Saturday, October 20, 2012

வாழைப்பழங்களும் இந்திய ஜனநாயகமும்

மாங்கனிகளின் நாடாகவே இந்தியாவை இரு நூற்றாண்டுகளாக இங்கிலாந்து நினைத்திருந்தது. குறுமிளகும் இன்ன பிற நறுமணப் பொருட்களின் உற்பத்தி தாயகம், பருத்தி மற்றும் பட்டின் உற்பத்திக் களம். இப்படிப் பட்ட நல்ல வேட்டைக்களத்தை கருவறுக்க எத்தனை போட்டிகள். போர்துகீசியர்களில் ஆரம்பித்து பிரெஞ்சு முதல் இங்கிலாந்து ஈறாக எல்லோரும் முயன்று தான் பார்த்தனர். வெள்ளையர் திறமும் இந்தியர் அடிமைத்தனமும் சேர்ந்து பிரிட்டிஷ்- இந்தியாவைக் கட்டமைத்தது. ஆங்காங்கே சில சுதேசி அரசர்கள் எதிர்த்தாலும் போலிச் சுதேசிகளே நிறைந்திருந்ததாலும் முகலாய அரசு வீழ்ந்ததாலும், மராத்திய வீரம் மங்கியதாலும், தென்னகத்தில் சிற்றரசுகளும் நவாபுகளும் ஒருவரை ஒருவர் விழுங்கக் காத்துக் கொண்டிருந்ததாலும் வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள், ஒரு சில ஆண்டுகளிலேயே அனைத்திந்திய அரசை நியமிக்க முடிந்தது. அதனை மாட்சிமை தாங்கிய மகாராணியார், அன்புப் பரிசாக ஏற்று, தமது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டு வர முடிந்தது. எதற்கு இந்தப் பழங்கதை என்கிறீர்களா?

விடுதலை பெற்ற அறுபத்தைந்தே ஆண்டுகளில் நாம் இதனை மறந்து விட்ட அவலத்தால் தான். நாம் இப்போதும் ஒரு மாட்சிமை தாங்கிய பெண்மணியின் மறைமுக ஆட்சியில் தான் இருக்கிறோம். எந்த இயக்கம் இந்திய விடுதலையை சாத்தியமாக்கியதாகச் சொல்லிச் சொல்லியே நமது வாக்குகளைப் பெற்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செலுத்தியதோ அது ஒரு குடும்ப இயக்கமாக உருப்பெற்று விட்டது. அன்னை இயக்கும் அற்புதப் பிரதமராக ஒருவர் வாய்த்திருக்கிறார். இவருக்கும் இந்தியாவின் சுதேசத் கொள்கைக்கும் ஜென்ம விரோதம். எல்லாவற்றுக்கும் விடைகளை அந்நிய முதலீட்டிலே காண்கிறார். முதிர்ச்சியில்லாத இளவரசர் தயாராகும் வரை இவர் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கப்பார் என நினைத்தோம். இளவரசரோ இன்னும் வயதுக்கு வராதவராகவே நடந்து கொள்கிறார்.

ஊழல்களின் தாயகமாக இந்தியாவைச் சொல்லலாம் இப்போது. நாட்டின் முதல் குடும்பத்தில் ஆரம்பித்து மாநிலங்களில் முதல் குடும்பத்து மகன்களும் மருமகன்களும் சுருட்டும் தொகை கணக்கிலடங்காதது. ஆங்காங்கே தந்தை-மகன் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. நாட்டின் தலையாக விளங்கும் காஷ்மீரத்தில் பாரூக்-உமர் அப்துல்லாக்கள் கட்சி, கொஞ்சம் கீழே பஞ்சாபில் பாதல் குடும்ப ஆட்சி, உத்தரப் பிரதேசத்தில் முலாயம்-அகிலேஷ், கர்நாடகாவில் தேவ -குமாரசாமி கௌடாக்களும், எடியூரப்பாக்களும் கோலோச்சி வருகிறார்கள். மராட்டியத்தில் சகோதரன் மகன் அஜித் பவாருக்கும் பெரியப்பா சரத் பவாருக்கும் அதிகாரப் போட்டி. ஆந்திரத்தில் ராஜண்ண ராஜ்யம் அமைக்க புதல்வர் சிறைக்கேகியுள்ளார். தமிழகத்தில் இப்போது தான் குடும்பம் ஒற்றுமை பேண ஆரம்பித்துள்ளது. நிதிக் குடும்பப் பூசல்கள் தான் இங்கே தலைப்பு செய்திகள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல வதேரா ஒருவர் தோன்றியிருக்கிறார். இவர் நமது மகாராணியின் மருமகன். மண்ணில் ஊழல், விண்ணின் ஊழல் என்று வராலாறு படைத்து  வரும் ஒரு பொற்கால ஆட்சியை நாம் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம்.


இப்படியாக நாளொரு ஊழலும் பொழுதொரு சுருட்டலுமாக எளியோருக்காக ஆட்சி வழங்கி வரும் இந்த அரசு நாட்டை இட்டுச் சென்றிருக்கக் கூடிய பாதை மிகப் பயங்கரமானது. ஒரே ஒரு மாநிலத்தைத் தவிர அதனை மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு. காரணம் என்ன? பசுமையை பேணுவதாகச் சொல்லிச் சொல்லி சுற்றுச்சூழல் துறையை வைத்து திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது. வேலை வாய்ப்புத் தருவதாகச் சொல்லி விவசாயத் தொழிலாளர்களை திசை திருப்பி உற்பத்தியை தடுப்பது. கூட்டணிக் கட்சிகளின் மிரட்டலுக்கேர்ப்ப ரக வாரியாக அமைச்சகங்களை வழங்கி ஊழலை வளர்த்தது. இப்படி எளியோரின் "கை" வலுப்பட இந்த ஆட்சி உதவியிருக்கிறது.  

ஒரொரு துறையாக அந்நிய முதலீட்டைக் கொண்டு வரும் நமது மாண்புமிகு மத்திய அரசு இந்திய அரசிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டு வர வழி வகுத்து வருகிறது. சீனாவை வைத்து நம்மை மிரட்ட இலங்கையால் முடிகிறது. அவர்களோடு நமக்கு அப்படி ஒரு நட்புறவு. அதனால் தான் அந்நாட்டின் "மகாவம்சம்" சொல்லும் அரசுகளைப் போல நமது அரசும் செயல் பட்டு வருகிறது. 

இந்த நாட்டில் மீண்டும் வளர்ச்சி திரும்ப வேண்டுமானால் இந்த அரசும் இந்த அரசில் பங்கு வகிக்கும் கூட்டணிக் கட்சிகளும் தோற்க வேண்டும். பாரதீய ஜனதா தலைமையில் ஒரு வலுவான அரசு அமைய வேண்டும். மோடியை போன்ற உறுதியான கரங்களின் கீழ் ஆட்சி செல்ல வேண்டும். இல்லையென்றால் நீரா ராடிய விவகாரத்தில் சூடு கண்ட ரத்தன் டாட்டா சொன்னது போல, "வாழைப்பழ" ராஜியமாகத் தான் இருக்கும். உரித்து உரித்து சாப்பிட்டு விடுவார்கள். ஜாக்கிரதை....  

No comments:

Post a Comment