Thursday, February 7, 2013

விஸ்வரூபம் - ஒரு பார்வை

வாழ்க்கையில் எத்தனையோ செய்ய முயல்கிறோம். அத்தனையும் செய்ய முடிந்தால் மனித முயற்சிக்கு கட்டுண்ட வாழ்வு என்றாகி விடும். வள்ளுவரும் முயற்சி "திரு"வினையாக்கும் என்று சொல்லி இருக்க வேண்டியதில்லை. ஆனால் அந்தமில்லாத பேரு வெள்ளமாகிற காலத்தில், கண்காணாத வகையில், நுரைத்துப் பொங்கும் உப்புக்களும் தாதுக்களும் போல, பெருக்கினைத் தடுத்து வேகத்தினை கூட்டுவது போல, சமமில்லாத பாதையில் பாறைகளின் நகர்வில் தோன்றும் சுழிகள் போல வாழ்வும் எண்ணற்ற மறை-பொருட்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
அங்கோர் வாட் பற்றி எழுத விழைந்து ஆரம்பித்த தொடர் பாதியில் நிற்கிறது, எழுத்தின் வேகத்தை மட்டுப் படுத்திய சூழல்களை எண்ணி வியக்கிறேன். அதனை இப்பொழுது தொடரா விட்டாலும் தொடர வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தப் பதிவினை மேற்கொள்கிறேன் .


************************************************************************************
விஸ்வரூபம் - ஒரு பார்வை

அரசியல் பரமபத விளையாட்டுக்களாலும் , மதங்கள் நிறைந்த மனங்களாலும், கலை எடுக்கும் விஸ்வரூபம் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இது மனித வரலாற்றில் முதல் நிகழ்வுமல்ல. அறிவு கூட கட்டுப்படியாகததாகவே இருந்து வந்திருக்கிறது. ஒழுக்கத்தையும் நேர்மையையும் போல. அறிவின் கனி புசிக்கத் தகாததாகவே சொல்லப் பட்டிருக்கிறது.

பேதைமை சிலவிடங்களில் மனிதத்துக்கும் நம் இந்தியாவில் பெண்மைக்கும் இலக்கணமாக சொல்லப்படும் கதை புதிதல்ல. சூரியனை பூமி சுற்றுகிறது  என்று ஆய்ந்து சொன்ன கலிலியோ முரட்டு இறை சாம்ராஜ்யத்தின் சமூகத்தில் மண்டியிட வேண்டியிருந்தது. இயற்கையையும் சிறு தெய்வங்களையும் வழிபட்ட ஜிப்சீக்கள் தீயில் எரிந்து கருக வேண்டியிருந்தது. இவை மேற்கத்திய வடுக்கள் என்றால், ஆற்றில் ஏடுகளை எறிந்தே அறிவை அழித்த பெருமைத் தமிழ் சமூகத்துக்கு உள்ளது.

தஸ்லிமா நஸ்ரீன்களும் சல்மான் ருஷ்டீக்களும் சமீபத்திய உதாரணங்கள். அந்த வரிசையில் தீபா மேத்தா கழுவேற்றப் பட வேண்டிய திரைப்பட இயக்குனர் ஆனார். அவர் செய்த தவறு, சமூகத்தின் அங்கி மறைவில் இருக்கும் ஓரினச் சேர்க்கையையும் பெண்களின் மீதான வன்முறையையும் சித்தரித்தது தான். இந்தக் கதைகள் எல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால வரலாற்றில் "சகிப்புத் தன்மைக்கான" சான்றுகள்.

அந்த வரிசையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் சேர்ந்த கதை விஸ்வரூபம் வெளி வந்த கதை. அம்மாவுக்கும் அய்யாவுக்கும் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்தப் பட்ட எத்தனையோ கலைஞர்கள் தமிழகத்தில் உண்டு. ஆனால் கமலின் கதை கொஞ்சம் புதியது. காரணம் அவரது அறிவும் அணுகுமுறையும் தமிழ் சமூகத்துக்குப் புதியது. ஆகவே மையம் கொண்ட "நகைச்சுவைப் புயலை" வலுவிழக்கச் செய்ததைப் போல மய்யம் இதழ் நடத்தும் கமலை வலுவிழக்கச் செய்ய முடியவில்லை.

கூர்பட்ட பேனா முனையாகச் சமூக ஊடகங்கள்  விளங்கி, புரட்சிகளையும் மாற்றங்களையும் விதைக்கவும் வளர்க்கவும் பயன்பட்டு வருகின்றன. தீராத மன நோய் கொண்ட ஆட்சியாளர்களின் மிருகத் தனமான கட்டுப்பாடுகள் ஊடகங்கள் மற்றும் கலை வடிவங்களின் மீது ஏவப்படுவது, இந்திரா  கொணர்ந்த நெருக்கடி காலம் தொடங்கி அவதூறு வழக்குகள் ஆறாய்ப் பெருகும் இந்தக் காலம் வரை இயல்பு தான்.



********************************************************************************************
 இனி வரும் பத்திகளைப் படிக்கும் முன் விஸ்வரூபம் படத்தை திரையரங்கில் பார்த்தும்  குறைந்தது ஒரு சாண்டில்யன் புதினத்தையும் வாங்கிப் படித்தால், கமலின் வீட்டுக்கும் தமிழின் வீச்சுக்கும் வலு சேர்த்த புண்ணியம் உங்களுக்கு சேரும்.
********************************************************************************************

விஸ்வரூபம் திரைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வு சாண்டில்யன் புதினத்தைப் படித்த உணர்வு தான். ஒரு சரித்திரப் புனைவை தெள்ளு தமிழில், வரலாற்றோடு கொஞ்சம் காதல் சாகசத்தையும் கொஞ்சம் தத்துவ விசாரணையையும் விரவித் தருபவை சாண்டில்யன் படைப்புக்கள். யவனராணியும், கடல்புறாவும் தற்கால வரலாற்றில் சொல்லப் பட்டால் விஸ்வரூபத்தைக் காட்டிலும் பழிக்கவும் தடுக்கவும் பட்டிருக்கக் கூடும்.




"யாரென்று புரிகிறதா" என்ற பாடலைக் கேட்ட போதும் அந்தப் பாடல் படத்தில் வரும் காட்சியமைப்பைப் பார்த்த போதும் "ராஜ முத்திரையில்" வரும் இந்திரபானு என்ற பாத்திர அமைப்பு நினைவுக்கு வந்தது. குழந்தையைப் போலிருந்த அவன் பெரு வீரனாக மாறி சேர வீரர்களைப் பந்தாடும் காட்சி தான் இந்தப் பாடலின் காட்சி. பெண்மை ததும்பும் நாட்டியக் கலைஞன் கண நேரத்தில் கூர்வாளைப் போல் மாறும் தருணம் அது. சாண்டில்யன் வரிகள் கண் முன்னே உயிர் பெற்றதைப் போல் உணர்ந்தேன். ஒசாமா பின் லேடன்  தோன்றும் காட்சி கலிங்கத்து அனந்தவர்மனை இளையபல்லவன் சந்திக்கும் காட்சியை நினைவூட்டியது.

இப்படி காட்சிக்கு காட்சி ஒரு பிரம்மாண்ட கற்பனைப் புதினத்தைக் கண்முன்னே கொண்டு வந்த பெருமை கமல் ஒருவரையே சாரும். தன் முழுச் சொத்தையும் இந்தப் படத்தின் தரத்துக்கு ஈடு வைத்தது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

*********************************************************************************

கதையில் தோன்றுபவை உண்மையல்ல என்று இப்பொழுது தமிழகத்தில் முத்தாய்ப்பாகச் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். பல உண்மைக் கதைகளை திரையில் காட்டும் போது  இந்த உத்தியைத் தான் கையாள்வார்கள்.

"சத்தியத்தைக் கேலி செய்வதும் நிராகரிப்பதும் அகந்தை எனப்படும்" என்ற நபிகளின் வார்தைகளைச் சொல்லி, "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற சாணக்கியரின் முடிவைச் சுட்டி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.