சமீபத்தில் "ஹெபிமுஸ் பாபம்"(Habemus Papum)- "நமக்கு ஒரு போப் கிடைத்து விட்டார்" என்ற இத்தாலிய மொழித் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் படம் 2011-இல் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் நன்னி மோரெட்டி(Nanni Moretti).
இத்தாலி ரோம சாம்ராஜ்யத்தின் இன்றைய வடிவம் என்பதும், கத்தோலிக்கக் கிறித்தவத்தின் தலைமைப் பீடமான வாடிகன் சிட்டியின் தாயகம் என்பதும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தச் சூழலில் போப்பாண்டவரையும் கத்தோலிக்கத்தின் பழக்க வழக்கங்களையும் விமர்சித்து திரைப்படம் எடுப்பவர் இந்த இயக்குனர். பல அரசியல் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். குறிப்படத் தகுந்தவை "திருப்பலி முடிந்தது"(The Mass Ended) மற்றும் "தி கைமான்"(The Caiman) ஆகியவை ஆகும். இவற்றில் முன்னது கத்தோலிக்கத்தையும் பின்னது பின்னது அரசியலையும் கேலிக்குள்ளாக்கும் திரைப்படங்கள்.
இந்த "ஹெபிமுஸ் பாபம்" படத்தின் கதை அமைந்த சூழல் சுவாரஸ்யமானது. பதவியில் இருந்த போப் இறந்து விடுகிறார். அடுத்தவரை நியமிக்க வேண்டி வாடிகன் சிட்டியில் தேர்தல் நடை பெறுகிறது, பல கட்ட வாக்குப் பதிவுக்கு பின்னரும் கரும்புகையே எழுப்ப வேண்டிய சூழல். அதாவது போப் தேர்ந்தெடுக்கத் தேவையான ஆதரவு கிட்டாமல் போகிறது. ஒரு கட்டத்தில் பதிவிக்கான போட்டியில் இல்லாதவரான கார்டினல் மேல்வில்லே தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவரை உலகுக்கு அறிவிக்கச் சம்ப்ரதாயப் படி பசில்லிகாவின் உப்பரிகையில் தோன்றச் செய்ய வேண்டும்.
ஆனால் தேர்ந்தெடுக்கப் பட்ட மேல்வில்லேவுக்கு பதவியின் கனம், அந்தப் பொறுப்பின் சுமை, தனது தகுதி பற்றிய சந்தேகம் ஆகியவை மேலிட, மக்களைச் சந்திக்கத் தன்னால் இயலாதென்று தெரிவிக்கிறார். வெண்புகை வெளியிடப் பட்டவுடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்க, சூழலைச் சமாளிக்க வாடிகன் நிர்வாகிகள் புதிய போப் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பின்னர் மக்களைச் சந்தித்து ஆசி கூறுவார் என்றும் கூறுகின்றனர். பின்னர் மேல்வில்லேவுக்கு சிகிச்சை அளிக்க மன நல நிபுணர் ஒருவர் வரவழைக்கப் பட,பின்னர் அங்கிருந்து மேல்வில்லே காணாமல் போக, வாடிகனில் மற்ற கார்டினல்கள் அடைந்து கிடந்து பொழுதைக் கழிக்க என வேடிக்கையாக கதை நகரும். கடைசியில் மக்களைச் சந்திக்கும் மேல்வில்லே தான் அந்த மக்களுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்கத் தகுதி அற்றவர் என்று அறிவிப்பதாக அந்தக் கதை முடியும்.
இந்தத் திரைப்படத்தின் நிகழ்வுகளோடு ஒத்திசைக்கும் வண்ணமாக அண்மையில் நிகழ்ந்த போப் தேர்தல் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பின், வாழும் போப் ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய, புதியவர் தேர்ந்தெடுக்கப் படலாயிற்று. கார்டினல் ரட்ஜிங்கேர்(Cardinal Radzinger) ஆக இருந்து போப் பெனெடிக்ட்(Pope Benedict) ஆக ஆனவர் முந்தையவர். அவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். புதியவர் கார்டினல். ஜார்ஜ் மரியோ பெர்கக்லியோ(Jorg Mario Bergaglio) ஆக இருந்து போப் பிரான்சிஸ்(Pope Francis) ஆனவர். முந்தையவர் பதவியேற்ற போது இரண்டாம் ஜான் பால் என்ற வசீகரமும் நன்மதிப்பும் பெற்ற ஒரு போப்பின் இடத்தை இட்டு நிரப்பும் சவால் மட்டும் இருந்தது. பிந்தையவர் இன்னும் கடினமான சூழலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. கத்தோலிக்க குருமார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதிலிருந்து ஓரினத் திருமணம் அங்கீகரிக்கப்படுதல் வரையிலான கேள்விகள், இளம் சிறார்கள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நிர்வாகிகள் மற்றும் பாதிரிகள் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. யூத மற்றும் இசுலாமிய மதத்தவருடனான உறவு குறித்தும் சவால்கள் உள்ளன.
இந்தத் தேர்தலில் தென்னமெரிக்கத் துணைக்கண்டத்திலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டது முதன் முறை, அவர் பிரான்சிஸ் என்ற பெயர் தாங்கியது முதன் முறை, தம்மை போப் என்று விளித்துக் கொள்ளாமல் ரோமின் பேராயர் எனச் சுட்டியது முதன் முறை. எளிமை அதனினும் புதியது.
போப் மற்றும் தலாய் லாமா ஆகிய பதவிகள் சுவாரசியமானவை. மத குருவே ஆளும் அரசராகவும் விளங்கக் கூடிய பதவிகள். இவற்றைப் பற்றி யோசிக்கும் பொது அதிகாரத்திற்கும் மதங்களுக்கும் உள்ள தொடர்பை எண்ணத் தோன்றுகிறது.
அரசு அமைப்பும் மத நிறுவனங்களும் ஆரம்பம் முதலே ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றின் உந்துதலாக மற்றொன்று சேர்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. வரலாற்றில் சிலுவைப் போர்கள் தொடங்கி, இன்றைய ஜிஹாத் வரை இரு நிறுவனங்களும் ஒன்றை ஒன்று ஊக்கி தனது மேலதிகாரத்தை நிறுவப் பார்க்கும் விதம் ஒரு தொடர் நிகழ்வாக அமைந்துள்ளதைக் காணலாம்.
மனித வரலாற்றின் தொடக்க காலம் முதல் பகுத்தறிவும் நாகரிகமும் பரிணாம வளர்ச்சி அடைந்தே வந்திருக்கின்றன. குழு வாழ்க்கைச் செயல்பாடுகள் இயல்பாகவே குடும்பம், சமூகம், அதிகாரம் போன்ற கருத்தாக்கங்கள் உருவாக வழி வகுத்தன. ஒரிடத்தைச் சேர்ந்தவர்கள் ஓர் இனமாக ஆனார்கள். அந்த இனத்துக்கு ஒரு சமூக அமைப்பு ஏற்பட்டது. அந்தச் சமூகத்துக்கு சில விதிகள் ஏற்பட்டன. அந்த விதிகள் வாழ்கை முறையைக் கட்டுப்படுத்துபவையாக அமைந்தன. அந்த விதிகளை உருவாக்கவும், செயல்படுத்தவும், மீறல்களைக் கண்காணிக்கவும், அதிகாரம் ஏற்பட்டது. அந்தசமூகத்துக்கு இயற்கை மற்றும் மனிதக் காரணங்களால் ஏற்படும் இன்னல்களைக் களையும் பொறுப்பும் ஏற்பட்டது. இப்படி அதிகாரமும், கடமையும் நிறைந்த நிறுவனங்களாக அரசு அமைப்பும், மத நிறுவனங்களும் இருக்கின்றன.
இந்தத் தொடர்பின் வெளிப்படை நீட்சி போப் மற்றும் தலாய் லாமா பதவிகள். முன்னவர் வாடிகனின் தலைமை நிர்வாகி, ஆட்சித் தலைவர். பின்னவர் திபெத்திய அரசின் தலைவராகத் திகழ்ந்தவர். இப்போது நாடு கடந்த திபெத்திய அரசின் தலைமை வழிகாட்டி. கடந்த வருடத்தில் தான் ஜனநாயக ரீதியிலான அமைப்பைத் திபெத்தின் நாடு கடந்த அரசுக்கு அமைத்தார் தலாய் லாமா. அதற்கு காரணம் செஞ்சீனத்தின் அரசியல் காரணங்களே. சீனா திபெத்தியத்தை படை கொண்டு வென்ற பின் அவ்வரசோடு போராட அரசுத் தலைவர், மதத் தலைவர் என்ற இரு பொறுப்புக்கள் சுமையாய் இருப்பதை தலாய் லாமா உணர்ந்திருக்கக் கூடும். ஆகவே தான் இரு பொறுப்புக்களையும் வேறு படுத்த அவர் முனைந்தார் போலும்.
அதிகாரத்தின் இரு கூறுகளாக உள்ள அரசுகளையும் மத நிறுவனங்களையும் ஒப்பு நோக்கும் பொழுது, அரசுகள் கால நிலைக்கேற்ப கோட்பாடுகள் மாற்றப் பட்டு வந்திருக்கின்றன. திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டதாகும் என்றும் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றும் சொன்ன காலம் மறைந்து மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றாகி விட்டது. ஆனால் மத நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் மாற்றத்தைச் சந்திக்காதவை.
உதாரணமாக சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியப் பெரியோர்களுக்குப் பின் சனாதன தர்மத்தில் மிகப் பெரும் சிந்தனை மாற்றம் கொணரத் தக்க முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர் ஆகியோருக்குப் பின் சைவத்திற்கு மற்றொரு சமயக் குறவர் கிட்டவில்லை. நம்முடைய மடாதிபதிகளும் ஏனைய இந்து மதத் துறவிகளும் பாரம்பரியம் சொன்ன வழியே செல்வதே சரி என்பார்கள். ("நவீன" கார்பொரேட் சாமியார்கள் துறவிகளே அல்ல என்பது என் அபிப்ராயம்.)
மிகப் பெரிய இரு மத நிறுவனங்கள் மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. இதன் தாக்கம் என்ன என்பதை வரலாறு தீர்மானிக்கும். இத்தகைய ஒரு மறுமலர்ச்சி எல்லா மதங்களிலும் ஏற்பட்டால் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும்.