலைத்தேன்.."

நொந்த இதயம் சொல்லும் கதை இது, என் இதயம் கவர்ந்த கலை இது. "http://www.youtube.com/watch?v=lsPKJQnBqhc" கேளுங்கள். 

ஒரே ராகத்தை மூன்று இடங்களில் ராஜா இசை அமைத்து இசைஞானி என்ற பட்டத்துக்கு நியாயம் செய்கிறார். அதே ராகத்துக்கு மூன்று முத்தான பாடல்களைத் தந்து கவி ஞானியாக வாலி திகழ்கிறார். என்ன சொல்கிறீர்கள்?

Monday, October 22, 2012

Derisive Engagement

Ever since India been under the colonial rule, it has been a custom of us to get things approved by foreign establishments. And anything foreign seems superior to us, be it either commercial products or ideas. We have always given undue importance to foreign opinion. Our political discourse has never been different from this murky attitude. When the Un-Progressive Alliance(UPA) government's defacto Prime Minister had the brickbats hurled from foreign press, the hue and cry raised was though if a revolt had started against his beleaguered government. The same hyper reaction has been displayed by our media and so-called elite group, for the British High Commissioner's tour to GandhiNagar calling upon the Gujarat CheifMinister.

The usually ridiculous behavior of our media went to abysmal low when they questioned if the British Government endorsed Mr.Modi. Why should we expect a foreign government to endorse a cheif minister elected out of popular vote? Are we still a dominion of the Queen's Great Britain?


There has always been a taboo reaction from the Western Governments, when they deal with Narendra Modi. There is no denial of the fact that the Gujarat riots took place in 2002. Having said that, those weren't the first riots that took place in our independent history. Perhaps this has also been the first mass violence in the country, that was dealt with the severity it needs and the offenders were brought under justice. In that regard, is the track record of the so called progressive and self appointed human-right saviors - the western governments impressive?

These are the governments those endorse the rogue activities of Israel towards the neighboring countries. These are the nations which took part in massacre of Iraqis and Afghans. These are the nations that approve the heinous crimes that are carried out in foreign countries against innocent civilians in the name of "War on Terror". And the British commissioner should have been imagining to live in the imperialistic past of his country when it was demolishing the sovereignty of various nations, when he said, it was not an endorsement of Mr.Modi. India is neither Queen Victoria's empire nor he the Viceroy endorsing princely states.

He had also termed his endeavor, re-engagement with Gujarat. Engaging Gujarati men had always been difficult for your nation, Mr. High Commissioner. Would like to remind you of two Gujaratis whom your ancestors couldn't ever engage. One, Mr. Mohan Das Karam Chand Gandhi and two, Sardar Vallabhbhai Jhaverbhai Patel.

And it is a deride on the Indian voter, that this would influence him/her to vote for Mr. Modi, first in the upcoming Gujarat state elections and next in the looming sixteenth general elections. If we are to imagine that a decade of irreversible progress in Gujarat cannot convince the voter, but a visit by a foreign secretary to the CMO can, we must be devaluing basic tenets of democracy and our independence. I would call it just a trade mission and anything more read into this visit is derisive engagement.

Sunday, October 21, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள் - 2

சில மனிதர்கள் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். சில மனிதர்கள் வரலாறு ஆகிறார்கள். அப்படித் தான் படைப்புகளும். அமரர் கல்கி அவர்கள் தம்முடைய நூலான அலை ஓசையை அறிமுகம் செய்யும் பொழுது நீடித்து நிற்கும் படைப்பாக அதனைச் சொல்கிறார். அவரை வழிமொழிந்து உணர்வுகளின் குவியல்களை அடக்கிய இந்தப் பாடல்களை நீடித்து நிக்கும் பதிவுகளாக நான் கருதுகிறேன். 

3. உயிரினங்கள் தோன்றி படைப்பு தொடங்கிய போது இந்த உணர்வு தோன்றியிருக்குமோ என்னவோ. அன்பின் எத்தனையோ பரிமாணங்களில் இதுவே தலையாயதோ என்னவோ. எத்தனை எத்தனை விதங்களில் எத்தனை எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனை அத்தனை புதியது இந்த உணர்வு. இளம் பிள்ளைகள் முதல் முதிய தம்பதிகள் வரை இந்தக் காதலால் கசியும் உயிர்கள் எத்தனை எத்தனையோ. 1984-இல், மறைந்த திரு.ராஜசேகர் இயக்கிய "தம்பிக்கு எந்த ஊரு" என்ற திரைப்படத்தில் வரும் "காதலின் தீபம் ஒன்று" என்ற பாடலைச் சொல்லுகிறேன். உச்ச நட்சத்திரமாக அன்றே விளங்கிய ரஜினிகாந்த் அவர்கள் பாடுவதாக வரும் காதல் பாட்டுத் தான் இது. தமிழை உச்சரிக்க பல பிறப்பால் தமிழர்கள் தத்தளிக்கும் போது, இந்த சுந்தரத் தெலுங்கரின் வெண்கலக் குரல் உச்சரிப்பு ஊரறிந்தது. பாடும் நிலா திரு.எஸ்.பி.பால சுப்ரமண்யம் அவர்களின் தேனினும் இனிய குரலில் வந்த கீதம். சுகராகங்களோ சோகராகங்களோ இந்த ராகராஜா என்றும் இளையராஜா. பாடலை எழுதியவர் "ஆவியாகிப் போன தண்ணி மேகம் ஆச்சு" என்று விஞ்ஞானத்தைக் காதல் பாட்டில் சொன்ன கவிஞர். வைரமுத்து.
 ஊடலில் வந்த சொந்தம் அவள் அவனுக்கு. மயக்கும் இயற்கை சூழல், அவன் காணாத ஓர் வாழ்கை வழி அது. அங்கு தெரிந்த எரியும் சுடர் அவள். அவள் ஏற்றி வைத்த தீபத்தின் வெப்பம் கொஞ்சம் சுடவே செய்கிறது. ஆனால் அது சுகமான வலி. வலி தந்தவரைக் கூட வாழ்த்திப் பேசி சலிக்கும் பழக்கம் உண்டே. அவன் கூட அப்படித் தான் பாடுகிறான், 
"ஊடலில் வந்த சொந்தம்
 கூடலில் கண்ட இன்பம் 
மயக்கம் என்ன 
காதல் வாழ்க"

இப்படிப் பட்ட களத்தில் "சாருகேசி" ராகத்தில் அமைந்த பாடலை "http://www.youtube.com/watch?v=abmLgbldIUE" என்ற வலைத் தளத்தில் கேட்கலாம்
.

 இதே போல் மனம் கசந்து வாழ்த்தும் ஒரு சுவையான கட்டம் , கல்கி அவர்கள் எழுதிய "சிவகாமியின் சபதத்தில்" 3-ஆம் பாகத்தில் ஒரு நடனப் பாடலில் வருகிறது. அதிலே வேலனைக் கொண்டு வரத் தாமதிக்கும் மயிலைப் பார்த்து பெண் பாடுகிறாள்,
                      "வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
                       வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!"
ஒரே வலி தான் ஒரே நிலை தான். என்ன ஒற்றுமை இந்த இரு பாடல்களிலே... சிவகாமியின் சபதத்தைப் போன்ற பல தமிழ் படைப்புக்களைப் படிக்க, இந்த "http://www.projectmadurai.org/" .


4. மனிதன் நாகரீகம் பெற்ற பொழுது அவனது தொடர்புகளுக்கெல்லாம் பெயர் கொடுக்க ஆரம்பித்தான். உறவு முறை சுட்ட ஆரம்பித்த போதே வரம்பு முறைகளும் ஏற்பட்டன. அப்படி இலக்கணம் வகுத்த தமிழ் நூல் தொல்காப்பியம். மண் சார்ந்தும், வாழ்வு முறை சார்ந்தும் இலக்கியம் இருக்க வேண்டுமென்று நெறி வகுத்தார்கள். இலக்கியங்களில் வாழ்வை விமர்சிப்பது சமூகக் கடமை தான். ஆனால் அதன் எல்லைகளை வகுக்காவிட்டால் தொல்லை வருமென்று எண்ணி, அகமென்றும் புறமென்றும் பகுத்தார்கள். அகப் பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழ் மண் சார்ந்து பிரிக்கப் பட்டு ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உணர்வு பிணைக்கப் பட்டது. இந்த வரையறைக்குள் வரும் பாடல்கள் உணர்வைச் சொல்லுமே அன்றி உணர்வுகளுக்கு உரியவர்களைச் சொல்லா. ஆனால் புறப் பாடல்கள் அப்படி அல்ல, பெயரைச் சுட்டி செய்தியை விளக்கக் கூடியவை. புறப் பாடல் திணைகளில் பன்னிரண்டு உண்டு. அவற்றில் பத்துத் திணைகள் போர் சார்ந்தவை. கடைசி இரண்டு தான் கொஞ்சம் விவரிக்க வேண்டியவை. அவை கைக்கிளை, பெருந்திணை ஆகியவை. ஒன்று ஒரு தலை ராகம், மற்றொன்று அபூர்வ ராகம்.

கே.பாலச்சந்தர் அவர்கள், விக்ரமாதித்ய மன்னனுக்கு வேதாளம் சொன்ன 24-ஆம் புதிர்க் கதையை அடிப்படையாக வைத்து, எடுத்த திரைப் புதிர் "அபூர்வ ராகங்கள்". அங்கே மன்னனுக்கு பதில் சொல்ல முடியாத கேள்வி ஒன்று, இங்கே மக்களால் புரிந்து கொள்ள முடியாத உணர்வு ஒன்று. கைக்கிளையும் பெருந்திணையும் விமர்சனத்துக்குரிய திணைகளாக வைக்கப் பட்டது சமூகத்தின் சபலமோ என்னவோ! ஆனால் இவற்றைக் காவியமாக்கிப் பார்த்தவர்களில் இரு ஜாம்பவான்கள். ஒருவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படைப்பு "அபூர்வ ராகங்கள்". மற்றொருவர் தி. ஜானகிராமன். படைப்பு "மோக முள்". இரண்டிலும் ராகங்கள் உண்டு. இரண்டிலும் பாடகர்கள் உண்டு. ஒன்றுக்கொன்று ஒப்பு நோக்கத் தக்க படைப்புகள். ஒப்பு நோக்க இங்கே இடம் இல்லை. வேறொரு தருணத்தில் அதைச் செய்வேன். 

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே சுவையானவை தான். ஆனால் புதிர் அறிமுகப் படுத்தப் படும் பாடல் சுகமானதும் கூட. இன்று திரையிசைச் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பட்டிருக்கும் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையில், கவியரசு கண்ணதாசன் இயற்றி, கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த "அதிசய ராகம்" எனும் பாடல்.திரையில் தோன்றுபவர்கள் நிறைவேறாத காதலுக்குச் சொந்தமானவர்களாக  கமலஹாசனும் ஸ்ரீ வித்யாவும்.

இந்தப் பாடல் ஒரு ராக மாலிகை. கதைப்படி பேரிளம்பெண்ணான கர்நாடக இசை பாடகி மேல் காதல் கொண்டு வாலிபன் பாடும் அதிசய ராகம். அதற்கு மெல்லிசை மன்னர் பயன்படுத்திய ராகம் கூட அதிசயமானது. இந்த நூற்றாண்டின் கந்தர்வ கான சாம்ராட்- ஆன கர்நாடக இசை மேதை திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் உருவாக்கிய "மகதி" எனும் இனிய ராகம். விமர்சிக்கப் படக் கூடிய உறவைச் சொல்லும் பாடலுக்கு விமர்சனத்துக்குள்ளான ராகம் அமைத்தது ரசனையின் உச்சமே. அவளை விவரிக்கும் போது அவள் ஒரு அதிசய ராகம் என்பதால் மகதியும், அவள் பெயரைச் சொல்ல அவள் பெயரான பைரவி ராகத்தையும் பயன்படுத்துகிறான் அவன். அத்தனை வரிகளிலுமே கவிதை கதை சொல்லும் தான்.  என்னைக் கவர்ந்த சில வரிகள், ஆனந்த பைரவியில் வரும் கடைசிச் சரணத்தில்...
"ஒரு புறம் பார்த்தால் மிதிலை மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி"
இரட்டை உணர்வுகளை ஒருங்கே தூண்டுகிறாள் அவன் உள்ளத்தில். ஒரு புறம் வணங்கத் தக்க சீதையாகவும், மறுபுறம் மயக்கி விடும் மாதவியாகவும். இதே இரட்டை நிலை மோக-முள் புதினத்தில் வரும் தலைவன் பாபுவுக்கும் ஏற்படும். ஒரு புறம் அந்த யமுனா வணங்கும் தெய்வமாகவும், மறு புறம் மனத்தின் தலைவியாகவும் விளங்கும் வலியைப் பேசும் அந்தப் பாத்திரம். சுவையான இரு படைப்புக்களுமே அபூர்வ ராகங்களே. பாடலை, "http://www.youtube.com/watch?v=O8PO18QQ5Gk" காணலாம். புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.