Sunday, October 21, 2012

நெஞ்சில் நின்ற ராகங்கள் - 2

சில மனிதர்கள் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். சில மனிதர்கள் வரலாறு ஆகிறார்கள். அப்படித் தான் படைப்புகளும். அமரர் கல்கி அவர்கள் தம்முடைய நூலான அலை ஓசையை அறிமுகம் செய்யும் பொழுது நீடித்து நிற்கும் படைப்பாக அதனைச் சொல்கிறார். அவரை வழிமொழிந்து உணர்வுகளின் குவியல்களை அடக்கிய இந்தப் பாடல்களை நீடித்து நிக்கும் பதிவுகளாக நான் கருதுகிறேன். 

3. உயிரினங்கள் தோன்றி படைப்பு தொடங்கிய போது இந்த உணர்வு தோன்றியிருக்குமோ என்னவோ. அன்பின் எத்தனையோ பரிமாணங்களில் இதுவே தலையாயதோ என்னவோ. எத்தனை எத்தனை விதங்களில் எத்தனை எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனை அத்தனை புதியது இந்த உணர்வு. இளம் பிள்ளைகள் முதல் முதிய தம்பதிகள் வரை இந்தக் காதலால் கசியும் உயிர்கள் எத்தனை எத்தனையோ. 1984-இல், மறைந்த திரு.ராஜசேகர் இயக்கிய "தம்பிக்கு எந்த ஊரு" என்ற திரைப்படத்தில் வரும் "காதலின் தீபம் ஒன்று" என்ற பாடலைச் சொல்லுகிறேன். உச்ச நட்சத்திரமாக அன்றே விளங்கிய ரஜினிகாந்த் அவர்கள் பாடுவதாக வரும் காதல் பாட்டுத் தான் இது. தமிழை உச்சரிக்க பல பிறப்பால் தமிழர்கள் தத்தளிக்கும் போது, இந்த சுந்தரத் தெலுங்கரின் வெண்கலக் குரல் உச்சரிப்பு ஊரறிந்தது. பாடும் நிலா திரு.எஸ்.பி.பால சுப்ரமண்யம் அவர்களின் தேனினும் இனிய குரலில் வந்த கீதம். சுகராகங்களோ சோகராகங்களோ இந்த ராகராஜா என்றும் இளையராஜா. பாடலை எழுதியவர் "ஆவியாகிப் போன தண்ணி மேகம் ஆச்சு" என்று விஞ்ஞானத்தைக் காதல் பாட்டில் சொன்ன கவிஞர். வைரமுத்து.
 ஊடலில் வந்த சொந்தம் அவள் அவனுக்கு. மயக்கும் இயற்கை சூழல், அவன் காணாத ஓர் வாழ்கை வழி அது. அங்கு தெரிந்த எரியும் சுடர் அவள். அவள் ஏற்றி வைத்த தீபத்தின் வெப்பம் கொஞ்சம் சுடவே செய்கிறது. ஆனால் அது சுகமான வலி. வலி தந்தவரைக் கூட வாழ்த்திப் பேசி சலிக்கும் பழக்கம் உண்டே. அவன் கூட அப்படித் தான் பாடுகிறான், 
"ஊடலில் வந்த சொந்தம்
 கூடலில் கண்ட இன்பம் 
மயக்கம் என்ன 
காதல் வாழ்க"

இப்படிப் பட்ட களத்தில் "சாருகேசி" ராகத்தில் அமைந்த பாடலை "http://www.youtube.com/watch?v=abmLgbldIUE" என்ற வலைத் தளத்தில் கேட்கலாம்
.

 இதே போல் மனம் கசந்து வாழ்த்தும் ஒரு சுவையான கட்டம் , கல்கி அவர்கள் எழுதிய "சிவகாமியின் சபதத்தில்" 3-ஆம் பாகத்தில் ஒரு நடனப் பாடலில் வருகிறது. அதிலே வேலனைக் கொண்டு வரத் தாமதிக்கும் மயிலைப் பார்த்து பெண் பாடுகிறாள்,
                      "வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
                       வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!"
ஒரே வலி தான் ஒரே நிலை தான். என்ன ஒற்றுமை இந்த இரு பாடல்களிலே... சிவகாமியின் சபதத்தைப் போன்ற பல தமிழ் படைப்புக்களைப் படிக்க, இந்த "http://www.projectmadurai.org/" .


4. மனிதன் நாகரீகம் பெற்ற பொழுது அவனது தொடர்புகளுக்கெல்லாம் பெயர் கொடுக்க ஆரம்பித்தான். உறவு முறை சுட்ட ஆரம்பித்த போதே வரம்பு முறைகளும் ஏற்பட்டன. அப்படி இலக்கணம் வகுத்த தமிழ் நூல் தொல்காப்பியம். மண் சார்ந்தும், வாழ்வு முறை சார்ந்தும் இலக்கியம் இருக்க வேண்டுமென்று நெறி வகுத்தார்கள். இலக்கியங்களில் வாழ்வை விமர்சிப்பது சமூகக் கடமை தான். ஆனால் அதன் எல்லைகளை வகுக்காவிட்டால் தொல்லை வருமென்று எண்ணி, அகமென்றும் புறமென்றும் பகுத்தார்கள். அகப் பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழ் மண் சார்ந்து பிரிக்கப் பட்டு ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உணர்வு பிணைக்கப் பட்டது. இந்த வரையறைக்குள் வரும் பாடல்கள் உணர்வைச் சொல்லுமே அன்றி உணர்வுகளுக்கு உரியவர்களைச் சொல்லா. ஆனால் புறப் பாடல்கள் அப்படி அல்ல, பெயரைச் சுட்டி செய்தியை விளக்கக் கூடியவை. புறப் பாடல் திணைகளில் பன்னிரண்டு உண்டு. அவற்றில் பத்துத் திணைகள் போர் சார்ந்தவை. கடைசி இரண்டு தான் கொஞ்சம் விவரிக்க வேண்டியவை. அவை கைக்கிளை, பெருந்திணை ஆகியவை. ஒன்று ஒரு தலை ராகம், மற்றொன்று அபூர்வ ராகம்.

கே.பாலச்சந்தர் அவர்கள், விக்ரமாதித்ய மன்னனுக்கு வேதாளம் சொன்ன 24-ஆம் புதிர்க் கதையை அடிப்படையாக வைத்து, எடுத்த திரைப் புதிர் "அபூர்வ ராகங்கள்". அங்கே மன்னனுக்கு பதில் சொல்ல முடியாத கேள்வி ஒன்று, இங்கே மக்களால் புரிந்து கொள்ள முடியாத உணர்வு ஒன்று. கைக்கிளையும் பெருந்திணையும் விமர்சனத்துக்குரிய திணைகளாக வைக்கப் பட்டது சமூகத்தின் சபலமோ என்னவோ! ஆனால் இவற்றைக் காவியமாக்கிப் பார்த்தவர்களில் இரு ஜாம்பவான்கள். ஒருவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படைப்பு "அபூர்வ ராகங்கள்". மற்றொருவர் தி. ஜானகிராமன். படைப்பு "மோக முள்". இரண்டிலும் ராகங்கள் உண்டு. இரண்டிலும் பாடகர்கள் உண்டு. ஒன்றுக்கொன்று ஒப்பு நோக்கத் தக்க படைப்புகள். ஒப்பு நோக்க இங்கே இடம் இல்லை. வேறொரு தருணத்தில் அதைச் செய்வேன். 

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே சுவையானவை தான். ஆனால் புதிர் அறிமுகப் படுத்தப் படும் பாடல் சுகமானதும் கூட. இன்று திரையிசைச் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பட்டிருக்கும் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையில், கவியரசு கண்ணதாசன் இயற்றி, கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த "அதிசய ராகம்" எனும் பாடல்.திரையில் தோன்றுபவர்கள் நிறைவேறாத காதலுக்குச் சொந்தமானவர்களாக  கமலஹாசனும் ஸ்ரீ வித்யாவும்.

இந்தப் பாடல் ஒரு ராக மாலிகை. கதைப்படி பேரிளம்பெண்ணான கர்நாடக இசை பாடகி மேல் காதல் கொண்டு வாலிபன் பாடும் அதிசய ராகம். அதற்கு மெல்லிசை மன்னர் பயன்படுத்திய ராகம் கூட அதிசயமானது. இந்த நூற்றாண்டின் கந்தர்வ கான சாம்ராட்- ஆன கர்நாடக இசை மேதை திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் உருவாக்கிய "மகதி" எனும் இனிய ராகம். விமர்சிக்கப் படக் கூடிய உறவைச் சொல்லும் பாடலுக்கு விமர்சனத்துக்குள்ளான ராகம் அமைத்தது ரசனையின் உச்சமே. அவளை விவரிக்கும் போது அவள் ஒரு அதிசய ராகம் என்பதால் மகதியும், அவள் பெயரைச் சொல்ல அவள் பெயரான பைரவி ராகத்தையும் பயன்படுத்துகிறான் அவன். அத்தனை வரிகளிலுமே கவிதை கதை சொல்லும் தான்.  என்னைக் கவர்ந்த சில வரிகள், ஆனந்த பைரவியில் வரும் கடைசிச் சரணத்தில்...
"ஒரு புறம் பார்த்தால் மிதிலை மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி"
இரட்டை உணர்வுகளை ஒருங்கே தூண்டுகிறாள் அவன் உள்ளத்தில். ஒரு புறம் வணங்கத் தக்க சீதையாகவும், மறுபுறம் மயக்கி விடும் மாதவியாகவும். இதே இரட்டை நிலை மோக-முள் புதினத்தில் வரும் தலைவன் பாபுவுக்கும் ஏற்படும். ஒரு புறம் அந்த யமுனா வணங்கும் தெய்வமாகவும், மறு புறம் மனத்தின் தலைவியாகவும் விளங்கும் வலியைப் பேசும் அந்தப் பாத்திரம். சுவையான இரு படைப்புக்களுமே அபூர்வ ராகங்களே. பாடலை, "http://www.youtube.com/watch?v=O8PO18QQ5Gk" காணலாம். புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.


No comments:

Post a Comment