Tuesday, April 2, 2013

எண்ணித் துணிக....

             "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
              வியந்தான் விரைந்து கெடும்"

என்ற குறளில் நிலைமைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாதவன், தனது எதிரியின் பலமறியாது தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவன் விரைந்து அழிவான் என்கிறார் வள்ளுவர். இதன் மறு வாசிப்பாக மாற்றாரை மிக வலிமையானவராகத் தவறாக மதிப்பிட்டும் / தன்னைச் சிறுமைப்படுத்தி எண்ணிக் கொள்வதும் அழிவுக்கே வழி கோலும். இதனை இந்திய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

1971-இல் திருமதி இந்திரா காந்தி அவர்களால் பாகிஸ்தானை வலுவிழக்கச் செய்து, சாதுர்யமாக வங்க தேசத்தை உருவாக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் அப்பொழுது இந்தியா வல்லரசாக இருந்ததா என்ன? அப்பொழுதும் ஒரு மூன்றாம் உலகக் குடியரசாக, வளரும் தேசமாகவே இருந்தது. ஆனால் உறுதியான உள்ளம் படைத்த ஆட்சியாளர் இருந்தார். எந்த நிலைமையையும் இந்தியாவின் பக்கம் திருப்பும் சாதுர்யம் இருந்ததாக அவர் நம்பினார், செய்து காட்டினார். 


அன்றைய இந்தியாவை விட இன்றைக்கு பன்மடங்கு பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு இருக்கிறது. அன்றை விட தொழில் நுட்பத்திலும், மதி நுட்பத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு ஒரு பலகீனமான நாடாக யார் வேண்டுமானாலும் எளிதில் மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்ற தோற்றத்தைத் தரும் நாடாக என் இருக்கிறோம்?


உதாரணமாக சீனா அருணாச்சலத்தைத் தனது என்று சொல்லும் போது, அவர்களோடு பேசித் தான் தீர்ப்போம் இதனை என்று அரசு சொல்கிறது. தனது இறையாண்மையை சந்தேகிக்கும்/ தனது எல்லையை அபகரிக்கும் ஒரு அண்டை நாட்டைக் கண்டிப்பதில் கூடத் தயக்கம்.

தனது நாட்டின் குடியரசின் கோயிலான பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிக்கு மரண தந்தையை நிறைவேற்றுவதைக் கண்டிக்கும், தனது வீரர்களைத் தலை துண்டித்தும், விளையாட்டுத் திடலில் ஆயுதமின்றி கொலை செய்யும் நாட்டின் அதிபருக்கு வயிறு நிறைய விருந்து கொடுத்து அனுப்புகிறோம். பொருளாதார ரீதியில் அவர்களது நாட்டுக்கு பல சலுகைகளை அளிக்கிறோம்.


தனது மாநிலங்களில் பலவற்றை விட சிறியதான மிகச் சிறிய அண்டை நாடு இலங்கை, இனப் படுகொலையிலும், தனது நாட்டு மீனவர்களிடம் தகாத முறையில் வன்முறையோடு நடக்கும் போதும் கொதித்தெழாமல் மற்ற அண்டை நாடுகளோடு சேர்ந்து விட்டால் ஆபத்து என்று அஞ்சி அந்நாட்டை நட்பு நாடு என்று கூறுவதும் வெட்ககரமான செயல் அல்லவா...
             
             "நெஞ்சிலே உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
              வஞ்சனை செய்வாரடி, அவர் வாய் சொல்லில் வீரரடி
"


- என்று எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதி நடிப்புச் சுதேசிகளைச் சாடியது இத்தகையோரைத் தான் போலும்.

ஒரு நாடு தன் நலன்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் மிகச் சிறந்த உதாரணங்கள். எந்தச் செயலைச் செய்தாலும் எந்த நாட்டை ஆதரித்தாலும் தனக்கென்ன பலன் என்று பார்த்து பார்த்து தேர்ந்து செயல் படுபவை இத்தேசங்கள். ஆயுத வியாபாரம் நடக்க போரைக் கிளப்புவதும், அந்தப் போரில் வெற்றி பெற ஒரு தரப்பை ஆதரிப்பதும், அதன் பின்விளைவாக ஏதேனும் ஏற்பட்டால் யாரை ஆதரித்தார்களோ அவர்களையே ஏய்த்து மீண்டும் தாக்கி அழிப்பதும், இத்தகைய பல நடவடிக்கைகள் மூலம் இயற்கை வளங்கள், அரசியல் தலைமை போன்ற பல ஆதாயங்களை அடைவதையும் காண்கிறோம்.




நியாவாதம் என்னும் அளவு கோல் கொண்டு பார்த்தல் இவை எல்லாமே அநீதியாகவும் சுயநலம் மிக்கதாகவும் தோன்றும். சாணக்யன் அரசனுக்குரிய இலக்கணங்களைச் சொல்லும் பொது, "அதிக நேர்மையாளனாக இருப்பது அரசியலில் உதவாது. நேரான மரங்கள் எளிதில் வெட்டப் படுகின்றன. நல்லவர்களும் எளிதில் தோற்கடிக்கப் படுகிறார்கள்." என்கிறார், மற்றொரு தருணத்தில், "நாகம் நஞ்சு இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் சீறத் தெரியாமல் இருக்கக் கூடாது என்கிறார்". சுருங்கக் கூறின், மற்ற தேசங்களை ஏய்த்துப் பிழைக்க வேண்டாம் தான், அதற்காக மற்ற தேசங்கள் ஏய்க்கும் அளவுக்கு ஏமாளியாக இருக்க வேண்டாம்.
இந்தியா ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்க தன்னைத் தானே வேட்பாளராக நியமித்துக் கொண்ட நாடுகளில் ஒன்று என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் விமர்சித்ததாக விக்கி லீக்ஸ் செய்தி வெளியிட்டது. அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று நிரூபிப்பதைப் போலவே இருக்கிறது நமது செயல்பாடுகள். வீடோ அதிகாரம் கொண்ட அந்த நாடுகளையும் நம்மையும் கொஞ்சம் ஒப்பு நோக்கலாம். உண்மை புரியும்.

1. அமெரிக்கா - உலகின் அறிவிக்கப் படாத சட்டாம் பிள்ளை. பேரரசுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் ஆளுமையுடன் கைக்கொண்டுள்ள தேசம்.

2. பிரிட்டன் - ஐக்கிய சாம்ராஜ்யம் என்ற அடைமொழியுடன் 16 இறையாண்மை மிக்க தேசங்களை அடக்கிய கூடத்தின் ராணி இந்தத் தேசம். பல்வேறு சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கூட்டாளி.

3. ரஷ்யா - பனிப்போர் என்ற நிழல் யுத்தத்தில் பாதிக்கப் பட்டும், ஐக்கிய சோவியத் என்ற அகண்ட சாம்ராஜ்யம் குறுகி பாதி அளவான பின்னும், ஐ.நா சபை உறுப்பினர் எனத் தகுதி கொண்ட நாடு.

4. பிரான்ஸ் - உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் பிரெஞ்சு தேசத்தது. சர்வதேச நிதியத்தைத் தன் ராணுவ, கட்டமைப்பு வசதிகளுக்குப் பயன்படுத்தும் நாடு.

5. சீனா - இந்தியாவுக்குக் கிடைக்க இருந்த நிரந்தர உறுப்பினர் பதவியை ஜவஹர்லால் நேரு தம்முடைய "பெரும்போக்கு மற்றும் உதார குணம்" ஆகியவற்றால் விட்டுக் கொடுத்த இடத்தைப் பிடித்து, அவருக்கே 1962-இல் பாடம் கற்றுக் கொடுத்தும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இந்தியாவை எதிர்க்க ஆக்கமும் ஊக்கமும் அன்றி பொருள் மற்றும் நிதி உதவி செய்யும் நாடு. அண்டைத் தேசங்கள் அத்தனையையும் விழுங்கி, அமெரிக்காவுக்கு சவால் விடத் துடிக்கும் நாடு.

இந்தத் தேசங்களின் இடத்தில் நாம் நிற்க வேண்டும் என விளையலாம். ஆனால் அதற்கு தகுதி உடையவர்களாக ஆவது எப்படி? பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர். இந்திய அரசின் காரியங்கள் தான் எதிர் பார்க்கும் பெருமைக்கு ஏற்ப இல்லை. எண்ணித் துணியாத செயல்கள் இழுக்கைத் தேடித் தரும்.





No comments:

Post a Comment