ஒன்றை ஒன்று விழுங்கக் காத்திருக்கும் தேசங்கள், உள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப் பரப்பின் அரசியல் ஊடு பாவல்கள் விநோதமானவை. ஆனால் ஒரே விதமான பிரச்னைகள். ஒரே விதமான பார்வைகள். ஒரே விதமான சாயம் பூசுதல்கள். பெண்களின் சமநிலையைக் கேள்விக்குறியாக பாவிப்பதிலிருந்து, இறுக்கமான சமூக அமைப்புகள் வரை ஒன்றை ஒன்று அச்சில் வார்த்த பிரதிபிம்பங்கள் தான் இந்தத் தேசங்கள். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான உறவு காந்தத்தின் பிளவு போல. பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் அதே உறவுமுறை தான். இந்தியாவும் வங்கதேசமும் கட்டாயக் கூட்டணி உறவு கொண்டவை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள உறவு திருமணத்துக்குப் பிந்தைய காதல் விவகாரம் போல, இந்தியாவால் விட்டுக் கொடுக்கவும் முடியாது. வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் முடியாது. இவற்றை எல்லாம் ஒரே புள்ளியில் எடை போடக் கூடிய சமீபத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன்.
ஹினா ரப்பானி க்ஹெர் - பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர். இரு குழந்தைகளின் தாய். அவருக்கும் அந்நாட்டின் அதிபர் மகனுக்கும் உறவு சொல்லி அழைத்தது வங்கதேசத்தின் ஒரு நாளிதழ். உடனே நமது இந்தியப் பத்திரிக்கைகள் எல்லாம், நாட்டின் மிக முக்கியமான பிரச்னையாக அதனைக் கருதி எழுத ஆரமிபித்திருக்கின்றன. இதிலே முற்போக்கானவை என்றும் மேம்பட்டவை என்றும் தமக்குத் தாமே சான்றிதழ் கொடுக்கும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தான் முன்னணியில் நிற்கின்றன. ஆயிரமாயிரம் வெளியுறவு சார்ந்த பிரச்னைகள் இருக்கும் போதே அவருடைய நடையையும் உடையையும் பற்றி எழுதி போகும் இடத்துக்கு புண்ணியம் சேர்த்த நமது பத்திரிக்கைகள் இதனை எழுதுவது என்ன ஆச்சர்யம்.இதிலே என்ன குரூர நகைச்சுவை என்றால் இந்த விவகாரத்திற்காக அந்தப் பெண்ணின் மீது பத்வா பிறப்பிக்கப் போவதாக பாகிஸ்தானின் அடிப்படைவாதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். நாள்தோறும் பத்து உயிர்கள் மதத்தின் பெயரால் பாகிஸ்தானில் பறிக்கப் படுவதை எதிர்த்து பத்வா பிறப்பிக்க ஒரு மதகுருவுக்கும் அங்கே தோன்றவில்லை.
இங்கு மட்டுமல்ல. தமிழகத்தின் முதல்வர் இலங்கைக்கு எதிராக பல கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக இலங்கை தமிழகத்தை ஏதோ மிட்டாய்க்கழும் பிள்ளை போல் நடத்தத் தொடங்கியதை சுட்டும் வகையிலும் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்த்தும் வகையிலும் செயல்பட்ட போது மிக எளிதாக இலங்கை ஊடகங்கள் அவரது பெண் என்ற நிலையைத் தான் விமர்சித்தன. அவ்வளவு ஏன்? தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வரை விமர்சிப்பவர்கள் எல்லாம் அந்தப் பாலின அடையாளத்தையே விமர்சிக்கின்றனர்.
மற்றவர்களைப் பற்றி சொல்லும் போது தமிழகத்தின் பெருமைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. தி.மு.கவின் பேச்சாளர்கள் முதல்வரின் பெண்மை பற்றி பேசாமல் இருந்தால் அவர்களுக்கு கொள்கை பரப்பவே முடியாது. அதே போல தமிழினப் பெருமை காக்கும் இயக்கங்களுக்கெல்லாம் எல்லாப் பிரச்னைகளிலும் பாரிய பிரச்னை நடிகைகளின் ஆடையும், அவர்களது பேட்டிகளும் தான். இவை எல்லாம் அரசியலின் கோர முகங்கள் என்று மட்டும் விலக்கிவிட முடியவில்லை. எத்தனை எத்தனையோ வேற்றுமைகளும் பிரிவினைகளும் இருந்தாலும் பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடும் பொது நமது துணைக்கண்டம் அவர்களை அளக்கப் பயன்படுத்துவது பாலின அளவுகோல் தான். அவர்களை விமர்சிக்கப் புகுமுன் அவர்களது தனிப்பட்ட வாழ்கை பற்றிய கேவலமான இடைச்செருகலைத் தான் முக்கியப்படுத்துகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல நமது துனைக்கண்டதுக்கே இந்த விஷயத்தில் வேற்றுமையில் ஒற்றுமை.
No comments:
Post a Comment