ஒரு படைப்பு படைப்பாளியின் வெளிப்பாடு. படைப்பாளியின் மனச் சுரங்கத்தில் அறிவுத் தேடலின் அற்புத வெளியீடு. அது படைக்கப் பட்ட காலத்தின் குறியீடாக இருப்பது இயல்பு, ஆனால் எக்க்காலத்துக்குமான குறியீடாக ஒரு படைப்பு விளங்குவதென்றால் அது அந்தக் கலையின் உச்சம். வாழ்வின் உண்மை. அப்படிப் பட்ட சில உண்மை பேசும் படைப்புக்களைப் பட்டியலிடுவதில் உள்ள படியே எனக்கு மகிழ்ச்சி.
5. நெஞ்சில் நின்றாடும் ராகங்களைப் பட்டியலிடும் போது இந்தப் பாடலை நான் விட்டு விட்டால், இந்தப் பாடலின் குறை அல்ல அது. எனது குறையே. பாலமுரளி கிருஷ்ணா என்ற மேதையின் குரல் அந்தக் கண்ணனின் குழல் போன்றதே. இசையெனும் திருவையாற்றில் அந்தத் தியாகய்யர் செய்த உஞ்சவ்ருத்தி பல ராகங்களின் உற்பத்தியில் முடிந்தது. இந்த நூற்றாண்டின் ராக -வ்ருத்தி இவரால் ஏற்பட்டது என்றால் அது மிகை அல்ல. இவர் பெயரைத் தமிழ் படுத்தினால் "சின்னக் கண்ணன்". இவரது குரலைத் தமிழ் படுத்தியவரும் சின்னக் கண்ணன் தான் - இளையராஜா. இருவரும் இரு மேதைகள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மதிப்பு அளப்பரியது. ஒருவர் கலைத் தாயின் நெற்றிச் சுட்டியில் பதித்த நல்முத்து. மற்றொருவர் அவள் அணிந்த கருவைரம். இருவரும் சேர்ந்து செய்த அணி ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" எனும் தென்றல்.பாடல் மட்டும் சாகாவரம் பெற்றதல்ல. பாடலில் தோன்றுபவரும் திரைத்துறை மார்கண்டேயன் திரு. சிவகுமார் அவர்கள். கூடவே ஸ்ரீதேவி. பாடல் இடம் பெற்ற திரைப்படம் கவிக்குயில்.
"சின்ன கண்ணன் அழைக்கிறான்ராதையை பூங்கோதையைஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி...""நெஞ்சில் உள்ளாடும் ராகம்இது தானா கண்மணி ராதா?உன் புன்னகை சொல்லாத அதிசயமா?"
அவள் நெஞ்சில் ஒரு ராகம் நின்றாடுகிறது. அவன் நெஞ்சில் அவள் நிழலாடுகின்றாள். அவனுக்குக் கண்ணன் நல் ஆசானாய் உற்ற தோழனாய் விளங்குகிறான். பாரதி சொல்வானே, தங்கை சுபத்திரையைக் கவர்ந்திட நண்பனுக்கு யோசனை சொல்லும் அற்புதத் தோழன் கண்ணனென்று, அதே போல் அவள் நெஞ்சில் நினைத்த ராகத்தை அவன் குழலில் நனைத்துத் தருகிறான் அந்த மாயக் கண்ணன். அவனுக்கு அவள் மேல் இருந்த சிலிர்ப்பு அவளுக்கு அவன் குழல் மேல் ஏற்படுகின்றது.
ஒரு படைப்பு காலத்தைக் கடந்து நிற்பது கலைஞனின் நிலைத்த தன்மையைக் காட்டுகிறது என்றால், அந்த நிலைத்த தன்மைக்கு ஒரு காட்சி சாட்சியாக 2011-இல் கிடைத்தது. "என்றென்றும் இளையராஜா" என்ற நிகழ்வில் என்றென்றைக்கும் நிற்கக் கூடிய இந்தப் பாடலை இன்னும் இளையவராக இருக்கும் பாலமுரளி கிருஷ்ணா பாடிய காட்சியை "http://www.youtube.com/watch?v=7Hu-dHfqrJQ" பதிவில் காணலாம்.
காலத்தில் அழியாத கோலம் படைத்த அந்தப் பாடலின் சாயலை இந்தக் காலத்தில் ஒரு பாடல் கொண்டிருக்கிறது. முன்னதைப் போலவே இதுவும் தேன்தமிழ்ப் பாடல் தான். சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில், திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசையமைத்த "கண்கள் இரண்டால்" என்ற இனிய பாடல் தான் அது. இதுவும் ரீதிகௌளை ராகத்தில் இடம் பெற்ற பாடல் தான். மூத்தவர் சிறப்பை "http://www.youtube.com/watch?v=wtfhzlOMi3M&feature=related" -இல் காணுங்கள். கண்கள் இரண்டால் இளையவர் இனிமையை "http://www.youtube.com/watch?v=eNLZ06k9KNY" -இல் கேளுங்கள்.
6. ஒரு ராகம் பல பாடல்களுக்கு அமைவது ஒன்றும் புதிதல்ல. அதுவே மூன்று காவியங்களுக்கு அமைவது? அமைத்தவர் இளையராஜா எனும் இனியராஜா. காலத்தின் வீச்சுக்கு அழியாத அஜந்தா ஓவியங்களைத் தெரியும் நமக்கு. அப்படிப் பட்ட அழியாத ஓவியங்கள், இயற்கையாகவே மலைப்பாறைகளின் மீது ஏறும் சாயங்களைக் கொண்டு தீட்டப்பட்டவை. அந்த ஓவியங்களைப் போன்றே அழகாகவும் இனிமையாகவும் உள்ள இந்தப் பாடல்கள் கீரவாணி என்னும் அற்புத ராகத்தில் அமைந்த ஒலி ஓவியங்கள்.
இந்தக் கீரவாணி ராகம் எனக்கு அறிமுகம் ஆனது ஒரு சுவாரஸ்யமான கதை. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கணையாழியில்(இது ஒரு சிறு பத்திரிக்கை. இலக்கிய வட்டங்களில் பிரபலம்.) எழுதிய கடைசிப் பக்கங்கள் என்ற பல்சுவைத் தொடரின் தொகுப்பை படிக்க நேர்ந்தது. கணையாழியில் அச்சுப் பிழை ஏற்படுவதை சுஜாதா அவர்கள் கேலி செய்திருப்பார். அந்தக் கேலியின் மையமே இந்த ராகம் தான். பிரபல வயலின் வித்வான் ரவி ஷங்கரின் கச்சேரியைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார் ஒரு இடத்தில். அங்கே இந்த ராகத்தைக் குறிப்பிட்டிருப்பார். அது தவறாக அச்சுப்பிழையாக "கீரகவராளி" என்று வந்திருக்கும் பதிப்பில். அடுத்த இதழில் இவர் அதனைச் சுட்டிக் காட்டி, கணையாழியின் அச்சுப் பிழையால் புதிய ராகம் பிறந்தது என்று நயமாகக் கேலி செய்திருப்பார். இந்தப் பதிவு மட்டுமல்ல, இந்த ராகத்தில் வந்த பாடல்களும் சுவாரஸ்யம் தான். ஒன்றொன்றாகப் பார்க்கலாமா.
திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு என்பது நிச்சயிக்கப் பட்ட மணங்களில் கூட நிரூபணம் ஆகும் எனச் சொல்லும் கதை. எந்த வேலைக்கும் ஒரு probationary காலம் உண்டு. அந்தக் காலத்தில் பயிற்சி கொடுக்கப்படும். வேலை செய்ய பழக்கப் படுத்தப்படும். ஒரு வேலைக்கே இப்படி என்றால், ஒரு வாழ்வுக்குத் துணை தேடும் திருமணத்துக்கு அது தேவை இல்லையா எனச் சொல்லாமல் சொல்லும் மௌன ராகம். மணிரத்னம் என்ற மௌனம் விரும்பும் மனிதன் இசைத்த அற்புத ராகம் இந்தத் திரைப்படம். எண்பதுகளின் ராஜ்யத்தில் மோகனின் ராஜாங்கம் கம்பீரமானது. கேள்விக்கு இடமில்லாதது. படங்களின் வெற்றியும் பாடல்களின் வெற்றியும் இவரது பெயரைத் தமிழ் திரை வரலாற்றில் அழுந்தப் பதித்திருக்கின்றன. பாரதிராஜா கண்டெடுத்த பல நட்சத்திரங்களில் அழகியதும் அழுத்தமானதுமான ஒன்று ரேவதி. இவர் நடிப்பு ஆற்றொழுக்கைப் போன்றது.
சரி பாடலுக்கு வருவோம். காதலித்தவன் ஒருவன், அவன் காலத்தில் கரைந்து போனான். கைப்பிடித்தவன் ஒருவன். அவன் கண்ணீரைக் கரித்தான் அவளுக்கு. மன்றத்தில் கரம் பற்றிய அவளுக்கு மஞ்சத்தில் இடமளிக்க மனம் ஒப்பவில்லை. மறைந்திருந்து வில்லேற்றிய ராமனைக் கேள்விகணை தொடுக்கும் வாலியை போல் நமது கவிஞர் வாலியும் கேட்கிறார்,
பல படியாக அந்த நிலையை வருணித்து விட்டு, அவர்கள் உறவை விமர்சித்து விட்டு கவிஞர் அந்தப் பெண்ணைக் கேட்கும் கேள்வியில் கூர்மை தான் எத்தனை? கலையின் ஓர்மை தான் எத்தனை, பாருங்களேன்.."மஞ்சம் வந்த தென்றலுக்கு, மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ"
" ...பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்", "
பாடலைத் தேனினும் இனிய தன் குரலால் தந்திருப்பவர், திரு.எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்கள். "http://www.youtube.com/watch?v=oGAY6E3arrY" காணலாம்.
முதல் பாடல் ஒட்டாத இரு மனங்களைப் பற்றியது என்றால், இரண்டாவது பாடல் நம்ப மறுக்கும் மனத்தைப் பற்றியது. ஒரு பூவின் வாசத்தைக் கலைஞன் ஒருவன் பாடுகிறான். அந்தப் பூ தனது சொந்தப் பூவோ என்று ஏங்குகிறான் தலைவன். "சொல்லத் துடிக்குது மனசு" என்று இந்தத் தலைவனின் நிலைக்கு ஏற்ப படத்துக்கு தலைப்பு. அந்தக் கலைஞனாக நடிக வேளின் மகன் ராதா ரவி. அந்தத் தலைவானாக நவரச நாயகன் கார்த்திக். இருவரும் வயதின் செழிப்பிலும் வாலிப முறுக்கிலுமாக - அழகிய காட்சி அமைப்பு. இந்தப் பாடலும் கவிஞர் வாலியின் கைப்பட்ட கவிதைப் பெண் தான். உயிர் தந்தவர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். ஒரு கலைஞனின் மனது எப்படி இருக்கும் என்பதற்கு சான்று பின் வரும் வரிகள்.
" உனைப் போல நானும் ஒரு பிள்ளை தானேபலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானேஉனைப் போல நானும் மலர் சூடும் பெண்மைவிதி என்னும் நூலில் விளையாடும் பொம்மைநான் செய்த பாவம் என்னோடு போகும்
தன் மனதில் தோன்றும் ஆயிரம் உணர்வுகளையும் ஒரு கலைஞன் மறைத்து அந்த ரசிகனுக்கு இன்பத்தைத் தரும் உன்னத உணர்வு போற்றத் தக்கதல்லவா. போற்றிக் கொண்டே பாடலை "http://www.youtube.com/watch?v=GmY1x-QkJSs" இங்கே காணுங்கள்.நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்"
முதலிரண்டு பாடல்கள் ரசிகனின் மனதில் விருந்து படைத்து விருது படைத்த பாடல்கள் என்றால், மூன்றாம் பாடல், கவிஞர் வாலி அவர்களுக்கு தேசிய விருது கிடைத்த பாடல். இசைஞானி இசையில் கலைஞானி நடிப்பில் "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் வந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் உள்ள நட்பு இந்தப் பாடலின் இசைவுக்கு சாட்சி. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கும் கமல் ஹாசன் அவர்களுக்கும் உள்ள உறவின் நீட்சி நாம் காணும் காட்சியில். இந்தக் கூட்டணி சமைத்த வெற்றிப் பாடல் ஒரு சோக கீதம். ஆனால் பாடல் வந்த விதம் ஒரு இனிய கதை. கவிஞர் வாலி, கமல் ஹாசனிடம் கொண்ட பூசலில் அவர் நொந்து எழுதிய வரிகள் இவை. கதையைக் கலைஞானி சொல்வார். "http://www.youtube.com/watch?v=jvjO7l8Dc4o&feature=related" இங்கே கேளுங்கள். கரும்பை வண்டு துளைத்த சுவாரசியக் கதை.
உருவம் குறுகிப் போன ஒரு மனிதனின் உள்ளத்தைக் குறுக வைக்கிறாள் அவள். கூத்தில் கோமாளி ஊருக்குத் - தான் அவன் நகைச்சுவை, அவனுக்கு அவனே அவலச் சுவை. இப்படி பாராத கோணத்தைச் சொன்ன அப்பு பாத்திரத்துக்கு முட்டி தேய கலை ஞானி வாழ்ந்தார் என்றால், அந்த வாழ்வின் பொருள் இந்தப் பாடலில். வரிகளைச் சொல்லத் தான் வேண்டும். அதற்கு முன் ஒரு சோக வயலின் இசையையும். பாடலின் இடையிலும் முடிவிலும் ஒரு சோக கீதம் பாடும் வயலின். அழாமல் நீங்கள் கேட்டு விட்டால், மரத்து விட்டீர்கள் என்று அர்த்தம். இனி வரிகள்,
"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்...கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்..காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்..தப்புக் கணக்கைப் போட்டுத் தொலைத்தேன்.."
நொந்த இதயம் சொல்லும் கதை இது, என் இதயம் கவர்ந்த கலை இது. "http://www.youtube.com/watch?v=lsPKJQnBqhc" கேளுங்கள்.
ஒரே ராகத்தை மூன்று இடங்களில் ராஜா இசை அமைத்து இசைஞானி என்ற பட்டத்துக்கு நியாயம் செய்கிறார். அதே ராகத்துக்கு மூன்று முத்தான பாடல்களைத் தந்து கவி ஞானியாக வாலி திகழ்கிறார். என்ன சொல்கிறீர்கள்?



No comments:
Post a Comment