Monday, July 30, 2012

நான் ரசித்த சில .. 6

 தற்போதைய இந்திய அரசு பல உரிமை தரும் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. அதில் சொல்லாததைச் செய்த சொக்கத் தங்கமாக ரயில்வே விபத்துக்களை நமது பிறப்புரிமை ஆக்கி மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது. அந்தச் சாதனையின் சிறந்த விளைவாக தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் தீப்பற்றி சுமார் 32  பேரை பலி வாங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். எதனை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும் ரயில்வேத் துறை மற்றும் இந்திய அரசின் இந்தச் சாதனையை ரசிக்காமல் போற்றாமல் இருக்க முடியாது.

விபத்துக்கள் நமது பிறப்புரிமை



இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து விட்டதற்கு பல்வேறு உதாரணங்கள். வருடந்தோறும் தீவிபத்துக்கள், தீவிரவாதத் தாக்குதல், இயற்கைச் சீற்றத்தில் செயல்படாதிருத்தல், நோய்த்தொற்றுக்கள் போன்ற சிறந்த பல வழிகளின் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நமது அரசுகள் கையாளும் வழிமுறைகள் வித விதமானவை. உலகிலேயே நான்காவது பெரிய தொடர்வண்டி இணையமான நமது பெருமை மிகு இந்திய ரயில்வே நிர்வாகத்தின் சேவை இந்த விதத்தில் அளப்பரியது.  இன்னவிதமென்று இல்லாமல் எல்லா விதத்திலும் பாதுகாப்பை அலட்சியம் செய்து நமது பெருமை மிகு துறையாக அது விளங்கி வருகிறது. 

இந்த அலட்சியத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சராசரியாக நூறு பேர் வரை விபத்துக்களில் கொன்று புண்ணியம் கட்டிக் கொள்கிறது நமது ரயில்வே நிர்வாகம். வேடிக்கை என்னவென்றால் 2011 -2012  ஆம் ஆண்டைய நிதி நிலை அறிக்கையின் முக்கிய குறிக்கோளே பாதுகாப்புத் தான். கடந்த மூன்றாண்டுகளில் பதினையாயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்புக்காக செலவிடப் பட்டுள்ளதாக நமது ரயில்வே அமைச்சகம் தெரிவிக்கிறது. அந்தப் பணமெல்லாம் எங்கே போகிறதோ தெரியவில்லை. கோத்ரா கலவரங்களுக்கு காரணமும் இதே போன்ற தீவிபத்தே. இப்படி எத்தனை நிகழ்ந்தாலும் எதையும் தாங்கும் இதயமாக, நெஞ்சம் இனித்துக் கிடக்கும் துறை நமது ரயில்வேத் துறை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த பின், இந்தத் துறையை அலங்கரித்த கொலு பொம்மைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் நமது மாட்டுதீவனப் புகழ் லாலூஜி. இவர் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிர்வாகத்துக்காக பல நிர்வாகவியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவரைத் தமது சிறப்பு விருந்தினராக அழைத்தன. இவர் என்ன செய்தார்? ரயில்வே நிர்வாகத்தின் வருவாயை பயணிகள் கட்டணத்தைக் கூட்டாமலேயே அதிகரித்தார். ஆனால் பாதுகாப்பை உதாசீனம் செய்தார். பயணிகள் அதிகரிப்பை ஈடு கட்ட அவர் புதிய ரயில்களை உருவாக்கவில்லை. மாறாக பக்க இருக்கைகளில் மத்திய படுக்கைகளை அமைத்து மக்களை வதைத்தார். இந்த முயற்சி பின்வாங்கப்பட்டாலும் நேற்றைய விபத்தில் பயணிகள் தப்பிக்கத் தடையாக இருந்தவற்றில் இந்த அமைப்பும் ஒரு காரணம். பீகாரைப் பின்னேற்றிய இந்தச் சரித்திர நாயகன் கரங்களில் இந்த மரணங்களின் கறையும் இருக்கிறது.  

2009 -இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த நமது மௌன குரு மன்மோகன் சிங் அவர்கள் மேற்கு வங்கத்தின் விடிவெள்ளியை நமது ரயில்வேத் துறைக்கு அமைச்சராக்கி நன்றி பாராட்டினார். அம்மணி ரயில்வேத் துறையைத் தனது தாய் வீட்டுச் சொத்தாகவே எண்ணினார். தனது புகழைப் பரப்பும் கருவியாக அதனை இயக்கினார். எடுத்த விழாக்கள் எத்தனை. வங்கத்துக்கு விடுத்த புதிய தடங்கள் தான் எத்தனை. தனது அதீத மக்கள் நலப் பொருளாதாரக் கொள்கைகளை நிலைநாட்டி பல விபத்துக்களைக் கையாண்ட அற்புத மந்திரி இந்த வங்கத்து ராஜ தந்திரி. பல விபத்துக்களைக் கண்ட பின்பும் அஞ்சாமல் ஒரு பாதுகாப்பு நடவடக்கையும் எடுக்காமல் கண் துஞ்சாது மேற்கு வங்கத் தேர்தல்களை நோக்கியே பயணித்த ரயில் ஓட்டுனர் நமது தீதி மம்தா. 

மேற்கு வங்க முதல்வரானார் நமது தீதி. பின்னராவது ரயில்-பவன் விடுபட்டதா? ரைட்டர்ஸ் பில்டிங்-இன் துணை அலுவலகமானது தான் மிச்சம். கொஞ்சம் சிந்தித்து ஒரு ரயில்வே நிதி நிலை அறிக்கையை அளித்தார் தினேஷ் திரிவேதி. வந்ததே தீதிக்கு கோபம். என்ன எனது கட்சியில் யோசனையுள்ள மந்திரியா? விட்டேனா பார் என்று மௌனகுருவை உலுக்கினார். சொக்கத் தங்கம் சோனியாவும் சம்மதிக்க, வந்தார் நமது முகுல் ராய். முகுல் ராய் தெளிவானவர். தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதி மிக்கவர். தீதி இட்ட கோட்டைத் தாண்டாத அன்புச் சகோதரர். பாதுகாப்பே தனது இலட்சியமென்று நேற்று கூட அறிவித்திருக்கிறார். அதனால் என்ன... லட்சியம் இருக்கிறது.. அடைந்தே தீருவது என்பது அவசியமா என்ன?

 நாற்காலியை விடாத நவாபான நமது மௌனகுருவின், அரசு எந்தத் துறையில் தான் சாதனை புரியவில்லை. பேசாமல் விபத்து நிவாரணம் என்று ஒரு செலவினத்தை ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி விட்டால் தொந்தரவே இல்லை. விவசாயத்தையும் கெடுத்து ஊழலையும் பெருக்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மாதிரி இந்த இரு இலக்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தட்டும் நமது மைய அரசு. என்ன சொல்கிறீர்கள்? 

No comments:

Post a Comment