திரைப்படம் என்ற ஊடகம் ஒரு நூற்றாண்டைக் கடந்து, அதிலும் இந்திய திரை ஊடகத் துறை சமீபத்தில் ஒரு நூற்றாண்டைக் கடந்தது. இந்தியர்களின் வாழ்வில் இந்தத் திரைத்துறை இரண்டறக் கலந்தது. குறிப்பாக தமிழகத்தில் திரைத் துறையும் அரசியலும் அண்ணாவின் "இரட்டைக்குழல் துப்பாக்கி" உவமானத்தைப் போன்றவை. கோட்டைக்கு வழி கோடம்பாக்கமாக மாறி அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. இயல்(Literature), இசை(Music), நாடகம்(Theatre) என முத்தமிழையும் அடக்கிய ஒன்றாகவே தமிழ் திரை வளர்ந்தது. எத்தனை எத்தனையோ உள்ளங்கள் இவற்றால் கவரப் பட்டிருக்கின்றன. என்னைக் கவர்ந்த சில பாடல்கள், இந்த முத்தமிழையும் விரவிக் கொடுத்த சில திரைத் துளிகளை என் பார்வையில் உங்களுக்கு காட்சிப் படுத்த விரும்புகிறேன். சிலருக்குப் பிடிக்கலாம் பலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். என்னைப் பொறுத்த வரை நான் ரசிக்கும் சில இவை.
1. தமிழ்த் திரையில் சில "Made for Each Other" இணைகள் ஒவ்வொரு காலத்திலும் இருந்திருக்கின்றன. அவற்றில் சிவாஜி-பத்மினி, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, சூர்யா-ஜ்யோதிகா என்ற வரிசையில் விட்டுப் போனதும் மிக சுவாரஸ்யமானதுமான ஜோடி கமல்-ஸ்ரீ தேவி. இருவருமே child prodigy தான். குழந்தை நட்சத்திரமாக இருந்து, பின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் மீள் அறிமுகம் செய்த இரு வெள்ளித்திரை நட்சத்திரங்கள் இவர்கள். எத்தனையோ வெற்றிப் படங்கள். எத்தனையோ வெற்றிப் பாடல்கள். அதில் ஒன்று தான் "மீண்டும் கோகிலா" என்ற திரைப் படத்தில் "சின்னஞ்சிறு வயதில்" என்ற பாடல். தாம்பத்தியத்தின் சிறு ஊடல்களும், மனித உள்ளத்தில் எழும் சில கீறல்களுமாகச் சொல்லப் பட்ட கதை இது. செவ்வியலிசையையும், நாட்டுப்புறப் பாடல்களையும், மேற்கத்திய பாணியையும் தமிழ்த் திரையில் சரளமாகவும் சரி-விகிதத்திலும் பயன்படுத்திய இளையராஜா என்ற இசைஞானி "ஆபேரி" ராகத்தில் அமைத்த பாடல். பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே..." என்ற கண்ணம்மாப் பாடலைத் தழுவி, கவியரசு கண்ணதாசன் தனியரசு சமைத்த பாடல். கான கந்தர்வன் யேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.ஷைலஜா அவர்களும் பாடிய பாடல்.
எனது தலைமுறை அறியாத, என் பெற்றோர் தலைமுறை வரை இருந்த பெண் பார்க்கும் படலம் தான் இந்தப் பாடலின் களம். பாடலைத் தனியே கேட்டுப் பார்த்தால் இரு காதல் உள்ளங்களின் வெளிப்பாடாகவே தோன்றும். இரு வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
"சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்...உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்... ஊமையைப் போலிருந்தேன்... "
என்று அந்தப் பெண் பாடுகிறாள். சிறு மௌனம். அவள் ஊமையாய் இருந்ததற்கான அடையாளம் அது. அவனது காதல்-அவளது மௌனம் என்று சுவையான செய்தி சொல்லப் படுகிறது. ஆனால் காட்சியில் பார்த்தால், பாடல் அவளுக்கு மறந்து போனதாக அமைக்கப் பட்டிருக்கும். கவியரசு வரிகளக்கு ஒரு பொருளும், இடம் சுட்டியதால் திரையில் உரு-பொருளுமாக அற்புதமான படைப்பு. அதே போல், பாடலின் முடிவில், அவன் பாடுகிறான்,
" காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்மோதும் விரகத்திலே, செல்லம்மா ம்ம்ஹம்ம்.."
அவனது மனத்தின் அலை ஓசைகள் பதிவு செய்யப் படுகின்றன வரிகளில். ஆனால் காட்சியில், குழந்தை ஒன்று அவன் மடியில் செய்த குறும்பாகப் பதிவு. இங்கும் கருவும் உருவும் மாறி ஒரு ஜால வித்தையை செய்யும். பாடலைத் தனியே "https://www.youtube.com/watch?v=x45kYpUh98w" என்ற பதிவிலும், காட்சியோடு "http://www.youtube.com/watch?v=t09r97wbLMg" -விலும் காணலாம்.
2. ரத்த உறவுகளுக்குத் தமிழகத்தில் எப்பொழுதுமே பல சிறப்புகள். அண்ணன்-தங்கைப் பாசம் தமிழ்த் திரைக்குப் புதிதும் அல்ல. புளித்துப் போகும் அளவுக்குப் பதிவு செய்யப் பட்ட உறவு அது. ஆனாலும் அண்ணன்மார்களுக்குத் தங்கைகள் எப்பொழுதுமே புளித்துப் போவதில்லை. அப்படிப் புளிக்காமல் இன்றளவும் இனிக்கும் ஒரு பாடல், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சிகரமான "மேஜர் சந்திரகாந்த்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு நாள் யாரோ" என்ற அந்தப் பாடல். காதலை மறைக்கும் தங்கையும், ஏமாறும் அப்பாவி அண்ணனும் புதிய பாத்திரங்களும் அல்ல. அவர்களது அன்பிலும் புதிய சேதி ஒன்றுமில்லை. ஆனால் அது சித்தரிக்கப் பட்டிருக்கும் விதம் அலாதியானது. தங்கை வானொலியில் பாடிய பாடலைக் கேட்க வாடகை வானொலி வாங்குகிறான் அண்ணன். அக்கம்- பக்கத்தவரையும் அழைக்கிறான். வானொலி சமயத்தில் காலை வார- நிலைமையைப் பாடியே சமாளிக்கப் பார்க்கிறார்கள் இருவரும். துணைக்கு அண்ணனின் கடைப் பையன். செல்வி. ஜெயலலிதா தங்கையாகவும், மறைந்த நகைச்சுவைத் தென்றல் நாகேஷ் அண்ணனாகவும் நடித்திருப்பார்கள். கே.பாலச்சந்தரின் அறிமுகங்களின் ஒருவரான திரு. வி. குமார் அவர்களின் இசையில், "பேஹக்" ராகத்தில் அமைந்த ஒலிச் சித்திரம் அந்தப் பாடல். கவிஞர்.வாலி அவர்கள் கதையைக் கவிதையாக்கி இருப்பார். அந்தக் கவிதைக்கு பி. சுசீலா அவர்கள் உயிர் கொடுத்து உள்ளத்திலே நிறுத்தியிருக்கிறார்கள்.
பாடலின் முதல் சரணத்தில், "நில்லடி என்றது நாணம் -விட்டுச்
செல்லடி என்றது ஆசை"
என்று தன் உள்ளக் கிடக்கையை வெளியிடும் தங்கை, அண்ணனிடம் நம் கனவுகளையும் அனுபவங்களையும் மறைக்கிறோமே என்ற பதைப்பில்,
"செக்கச் சிவந்தன விழிகள் - கொஞ்சம்வெளுத்தன செந்நிற இதழ்கள்இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்"
என்று புலம்புவாள். உணர்வுகளைக் குரலில் ஏற்றி முதல் சரணத்துக்கும் இரண்டாம் சரணத்துக்கும் வேறுபாடு காட்டும் சுசீலா அவர்களின் குரலும் ஜெயலலிதா அவர்களின் முக பாவனைகளும் வரப் போகும் நிகழ்வுகளுக்கு ஒரு முன்னறிவிப்பு. இதற்கு மட்டுமல்ல, இந்தப் பாடலில் வரும் ஒலிகள் எல்லாமே நாகேஷ் அவர்கள் முயன்று உருவாக்கியவை. அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டே இந்தப் பாடலை "https://www.youtube.com/watch?v=KEgGwyE2Xn8" என்ற பதிவில் காணலாம்.
- தொடரும்...


No comments:
Post a Comment